ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கொடூரமாக வெட்டிக்கொலை… கோவிலுக்கு சென்ற போது நிகழ்ந்த சம்பவம் ; போலீசார் விசாரணை..!!
Author: Babu Lakshmanan4 August 2023, 10:22 am
புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தற்போதைய ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் முத்துலட்சுமி. இவருடைய கணவர் சங்கர் என்ற சுந்தரகோபாலன். இவரும் கடந்த பல ஆண்டுகளாக ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். சங்கர் சொத்துக்களை வாங்கி, விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று இரவு அவரது பஞ்சாயத்துக்குட்பட்ட இளங்குடிபட்டி அய்யனார் கோவிலில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அய்யனார் கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக கொடூரமான முறையில் கழுத்து, இரண்டு கைகள், வயிறு, தலை ஆகியவற்றில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இவரது அலறல் சத்தம் கேட்ட அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
நமனசமுத்திரம் போலீசார் விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சிறிது தூரம் சென்று விட்டு நின்று விட்டது. சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே வந்து விசாரணை மேற்கொண்டார்.
சங்கரின் கொலைக்கு சொத்து வாங்கி விற்பதில் ஏற்பட்ட முன்விரோதமா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.