கோவையில் பெண் கொலை… சூப் கடைக்காரர் கைது ; கொலைக்கு முன்பாக ஸ்டிக்கர் கடைக்கு சென்ற கொலைகாரன்… விசாரணையில் பகீர் தகவல்…!!!

Author: Babu Lakshmanan
5 August 2023, 9:36 am

கோவையில் கடந்த 28ஆம் தேதி இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சூப் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை சேரன்மாநகரில் உள்ள பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரது மனைவி ஜெகதீஸ்வரி. கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் சக்ரவர்த்தி தோட்ட வேலை மற்றும் பெயிண்டர் வேலை பார்த்து வந்த நிலையில், மனைவி ஜெகதீஸ்வரி வீட்டிலேயே இருந்து தனது ஒரே மகளான 12 ம் வகுப்பு மாணவியை பராமரித்து வந்துள்ளார்.

இதனையடுத்து, மாலையில் பள்ளிக்கு சென்று மகளை அழைத்து வரும் தாய் வராததால் சந்தேகமடைந்த அவரது 12 ம் வகுப்பு மாணவியான மகள் வீட்டிற்கு வந்து பார்த்த போது ரத்தம் வடிய படுக்கையில் தாய் சடலமாக கிடந்துள்ளார். இதை தொடர்ந்து, தனது தந்தைக்கும், அக்கம்பக்கத்தினருக்கும் அவர் அளித்த தகவலின் பேரில் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து நான்கரை சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நான்கு தனிப்படை அமைத்து ஆதாயக்கொலையா..? அல்லது பாலியல் கொலையா..? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கிருந்த டிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும் மற்றும் அக்கம் பக்கத்தினரிடமும் விசாரணை செய்ததன் அடிப்படையில், கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த சூப் வியாபாரியான மோகன்ராஜ் என்பவரை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர உதவி ஆணையர் பார்த்திபன், இந்த கொலை வழக்கு தொடர்பாக மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் நான்கு குழு அமைத்து குற்றவாளியை தேடி வந்த நிலையில், அதே பகுதியில் முன்பு வசித்து வந்த சூப் வியாபாரியான மோகன்ராஜ் என்பவருடன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறிய நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அங்கிருந்து கோவை ராமநாதபுரத்திற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார் மோகன்ராஜ். இது குறித்து சேரன்மாநகர் பகுதியிலிருந்து ரேஸ்கோர்ஸ் வரையிலான சுமார் 250க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம். அதில் மோகன்ராஜ் தனது ஜாவா இருசக்கர வாகனத்தை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அவரது கடையில் நிறுத்தி வைத்து விட்டு வேறு ஒரு ஸ்கூட்டி வாகனத்தை எடுத்து கொண்டு அவினாசி சாலை வரை சென்ற அவர், அங்கு ஒரு ஸ்டிக்கர் கடையில் போலி வாகன பதிவெண்ணை வாங்கி ஸ்கூட்டியில் ஒட்டி ஜெகதீஸ்வரியின் வீட்டிற்கு சென்று கொலை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு மீண்டும் கடைக்கு வரும் வழியில் போலி ஸ்டிக்கரை மாற்றியதாகவும் கூறினார்.

மேலும், கடந்த 2016ம் ஆண்டு முதல் 21ம் ஆண்டு வரை மோகன்ராஜ் பாலாஜி நகர் பகுதியில் வசித்த போது, இருவருக்கும் இடையே இருந்த நெருக்கம் அண்மை காலமாக குறைந்ததால் ஜெகதீஸ்வரி மீது சந்தேகம் எழுந்ததாகவும், எப்போதும் யாருக்கும் சந்தேகம் வராத வகையில், வேறு எண்ணிலிருந்து மட்டுமே ஜெகதீஸ்வரியை தொடர்பு கொண்டதாகவும் கூறியதுடன், தற்போதும் காவல்துறையை திசை திருப்பவே நம்பர் பிளேட்டை மாற்றியும் சாதாரணமாக தனது பணியை மேற்கொண்டும் வந்துள்ளார் மோகன்ராஜ் எனவும், ஆதாயத்திற்காக கொலை செய்யப்பட்டதாக திசைதிருப்பும் வகையில் ஜெகதீஸ்வரியின் நான்கரை சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், தற்போது அவரிடமிருந்து ஒரு ஜாவா இருசக்கர வாகனம் மற்றும் ஒரு ஸ்கூட்டி வாகனம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!