அதிக எம்பி சீட் கேட்கும் விசிக, CPM, CPI…திமுகவின் நாடகமா?… அதிர்ச்சியில் காங்.!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2023, 7:15 pm

2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க திமுக இப்போதே தீவிரமாக களம் இறங்கிவிட்டது என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பாடுகளை வைத்தே புரிந்து கொள்ள முடிகிறது. தமிழகம் முழுவதும் திமுக சார்பில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணிகளுக்கு அவர் தயார் படுத்தியும் விட்டார்.

திமுக திரைமறைவு பேச்சு

அதேநேரம் தங்கள் கூட்டணிக்குள் டாக்டர் ராமதாஸின் பாமகவையும், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தையும் கொண்டு வருவதற்காக திரைமறைவு பேச்சு வார்த்தைகளை திமுக தொடங்கியும் உள்ளது.

இதில் கமல் கட்சியை வளைப்பது ஒன்றும் திமுகவுக்கு பெரிய விஷயமே இல்லை. அவருக்கு தேவை கோவை தொகுதி மட்டுமே. அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டால், கமல் திருப்தி அடைந்து உடனடியாக திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, பொன்னாடை போர்த்தி தேர்தல் வேலைகளில் முன்பை விட சுறுசுறுப்பாக இறங்கியும் விடுவார்.

ஆனால் அவரை காங்கிரஸ் பட்டியலில் சேர்த்துவிட்டால் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவேண்டிய தொகுதிகளில் ஒன்று குறையுமே என திமுக கணக்கு போடுகிறது.
அதேநேரம் பாமகவை தங்களின் கூட்டணிக்குள் இழுப்பதன் மூலம் வட மாவட்டங்களில் 15 தொகுதிகளை எளிதாக கைப்பற்றலாம் என்று ஸ்டாலின் நம்புகிறார்.

விசிகவுக்கு சமாதானப் புறா

இதனால் பாமக உடனான பேச்சுவார்த்தைக்குத்தான் திமுக தலைமை முன்னுரிமை கொடுத்து வருகிறது. அதேநேரம் பாஜக, பாமக இருக்கும் அணியில் விசிக ஒருபோதும் இடம்பெறாது என்று திருமாவளவன் தொடர்ந்து பேசி வருவதால் அவரையும் சமாதானப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலையும் அறிவாலயத்திற்கு உள்ளது.

என்றாலும் கூட எப்படியும் திருமாவளவனை சரிக்கட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் பாமகவுடன் கூட்டணிப் பேச்சை திமுக தொடர்ந்து முன்னெடுத்தும் வருகிறது.

குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்

இந்த நிலையில்தான் திமுகவின் கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி மூன்றும் இப்போதே திமுக தலைமைக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக கடந்த தேர்தலில் போட்டியிட்டதை விட தங்கள் கட்சிகளுக்கு கூடுதலாக ஒரு எம்பி சீட் வேண்டும் என்று திடீரென போர்க்கொடி உயர்த்தி உள்ளன.

2019 தேர்தலில் விசிக, விழுப்புரம், சிதம்பரம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது. விழுப்புரத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் திமுகவின் தேர்தல் சின்னத்திலேயே நிறுத்தப்பட்டார். இந்தக் கணக்கின்படி பார்த்தால் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி ஒன்று மட்டுமே.

அடம் பிடிக்கும் விசிக

ஆனால் 2024 தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளை தவிர்த்து
மூன்றாவதாக திருவள்ளூர் தொகுதியையும் கேட்டு திமுகவிடம் விசிக அடம் பிடித்து வருகிறது. இந்த தொகுதி சென்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதாகும்.

அதேபோல திமுக கூட்டணியில் நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதிகளை வென்ற இந்திய கம்யூனிஸ்ட் தற்போது தங்களுக்கு விருதுநகரையும் ஒதுக்கி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. அதாவது கடந்த தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கிய தொகுதிகளை விட கூடுதலாக ஒரு எம்பி சீட் தாருங்கள் என இந்திய கம்யூனிஸ்ட் மல்லுக்கட்டுகிறது.

