கால் வைக்கும் இடம் எல்லாம் கண்ணிவெடி?…. செந்தில் பாலாஜியை இறுக்கிப் பிடிக்கும் ED!
Author: Udayachandran RadhaKrishnan9 August 2023, 8:45 pm
அமலாக்கத்துறை தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஆம், இல்லை என்கிற பாணியில் 700க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், அவருக்கு இன்னொரு பெரும் சோதனையும் வந்துள்ளது.
அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஒரு கோடியே 64 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு குட்டு
அப்போது வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, “சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செப்டம்பர் 30ம் தேதிக்குள் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். இதுதான் இறுதிக் கெடு. இதற்கு மேலும் கால அவகாசம் தரப்பட மாட்டாது. இதை மீறினால் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சுப்ரீம் கோர்ட்டே சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து அதன் கண்காணிப்பில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடும்” என்று ஒரு குட்டும் வைத்தது.
இது மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவுக்கும் கொடுக்கப்பட்ட பலத்த அடியாகவே பார்க்கப் படுகிறது. ஏனென்றால் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றாகும்.
இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய 6 மாத கால அவகாசம் கேட்டபோது, நீதிபதிகள் அமர்வு மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாகி, “இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைத்துவிட்டால் உங்களால் 24 மணி நேரத்தில் எடுக்க முடியும். இல்லை என்று முடிவு செய்து விட்டால் 24 ஆண்டுகள் ஆனாலும் நடவடிக்கை எடுக்க முடியாது” என்றும் அதிரடி காட்டியதுதான்.
விசாரணையில் ட்விஸ்ட்
இதனால் செந்தில் பாலாஜி லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட வழக்கில் அவரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தாலும் சிக்கல், எடுக்காவிட்டால் சுப்ரீம் கோர்ட்டின் கடும் கண்டனத்துக்கு உள்ளாக நேரிடும் என்னும்
இருதலைக்கொள்ளி எறும்பு போன்ற நிலைக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தள்ளப்பட்டு உள்ளனர். இந்த நிலையில்தான் அமலக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான விசாரணையை புதிய கோணத்தில் மேற்கொண்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
குறிப்பாக அவருடைய உடல் நிலையை, கருத்தில் கொண்டு கேள்விகளுக்கான பதிலை ஆம், இல்லை என்கிற பாணியில் பெற்று அதில் அவருடைய வாக்குமூலத்தை கையெழுத்துடன் வாங்கி அதை வீடியோ பதிவும் செய்து வருகின்றனர்.
700, 800 கேள்விகளை இதுபோல் கேட்டு பெறும்போது, சில இடங்களில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. அதை அவருக்கு எதிராக சாட்சியளிப்பவர்களிடம் காண்பித்து இரு தரப்பினரையும் நேருக்கு நேர் வைத்து விசாரிக்கும்போது அதன் உண்மைத்தன்மை வெளிப்பட்டுவிடும் என்பதால் இவ்வாறான நூதன விசாரணையை அமலாக்கத்துறை கையில் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
சரமாரிக் கேள்வி
அதேநேரம் அரசு போக்குவரத்து கழகத்தில், வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் மூன்றாவது நாளான ஆகஸ்ட் 9ம் தேதி விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது உங்களது வங்கி கணக்கிலும், உங்கள் மனைவியின் வங்கிக் கணக்கிலும் ஒரு கோடியே 64 லட்ச ரூபாய் அளவிற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. இது சட்டவிரோத பண பரிவர்த்தனை தானே?…உங்களுக்கு இந்தத் தொகையை எதற்காக கொடுத்தார்கள்?… அதை ஏன் நீங்களும், உங்கள் மனைவியின் வங்கிக் கணக்கிலும் போடச் சொன்னீர்கள்?…என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பியும் உள்ளனர்.
இதற்கு அவர் அளித்த பதில்களை வீடியோவில் பதிவு செய்து கொண்டனர். அமலாக்கத்துறையினர் அண்மையில் கரூர், கோவை, நாமக்கல், வேடசந்தூர் நகரங்களில் ரெய்டு நடத்தியபோது செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களிடம் ஏராளமான சொத்து ஆவணங்கள் சிக்கியதால் அதன் அடிப்படையில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருவர் என சுழற்சி முறையில் மூன்று அதிகாரிகள் தினமும் 12 மணி நேரம் வரை அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கலில் திமுக நிர்வாகி சாமிநாதன்
தற்போதைய தீவிர விசாரணை முழுக்க முழுக்க வேடசந்தூர் திமுக நிர்வாகியும் செந்தில் பாலாஜியின் பினாமியாக கருதப்படுபவருமான சாமிநாதன் வீட்டில் பணி புரியும் சாந்தி என்ற பெண்ணிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 60 நில ஆவணங்களின் அடிப்படையிலேயே நடத்தப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.
ஏனென்றால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வாங்கி குவிக்கப்பட்ட இந்த நிலங்களின் உண்மையான மொத்த மதிப்பு சில ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்ற வலுவான சந்தேகமும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் எழுந்துள்ளது.
அதேபோல நிதி நிறுவன அதிபரான சாமிநாதன் தென் மாநிலங்கள் தவிர மராட்டியம், குஜராத், உத்தரப்பிரதேசம், டெல்லியிலும் உள்ள நிதி நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு செந்தில் பாலாஜி டாஸ்மாக் மதுபானம், மற்றும் சட்டவிரோத பார்கள்
மூலம் முறைகேடாக சம்பாதித்ததாக கூறப்படும் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற கோணத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆம், இல்லை பாணியில் கிடுக்குபிடி கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இன்னொரு பக்கம் நான்கு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் போக்கு காட்டி வரும் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் மீதும் அமலாக்கத்துறை அதிகாரிகளின் பார்வை திரும்பி உள்ளது.
