பிரபல ரவுடிகள் இருவர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை… அதிகாலையில் சென்னையை கதிகலங்கச் செய்த சம்பவம்..!!
Author: Babu Lakshmanan1 August 2023, 8:30 am
சென்னை அருகே இரு ரவுடிகள் போலீசாரால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள புதுச்சேரி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அதிகாலை 3 மணியளவில் அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று, போலீசார் தடுத்து நிறுத்தியும் நிற்காமல் சென்றுள்ளது.
இதனை தொடர்ந்து, அந்த காரை போலீசார் பின் தொடர்ந்து சென்ற போது, காரில் இருப்பது ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் என்பது தெரியவந்தது. இந்த சேஸிங் சம்பவத்தின் போது போலீஸ் வாகனத்தின் மீது ரவுடிகள் வந்த கார் வேகமாக மோதி நின்றது.
இதையடுத்து, ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் ஆகியோர் போலீசாருக்கு பயந்து காட்டுப் பகுதிக்குள் ஓடிச் சென்றனர். அப்போது போலீசார் அவர்களை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ரவுடிகள் இருவரும் உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை கத்தியால் வெட்டியுள்ளனர்.
இதனால், அதிர்ந்து போன ஆய்வாளர் முருகேசன், ரவுடிகள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்ததாகக் கூறப்படுகிறது. உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரவுடி சோட்டா வினோத் மீது 10 கொலை வழக்கு உள்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகளும், ரமேஷ் மீது 5 கொலை வழக்கு உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகளும் பல்வேறு காவல்நிலையங்களில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.