அண்ணாமலையின் நடைபயணத்திற்கு பெருகும் வரவேற்பு.. பீதியில் திமுக ; இனிதான் ஆட்டமே ஆரம்பம் ; கேபி ராமலிங்கம் பரபர பேச்சு..!!
Author: Babu Lakshmanan4 August 2023, 5:01 pm
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள என் மண் என் மக்கள் நடைபயணம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளதாக பாஜக துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று (04.08.23) தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை உலக தரத்திற்கு புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ரயில் நிலையங்களை ஒரே நேரத்தில் காணொளி வாயிலாக திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார்.
வல்லரசு நாடுகளுக்கு இணையான உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையங்கள் இந்தியாவில் மேம்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. தமிழகத்தில் சேலம், கரூர் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட உள்ளது.
பாஜக மற்றும் அதிமுகவின் ஒரே நோக்கம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பாரத பிரதமராக திரு நரேந்திர மோடி அவர்களை தேர்ந்தெடுப்பது தான். இந்த இரு கட்சிகளுக்கும் ஒரே எதிரி திமுக. எவ்வித அரசு திட்டங்களையும் சரிவர செயல்படுத்தாமல், திமுக அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் தோல்வி அடைந்துள்ளது.
இந்தியா முழுவதும் தியாகிகள் வாழ்ந்த நினைவிடங்கள் மற்றும் அவர்கள் வாழ்ந்த இடங்களில் இருந்து அவர்களின் நினைவாக அங்கு இருக்கும் மண் மற்றும் அங்கு வளர்ந்துள்ள சிறந்த செடிகளை எடுத்துச் சென்று, புது தில்லியில் உள்ள போர் நினைவு சின்னம் அருகில் வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் சுதந்திர தினத்தன்று பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அனைத்து பகுதிகளிலும் கொண்டு கொண்டுவரும் மண் மற்றும் செடிகளை போர் நினைவு சின்னத்தின் அருகில் வைப்பார். இங்கு பாரத மாதாவிற்கு ஒரு எழுச்சிமிகு சின்னம் அமைக்கப்படும்.
இதற்காக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் என்ற நடைபயணம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. நாளுக்கு நாள் தமிழகத்தில் பாஜகவிற்கான ஆதரவு பெருகி வருகிறது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபயணத்தை மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் ஆன்மீகம், அரசியல் இரண்டையும் ஒருங்கிணைத்து பாஜக முன்னெடுத்துச் செல்லும், இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக பாப்பாரப்பட்டி பாரதமாதா ஆலய விவகாரமாக பென்னாகரம் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு தொடர்பாக பாஜக துணை தலைவர் கே பி ராமலிங்கம் உள்ளிட்டோர் நேரில் ஆஜரானார்கள்.