சிக்கலில் பிரம்மாண்ட பங்களா
கரூரில் அவர் பிரமாண்ட பங்களா கட்டுவதற்கு பணம் எப்படி கிடைத்தது? வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய்க்கு பளிங்கு மார்பில் கற்களை அசோக்குமார் இறக்குமதி செய்வதற்கு எங்கிருந்து பணம் வந்தது?…25 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தை அசோக்குமாரின் மாமியாரால் எப்படி 11 லட்ச ரூபாய்க்கு தானமாக பெற முடிந்தது?. என்பன போன்ற கேள்விகளையும் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை எழுப்பி இருக்கிறது.
ஏனென்றால் அமைச்சர் என்கிற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான வழியில் இப்படி சொத்துக்களை செந்தில் பாலாஜி தனது பினாமி பெயர்களில் வாங்கிக் குவித்து இருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் எழுந்து இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.
செந்தில் சிறைவாசத்துக்கு முடிவே இல்லை
தற்போதைய விசாரணையில் சாமிநாதன் பல்வேறு பினாமி பெயர்களில் பதிவு செய்திருந்த 60 நில ஆவணங்கள் மற்றும் அசோக் குமாரின் பிரமாண்ட கரூர் பங்களா ஆகியவற்றை மையமாக வைத்தே செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடப்பதால் அமலாக்கத்துறை இந்த இரண்டிலும் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளது என்கிறார்கள்.
இந்த இரு விசாரணைகளையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி இருப்பதால் இவற்றின் அடிப்படையிலும் செந்தில் பாலாஜி அவருடைய சகோதரர் அசோக்குமார், திமுக நிர்வாகி சாமிநாதன் ஆகியோர் மீது மேலும் இரண்டு சட்ட விரோதப் பண பரிவர்த்தனை வழக்குகள் பதியப்படுவதற்கான வாய்ப்புகள் நிறையவே தென்படுகின்றன.
இந்த வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்துவிட்டால் செந்தில் பாலாஜியின் சிறைவாசம் இப்போதைக்கு முடியாது என்பதுதான் எதார்த்தம்.
சரி, இது குறித்து சட்ட நிபுணர்கள் கூறுவது என்ன?…
“இப்படி புதுப் புது வழக்குகள் பதிவு செய்யப்பட்டால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்னும் மூன்று மாதங்களை சிறையிலேயே கழிக்க வேண்டிய நெருக்கடியான சூழல்தான் ஏற்படும். ஏனென்றால் திமுக நிர்வாகி சாமிநாதன் டெல்லி, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் பினாமி பெயர்களில் நிதி நிறுவனங்களை செந்தில் பாலாஜிக்காக நடத்தி வருவதாக கூறப்படுவதால் இந்த வழக்கை டெல்லியில் வைத்து விசாரித்தால்தான் முழு உண்மையையும் கண்டறிய முடியும் என்ற கோரிக்கையை வைப்பதுடன், செந்தில் பாலாஜியை இந்த வழக்குகள் தொடர்பாகவும் தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்கவேண்டும் என்ற வேண்டுகோளையும் அமலாக்கத்துறை வைத்தால் அதை கோர்ட் நிராகரிக்க முடியாத நிலைதான் ஏற்படும்.
இதனால் செந்தில் பாலாஜியை டெல்லி திகார் சிறைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில் இப்போதே அமலாக்கத்துறை தீவிரமாக இறங்கிவிட்டதையும் உணர முடிகிறது.
மேலும் சுப்ரீம் கோர்ட் உத்தரவால் நடத்தப்பட்டு வரும் லஞ்ச வழக்குடன் இந்த புதிய வழக்குகளும் சேர்ந்து கொண்டு செந்தில் பாலாஜிக்கு குடைச்சலை கொடுக்கும். அவருடைய தம்பி அசோக்குமார் கைது செய்யப்பட்டு விட்டால் அமலாக்கத் துறையின் வழக்குகள் இன்னும் வேகம் எடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி
இப்படி இரு முனை தாக்குதலில் செந்தில் பாலாஜி சிக்கிக்கொண்டால் அது திமுக அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் பெரும் சோதனையாகவே அமையும்.
அவருடைய அமைச்சர் பதவியை பறிக்க வேண்டிய கட்டாய நிலையும் உருவாகும்.
ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்ட போதே அமலாக்கத்துறைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு கொடுத்து இருந்தால் லஞ்ச வழக்கு மட்டுமே அவருக்கு சிக்கலை கொடுத்திருக்கும். வருமானவரித்துறை சோதனைகள், அமலாக்கத்துறையின் அதிரடி ரெய்டுகளும் நடத்தப்பட்டு இப்படி அடுக்கடுக்கான வழக்குகள் அவர் மீது பாய காத்து இருப்பதற்கான வாய்ப்புகளையும் தவிர்த்து இருக்கலாம். கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி என்று புலம்பும் நிலையும் ஏற்பட்டிருக்காது.
ஏனென்றால் இனி கபில் சிபல், முகுல் ரோத்தகி போன்ற சுப்ரீம் கோர்ட்டின் பிரபல வக்கீல்கள் ஆஜராகி வாதாடினாலும் செந்தில் பாலாஜியை சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவது குதிரை கொம்பான விஷயமாகவே இருக்கும்” என்று அந்த சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். செந்தில் பாலாஜிக்கு இது மிகவும் சோதனையான காலம் போல்தான் தெரிகிறது!