CM ஸ்டாலின் டுவிட்டை நீக்கியது ஏன்..? ஃபாக்ஸ்கான் விவகாரத்தில் நீடிக்கும் மர்மம்.. தமிழக இளைஞர்கள் கவலை ; இபிஎஸ் கேள்வி..!!
Author: Babu Lakshmanan3 August 2023, 7:15 pm
திமுக ஆட்சியில், அந்நிய முதலீடுகள் இந்தியாவின் வேறு மாநிலங்களுக்குச் செல்வதை இளைஞர்கள் கவலையுடன் பார்த்துக் கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில், முதலீடுகள் இந்தியாவின் வேறு மாநிலங்களுக்குச் செல்வதை தொழிற் துறையினரும், வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களும் கவலையுடன் பார்த்துக் கொண்டுள்ளனர் என்று அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக மக்களிடம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, அவர்களின் மனதில் ஆசையைத் தூண்டி பின்புற வாசல் வழியாக ஆட்சியைப் பிடித்த மக்கள் விரோத திமுக அரசு, கடந்த 27 மாத கால ஆட்சியில் தமிழகத்தை பல துறைகளில் பெரும் பின்னடைவில் நிறுத்தியுள்ளது. சட்டம்-ஒழுங்கை பேணிக் காப்பதில் பின்னடைவு; கொலை, கொள்ளை, வழிப்பறி, முதியவர்களை குறிவைத்துத் தாக்குதல் உள்ளிட்ட அனைத்து குற்றச் செயல்களும் அதிகரிப்பு;
போக்சோ குற்றங்கள் அதிகரித்து, பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மாநிலம் தமிழ் நாடு இல்லை என்ற அவப் பெயர்; காவல் நிலைய மரணங்களில் தென்னிந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருப்பதாக, மத்திய குற்ற ஆவணக் காப்பகம் நேற்று (2.8.2023) தெரிவித்துள்ளது; உடல் உறுப்பு தானம் செய்வதில் முதலிடத்தைத் தவறவிட்டது; 27 மாத ஆட்சியில், இதுவரை ஒரு புதிய பேருந்து கூட வாங்காமல், போக்குவரத்துக் கழகங்களை சீரழித்த அவலம்; அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் கடும் விலை உயர்வு; நில மதிப்பு அதிகரிப்பு, பொது பதிவுகளுக்கான கட்டணங்கள் உயர்வு உட்பட அரசின் அனைத்துக் கட்டணங்களும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது;
அரசின் வரி வருவாய் பல மடங்கு அதிகரித்தும், நிதி நிர்வாக குளறுபடியால் இரண்டு ஆண்டுகளில் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் புதிய கடன்; தாலிக்குத் தங்கம், அம்மா இருசக்கர வாகன மானியம், தாய் சேய் நலப் பெட்டகம் மற்றும் நிதியுதவி, மாணாக்கர்களுக்கு மடிக்கணினி என்று ஏழை, எளியவர்களுக்கு அதிமுக அரசில் வழங்கப்பட்ட பல நிதியுதவித் திட்டங்கள் நிறுத்தப்பட்டன; தேர்தல் சமயத்தில் அறிவித்த, நேரடியாக பணப்பயன் அளிக்கக்கூடிய வாக்குறுதிகள் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை;
ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழக மக்களின் தலையில் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு என்று பலவித சுமைகளை சுமத்தியது இந்த திமுக அரசு; அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கைவிரித்த திமுக அரசு; இப்படி, இந்த திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தமிழகம் புதைக்குழிக்குள் சென்றததை அடுக்கிக்கொண்டே போகலாம். குறிப்பாக, அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்காக ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை வெளிநாடு சென்று வந்த பொம்மை முதலமைச்சர், ‘அதிமுக ஆட்சியில் 2020-2021ல் அந்நிய நேரடி முதலீடு ஈர்த்தலில் 3-ஆவது இடத்தில் இருந்த தமிழகத்தை, 2022-23ல் 27.7 சதவீதம் குறைவாக அந்நிய முதலீட்டை ஈர்த்து, 8-ஆவது இடத்திற்கு பின்னுக்குத் தள்ளியதுதான் நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரின் சாதனை’.
மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) புள்ளி விவரங்களின்படி எனது தலைமையிலான அதிமுக அரசில், ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை ஆறே மாதங்களில், (கொரோனா காலக்கட்டத்தில்) தமிழகத்திற்கு வரப்பெற்ற அந்நிய நேரடி முதலீடு ரூ. 1,97,582 கோடி ஆகும். அதாவது, 31,140 மில்லியன் அமெரிக்க டாலர். 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி, 2,354 கோடி ரூபாய் முதலீட்டில், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், சுமார் 500 ஏக்கர் நிலப் பரப்பில் உலகத்திலேயே மிகப் பெரிய மின்சார இருசக்கர வாகன தொழிற்சாலையை “ஒலா” நிறுவனம் நிறுவ ஆரம்பித்தது என்றும், இங்கு தயாரிக்கப்படும் மின்சார இருசக்கர வாகனங்கள் 2022-ல், வாகன சந்தையில் விற்பனைக்கு வர உள்ளன என்று, கடந்த 2021 மார்ச் 9-ஆம் தேதி, ஓலா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த, அதிமுக அரசால் கொண்டு வரப்பெற்ற இந்தத் திட்டத்தை, திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 50 நாட்களில் “ஓலா” நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டு, ஒலா இரு சக்கர வாகன தொழிற்சாலையை, தான் கொண்டு வந்தது போல் பொம்மை முதலமைச்சர் தம்பட்டம் அடித்துக்கொண்டு பேசுவது “அடுத்தவர்கள் பெற்றெடுத்த குழந்தைக்கு சொந்தம் கொண்டாடுவது போலாகும்” என்று 5.7.2021 நாளிட்ட அறிக்கையில் நான் கடுமையாகக் கண்டித்திருந்தேன்.
