அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரரின் சொகுசு பங்களா முடக்கம் ; அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை…!!!
Author: Babu Lakshmanan10 August 2023, 8:32 am
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில், தற்போது அவரை 5 நாட்களில் காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர் கொடுக்கும் வாக்குமூலங்களை வீடியோவாக பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம் நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் புதிய வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவியது.
இதனிடையே, செந்தில் பாலாஜியின் கைதை தொடர்ந்து 4 முறை அவரது சகோதரர் அசோக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், ஒருமுறை கூட அவர் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், அசோக்குமாரின் மனைவி நிர்மலாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நிர்மலா பெயரில் கட்டப்பட்டு வரும் சொகுசு பங்களாவின் முன் பகுதியில் இது தொடர்பான நோட்டீஸும் ஒட்டப்பட்டுள்ளது.
அசோக்குமாரின் மனைவி நிர்மலா சொத்து ஆவணங்களுடன் சோதனை நடைபெறும் பங்களாவில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று, கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அசோக் வீட்டிலும் சம்மன் ஒட்டினர்.
அதனைத் தொடர்ந்து, கரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை வழங்கினர். அந்த கடிதத்தில் அசோக் குமாரின் மனைவி நிர்மலா பெயரில் இருக்கும் பங்களா வீட்டின் சொத்துக்களை முடக்கியுள்ளதாகவும், அமலாக்கத்துறை சென்னை இணை இயக்குனரிடம் முன் அனுமதி பெறாமல் சொத்துக்களை மாற்றவோ, விற்பனை செய்யவோ, வேறுவிதமாக கையாளவோ கூடாது என குறிப்பிட்டுள்ளனர்.