வைகோ கோரிக்கை

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இதே விருதுநகர் தொகுதியைத்தான் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது மகன் துரை வைகோவுக்கு தரவேண்டும், நாங்கள் முன்பு வென்ற ஈரோடு தொகுதியில் வேண்டுமானால் திமுக தனது வேட்பாளரை நிறுத்திக் கொள்ளலாம் என்று பேரம் பேசி வருகிறார்.

அதேபோல கோவை, மதுரை தொகுதிகளில் 2019ல் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் தற்போது கரூர் அல்லது திருச்சி தொகுதிகளில் ஏதாவது ஒன்றை கூடுதலாக ஒதுக்கவேண்டும் என்று திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது, என்கிறார்கள்.

இந்த நான்கு கட்சிகளும் ஒரே நேரத்தில் காங்கிரஸ் தொகுதிகளை குறி வைத்து தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என்று திடீரென கோரிக்கை விடுப்பதுதான், தமிழக அரசியல் வட்டாரத்தை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. காங்கிரசுக்கும் இது அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

தமிழக காங்கிரஸ் சந்தேகம்

அதுவும் தமிழகத்தில் 2009 தேர்தல் போல15 தொகுதிகளை திமுக ஒதுக்கி தரவேண்டும் என்று டெல்லி காங்கிரஸ் தலைமை மிகவும் உறுதியாக இருக்கும் நிலையில் விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள் அதற்கு வேட்டு வைப்பதுபோல
தங்கள் எல்லைக்குள் ஊடுருவுவதை அக்கட்சி சிறிதும் ரசிக்கவில்லை.

இன்னொரு பக்கம், இது தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு ஒரு பெரிய சந்தேகத்தையும் கிளப்பி விட்டிருக்கிறது.

அவர்களில் பெயர் வெளியிட விரும்பாத சிலர் கூறும்போது, “தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 2024 தேர்தலில் தேசிய அளவில் திமுகவை பிரதான கட்சிகளில் ஒன்றாக மாற்ற விரும்புகிறார். அதில் எந்த தவறும் கிடையாது. அது அவருடைய சாமர்த்தியம்.

ஆனால் அதற்காக தமிழகத்தில் காங்கிரசை பலவீனப்படுத்தும் முயற்சியில் திமுக இறங்கி இருக்கிறதோ என்ற அச்சம் எங்களுக்கு வருகிறது.

ஏனென்றால் 2019 தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதைப் போல தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளை திமுக தலைமை ஒதுக்காது, அதிகபட்சமாக ஐந்து அல்லது ஆறு தொகுதிகள் கொடுத்தாலே பெரிய விஷயம் என்று கடந்த ஒரு ஆண்டாகவே
திமுக தரப்பில் பேசப்பட்டு வருகிறது.

அமைச்சர் உதயநிதியின் பிளான்

குறிப்பாக திமுகவின் இளைஞர் அணியினர் இதில் மிக உறுதியாக இருக்கிறார்கள். இதற்கு ஒரு காரணமும் உண்டு. தனது அணியை சேர்ந்தவர்கள் அதிக அளவில் எம்பிக்களாக வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி நினைக்கிறார்.

இந்த இளைஞர் அணியினர்தான், தமிழகத்தில் காங்கிரசுக்கு பெரிதாக எந்த செல்வாக்கும் கிடையாது. தேசியக் கட்சி என்பதன் அடிப்படையில் தென் மாவட்டங்களில் ஒரு சில தொகுதிகளில்தான் காங்கிரஸ் ஓரளவு வலுவாக உள்ளது. மாநிலத்தின் மற்ற பகுதிகளில் சீரான வாக்கு வங்கி 20, 25 வருடங்களுக்கு முன்பிருந்ததுபோல அக்கட்சிக்கு இப்போது இல்லை. அதனால் காங்கிரசுக்கு ஐந்து தொகுதிகளே அதிகம் என்று அவர்கள் வெளிப்படையாக பேசுவதையும் கேட்க முடிகிறது.

