இந்தியாவில் இது வரை நடைபெறாத வகையில் முதன்முறையாக… அமைச்சர் டி.ஆர்.பி ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan1 August 2023, 9:18 pm
வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் பகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. இதனை மாநில தொழில் துறை அமைச்சர் டி.ஆர்,பி.ராஜா இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை டெல் பகுதியில் தொழிற்பூங்கா அமையவுள்ள பகுதியினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுடன், அமைச்சர் டி.ஆர்பி.ராஜாபார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மகிமண்டலம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமையவுள்ளதையும் அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கூடியிருந்த மக்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில் இந்த தொழிற்பேட்டையால் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் பல்வேறு நல்லவைகள் நடக்கும் என கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜா, வேலூர் அருகே அப்துல்லா புரத்தில் அமைய உள்ள தொழில்நுட்ப பூங்கா பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஒரு சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு இன்னும் 9 மாதங்களில் துவங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் காட்பாடி அருகே சிப்காட் தொழில்பேட்டை அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணிகள் துவங்கி உள்ளது.
மிகப்பெரிய தொழில் பேட்டை காட்பாடியில் அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்பேட்டை சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறு அதற்கான வகையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் தலைமையில் விரைவில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாடு இதுவரை இந்தியாவில் நடைபெறாத வகையில் மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெறும்.
இந்த மாநாடு இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாநாடாக அமையும். இந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்க இருப்பதால் இளைஞர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஒரு உந்துதலை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் தொழில்நுட்பத் துறையில் அதிக அளவில் முதலீடுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் புதிய தொழில்நுட்பத்தில் புதிய எரிசக்தியை பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை தயாரிக்க அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தொலை நோக்கு பார்வையுடன் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.