மீன் தூண்டில் முள் குத்தி உயிருக்கு போராடிய சாரைப்பாம்பு : அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய கால்நடை மருத்துவர்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan26 July 2023, 2:24 pm
விவசாயிகளின் நண்பனாக உள்ள உயிரினங்களில் ஒன்று சாரைப்பாம்பு. பெரும் குழிகளை பறித்து வயல்வெளிகளை கொடையும் எலிகளுக்கு எமனாக விளங்கும் சாரைப்பாம்புகள், எலிகளை இறைக்காக வேட்டையாடுவதனால் விவசாய நிலங்கள் பெருமளவில் பாதுகாக்கப்படுகின்றன.
இந்த பாம்புகள் விசத்தன்மையற்றது. அப்படிப்பட்ட பாம்புகள் வழக்கமாக நிலங்கள், நீர் நிலைகளென அனைத்து இடங்களிலும் பயணிக்கும். அப்படி நீர் நிலையில் இருந்த சாரை பாம்பு ஒன்று, மீன் பிடிக்க சென்ற ஒருவரின் தூண்டில் முள் குத்தி, அதன் கழுத்திலிருந்து செல்லும் உடலில் காயமடைந்திருக்கின்றது.
இதனால் அது தன் இயல்பான சுறுசுறுப்பு வேகத்துடன் ஓட முடியாமல் தவித்து நகர்ந்து சென்றிருக்கின்றது. இதனை பார்த்த குறிச்சி பொதுமக்கள் சாரை பாம்பு உலா வருவதனை, வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினருக்கு தகவல் தந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பை சேர்ந்த மோகன் என்ற பாம்பு பிடி வீரர் பாம்பை மீட்க குறிச்சி சென்றார். அப்போது பாம்பு மீட்கப்பட்டது.
உடனடியாக அந்த பாம்பு கோவையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது சாரைப் பாம்பின் உடலில் குத்தியிருந்த தூண்டில் முள் அகற்றப்பட்டது . இந்த நிலையில் கால்நடை துறை மருத்துவர்கள் சாரை பாம்புக்கான அறுவை சிகிச்சை முடித்து, காயத்துக்கான மருந்துகளை வைத்து கட்டி பேண்டைடு போட்டு விட்டனர்.
இதனை தொடர்ந்து அந்த சாரைப்பாம்பு தமிழ்நாடு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தூண்டில் முள் குத்தி உயிருக்கு போராடிய பாம்பை மீட்ட வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பின் பாம்பு பிடி வீரர் மோகன் மற்றும் கால்நடை மருத்துவர்களை வன உயிரியல் ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டியிருக்கின்றனர் .
குளம், ஏறி, நீர்த்தேக்கங்களில் மீன் பிடிக்க தூண்டில் போடுவோர், அதனை முறையாக கண்காணித்தல் அவசியம் என்று வன உயிரியல் ஆர்வர்கள் தெரிவித்திருக்கின்றனர்.