குமரியில் கவனம்பெற்ற 10 ரூபாய் டாக்டர்… கால்களை இழந்த போதும் ஏழை மக்களுக்கு தளராத மருத்துவ சேவை !!
Author: Babu Lakshmanan29 July 2023, 7:50 pm
கன்னியாகுமரி மாவட்டம் தலக்குளம் கிராமத்தில் 70 வயதான பிரபல மூளை நரம்பியல் நிபுணரான ஒருவர், தனது கால்கள் இரண்டும் செயலிழந்த நிலையிலும், சக்கர நாற்காலியில் சுழன்றபடியே நோயாளிகளுக்கு 10 ரூபாயில் மருத்துவம் பார்த்து வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் அருகே உள்ள தலக்குளம் என்ற கிராமத்தில் 1953-ல் பிறந்த பிரபல மூளை நரம்பியல் நிபுணரான மருத்துவர் ஆறுமுகம். அரசு பள்ளியில் பள்ளி படிப்பை முடித்து தனியார் கல்லூரியில் பட்ட படிப்பை முடித்ததோடு, 1974-ம் ஆண்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் முடித்த கையோடு, நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.
பின்னாளில் பல மேற்படிப்புகளை மேற்கொண்ட ஆறுமுகம் 1989ல் மாவட்டத்தில் முதல் நரம்பியல் நிபுணராக பயிற்சி பெற்று வந்துள்ளார். 1992ல் அவருக்கு விஷக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, இரு கால்களும் செயலிழந்த நிலையிலும், தன்னம்பிக்கையுடன் 1993-ல் திங்கள்நகர் பகுதியில் ஒரு வாடகை வீடு எடுத்து சுற்றுவட்டார கிராம மக்களுக்கு 10 ரூபாயில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
ஒரிரு வருடங்களில் தனது கிராமமான தலக்குளம் பகுதியில் சொந்தமாக மருத்துவமனை கட்டி தனது 10 ரூபாய் மருத்துவ சேவையை தொடர்ந்து வருகிறார்.
பொது மருத்துவம், இருதய கோளாறு, மூளை நரம்பியல் சம்பந்தமான நோய்களுக்கும் 10 ரூபாயிலேயே மருத்துவம் பார்க்கும் மருத்துவர் ஆறுமுகம், வசதியற்ற ஏழைகளை தனது மருத்துவமனையில் அனுமதித்து உணவு மருந்து மாத்திரைகள் என முழு சிகிச்சையையும் இலவசமாக வழங்கி வருகிறார்.
அதோடு, அவசர வார்டு முதல் சாதாரண வார்டுகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை சக்கர நாற்காலிகளில் சுழன்றபடி தானே நேரில் சென்று தனிக்கவனம் செலுத்தி பரிசோதித்து மருத்துவமும் செய்கிறார்.