அரிவாளுடன் இரவில் சுற்றி திரிந்த கும்பல்.. பைக் திருட்டில் ஈடுபட்ட சிலுவண்டுகளை தட்டி தூக்கிய கோவை போலீஸ்…!

Author: Babu Lakshmanan
7 August 2023, 7:08 pm

கோவை ; சூலூரில் திருப்பாச்சி அரிவாளுடன் சுற்றி திரிந்து இரவில் தாக்கி பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையம் பகுதியில் இரவு நேரங்களில் பைக்கில் செல்பவர்களை தடுத்து நிறுத்தும் மர்ம நபர்கள் அரிவாளை காட்டி பைக்குகளை பிடுங்கி செல்வதாக தொடர் புகார்கள் எழுந்தன‌. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதே பாணியில் 3 பைக்குகள் திருடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், நள்ளிரவில் பைக்கில் வந்த வாலிபர் ஒருவரை அரிவாளில் தாக்கி விட்டு அவரது பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றதாக சூலூர் போலீஸ்சில் புகார் அளித்தார்.

இதனை அடுத்து, கோவை மாவட்ட எஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பைக்குகளில் வரும் நபர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபடும் மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். சம்பவ இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் பைக் கொள்ளையர்களின் அடையாளம் தெரியவந்தது.

பைக் திருட்டில் ஈடுபட்டவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் என்பதும், மூவரும் தென்னம்பாளையம் பகுதியில் தங்கி பகலில் கட்டிட வேலை செய்துகொண்டு, இரவு நேரங்களில் திருப்பாச்சி அரிவாளுடன் வாகன ஓட்டிகளை தாக்கி தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, தென்னம்பாளையம் பகுதியில் தங்கியிருந்த இருந்த சாந்தப்பிரியன் (21), ரித்திக் குமார் (19), விஜய் (20) ஆகிய 3 இளைஞர்களையும் கைது செய்த தனிப்படை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் பைக் திருட பயன்படுத்திய திருப்பாச்சி அரிவாள், 2 மோட்டார் பைக், 1 மொபைல் போன் பறிமுதல் செய்தனர்.

  • Director Selvaraghavan responds to Kamal Haasan கமல் ஆணவப் பேச்சு…தக் லைப் கொடுத்த செல்வராகவன்..!