ஒத்தூதும் காங்., தலைவர்கள்!!

ஆனால் திமுகவின் மூத்த நிர்வாகிகளிடமோ காங்கிரசுக்கு 12 தொகுதிகள் வரை கொடுக்கலாம் என்ற எண்ணம் உள்ளது.

இப்படியொரு மோசமான நிலைமை ஏற்பட்டதற்கு காரணமே தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர் மற்றும் பீட்டர் அல்போன்ஸ், செல்வப் பெருந்தகை போன்றவர்கள்தான். திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் நலத்திட்டங்களை ஆதரித்துப் பேசும்போது இவர்கள் திமுக தலைவர்கள் போலவே மாறி புகழ்ந்து தள்ளுகின்றனர்.

அதேநேரம் திமுக ஆட்சியில் நடக்கும் தவறுகளை கண்டு கொள்வதே இல்லை. கருத்து தெரிவிப்பதும் கிடையாது. இதுபோல் தங்களின் சுயலாபத்துக்காக செயல்பட்டால் தமிழகத்தில் காங்கிரஸ் எப்படி வளர்ச்சி அடையும்? இதனால்தான் திமுகவிடம் அடகு வைத்ததுபோல கட்சியின் இன்றைய நிலைமை ஆகிப்போய் விட்டது.

திமுக கனவு பலிக்குமா?

காங்கிரசுக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்குவது குறித்து திமுகவின் மூத்த தலைவர்களே வெளிப்படையாக பேசினால் அது தங்கள் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்று நினைத்துத்தான் கூட்டணி கட்சிகளை உசுப்பிவிட்டு, 2019ல் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளை திமுக தலைமை கேட்க வைப்பதுபோல் தோன்றுகிறது.

இப்படியொரு நெருக்கடியான நிலையை ஏற்படுத்தி காங்கிரசுக்கு ஐந்து, ஆறு தொகுதிகளை ஒதுக்கினால் கூட வேறு வழியின்றி டெல்லி தலைமை அதை ஏற்றுக்கொண்டு விடும் என்று திமுக கணக்கு போடுகிறது.

இல்லையென்றால் விருதுநகர் தொகுதியை எதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கேட்கிறது?… தங்களுக்கு சிறிதும் செல்வாக்கு இல்லாத கரூரை மார்க்சிஸ்ட் குறி வைப்பது எதனால்?… அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், ஜோதிமணி எம்பிக்கும் மோதல் போக்கு இருப்பதால் அதைத் தவிர்க்கும் விதமாகவும் ஜோதிமணி மீண்டும் போட்டியிடாமல் தடுக்கவும் இப்படி திட்டமிட்டு திமுக செயல்படுகிறதா? என்ற கேள்விகளும் எழுகின்றன.

திமுகவின் நாடகமா?

அதேநேரம் விசிக தலைவர் திருமாவளவன், திருவள்ளூர் தொகுதியை ஏன் கேட்கிறார் என்றும் தெரியவில்லை. வைகோவும் தனது மகனுக்காக காங்கிரஸ் வசம் உள்ள விருதுநகர் தொகுதியை கேட்டு வாங்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவர் தனது மகனை ஈரோடு தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற வைக்கலாமே?…

எப்படியோ தமிழக காங்கிரசை குழப்ப நிலைக்கு தள்ளி திமுக ஒதுக்கும் குறைவான எம்பி சீட்டுகளை பெற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் அரங்கேற்றும் நாடகம் போலவே இது தெரிகிறது” என்று அந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மனம் குமுறுகின்றனர்.

திமுகவிடம் 15 தொகுதிகளை கேட்டுப் பெற நினைக்கும் காங்கிரசின் நிலைமை பரிதாபத்துக்குரியதுதான்!

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 338

    0

    0