5 ஆண்டுகள் ஆகிவிட்டது, கடனும் வந்து சேரல.. கட்டிடமும் கட்டப்படல : சு.வெங்கடேசன் எம்பி ட்வீட்!!!
Author: Udayachandran RadhaKrishnan10 August 2023, 4:07 pm
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பேசுகையில், மதுரை எய்ம்ஸ் குறித்து நிறைய தகவல்கள் உள்ளன. அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மதிப்பீடு ஆனது 1200 கோடியிலிருந்து 1900 கோடியாக உயர்ந்துள்ளது.
நில ஆக்கிரமிப்பை தாமதப்படுத்தியதன் காரணமாகவே 1200 கோடியிலிருந்து 1900 கோடியாக அதன் மதிப்பு உயர்ந்திருக்கிறது.
எனவே, இந்த பணி தாமதமானதற்கான பழியை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை மத்திய அரசு மேல் சுமத்த கூடாது.
அதே சமயம், கொரோனா சமயத்தில் எங்களால் பார்வையிட முடியாமல் போனது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட நிதி அதிகரிப்பால் தமிழக அரசுக்கு நிதி மற்றும் கடன் சுமை இல்லை என நிர்மலா சீதாராமன் கூறினார்.
மதுரை எய்ம்ஸ் குறித்து நிர்மலா சீதாராமன் தவறான தகவல்களை கூறுவதாக திமுக எம்பிக்கள் புகார் அளித்து, மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் காங்கிரஸ் மற்றும் என்சிபி எம்பிக்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மதுரை எய்ம்ஸ் சிறப்பாக அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக ஜெய்காவிடம் கடன் வாங்கிக் கட்டுகிறோம். என்றார் நிதியமைச்சர். “எப்போ? எப்போ?” என்று நாங்கள் கேள்வி எழுப்பினோம். 5 ஆண்டுகளாகிவிட்டது, கடனும் வந்து சேரவில்லை. கட்டிடமும் கட்டப்படவில்லை. கண்டித்து வெளிநடப்பு செய்தோம்’ என பதிவிட்டுள்ளார்.