மேலும், 30.7.2022 நாளிட்ட எனது அறிக்கையில், வேதாந்தா மற்றும் ஃபாக்ஸ்கான் (Foxcon) நிறுவனங்கள் இரண்டும் இணைந்து, தமிழகத்தில் 1 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் வாகனங்களுக்குத் தேவையான “செமிகண்டக்டர்” எனும் இயந்திர சாதன உற்பத்தித் தொழிற்சாலை, இந்த ஆட்சியாளர்கள் விதித்த “கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன்” நிபந்தனைகளால், இந்நிறுவனங்கள் குஜராத் மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்து பணிகளைத் துவக்கி உள்ளதாகவும், இதன் காரணமாக, தமிழகத்தில் சுமார் 2 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்க இருந்த நிலையில், இது குஜராத் மாநிலத்திற்குச் சென்றுவிட்டதாகவும், GST வருவாய் சுமார் 1 லட்சத்து 20 ஆயிம் கோடி ரூபாயையும் இந்த நிர்வாகத் திறமையற்ற திமுக அரசு தவறவிட்டதாகவும் நான் விளக்கமாகக் குறிப்பிட்டிருந்தேன். அதுமட்டுமல்லாமல், 31.07.2023 அன்று ஸ்டாலின் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் 1,600 கோடி ரூபாய் முதலீட்டில், 6000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய மொபைல் உதிரி பாகத் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது குறித்து தனது சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டிருந்தார்.
அதில், தமிழில் புரிந்துணர்வு ஒப்பந்தம் எனது முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டுள்ள அவர், MOU – Memorandum of Understanding – என்ற வார்த்தையை ஆங்கில மொழிபெயர்ப்பில் பயன்படுத்தவே இல்லை. அதற்கு பதில், Investment Commitment என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். இது, ஒப்பந்தம் குறித்து ஃபாக்ஸ்கான் சார்பில் மறுப்பு செய்தி வந்தவுடன், தன்னுடைய ட்விட்டர் வலைதளப் பதிவையும் முதலமைச்சர் நீக்கியுள்ளார். இதன் மர்மத்தை முதலமைச்சர் தான் தமிழக மக்களிடம் விளக்க வேண்டும். 10 ஆண்டுகால அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், கார் உற்பத்தியில் உலக அளவில் தமிழகம் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றிருந்தது. சுமார் 50 சதவீதம் பம்ப் செட் ஏற்றுமதி தமிழகத்திலிருந்து நடைபெற்றது.
பின்னலாடை உற்பத்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத்திலும் தமிழகம் இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்தது. டயர் உற்பத்தி மற்றும் கண்ணாடி உற்பத்தியில் உலக அளவில் உள்ள முன்னனி நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை தமிழகத்தில் தொடங்கியது. அதுபோலவே, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செல்போன் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்திற்கு வரவேண்டும் என்று எனது தலைமையிலான அதிமுக அரசு, அனைத்து முன்னனி நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
ஆனால், நிர்வாகத் திறனற்ற திமுக அரசில், ஃபாக்ஸ்கான் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு சுமார் 4 ஆயிரம் கோடி வீதம் சுமார் 8 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தனது High End (Apple i-Phone) தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கான முதலீட்டை கர்நாடகாவிற்கும், தெலுங்கானாவிற்கும் மாற்றியது தமிழக மக்களிடையே, குறிப்பாக வேலை வாய்ப்புக்காக காத்திருந்த தமிழக இளைஞர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை சொர்க்கபுரி ஆக்கிவிட்டோம் என்றெல்லாம் படம் காட்டும் வேலையில்தான் இந்த திமுக அரசு ஈடுபட்டு வருகிறதே தவிர, தமிழகத்திற்கு இந்த ஆட்சியாளர்கள் கொண்டு வந்ததாகக் கூறப்பட்ட அனைத்து முதலீடுகளும் காகிதங்களில்தான் உள்ளதே தவிர, நிஜத்தில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. இதனால், இந்த திமுக ஆட்சியாளர்களை காகிதப் புலிகள் என்று மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.
தமிழகத்திற்கு பெருமளவில் அந்நிய நேரடி முதலீட்டை அதிமுக அரசு ஈர்த்த நிலையில், இன்றைக்கு மாயாஜால வித்தை காட்டும் நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில், முதலீடுகள் இந்தியாவின் வேறு மாநிலங்களுக்குச் செல்வதை தொழிற் துறையினரும், வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களும் கவலையுடன் பார்த்துக் கொண்டுள்ளனர். இதற்கான பதில், வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் கண்டிப்பாக தெரியவரும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
தமிழகத்திற்கு அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு இரண்டுமுறை சுற்றுப் பயணம் செய்ததாக தம்பட்டம் அடிக்கும் முதலமைச்சர், அவர் குறிப்பிட்டதைப் போல் எந்த ஒரு முதலீட்டையும் கொண்டுவந்ததாகத் தெரியவில்லை. இந்த ஆட்சியில் மக்கள், ஏமாறியதுதான் அவர்கள் கண்ட பலன். எனவே, 2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரம் இந்த திமுக அரசு நடத்த உள்ள உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டிலாவது, “கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்” ஆகியவற்றை விட்டுவிட்டு, தமிழக மக்களின் நலனுக்கான திட்டங்களையும், அதற்கான முதலீடுகளையும் இந்த திமுக அரசு ஈர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். வழக்கம்போல் இனிப்பு என்று கூறி தமிழக மக்களின் நாவில் விஷம் தடவும் வேலையை இந்த ஆட்சியாளர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.