பொதுமக்கள் காதில் பூ சுற்ற முயற்சி.. பால் விலை உயர்வுக்கு ஆவின் நிர்வாகமே காரணம் ; பால் முகவர்கள் நலச்சங்கம் குற்றச்சாட்டு!!
Author: Babu Lakshmanan12 August 2023, 7:35 pm
ஆவின் நிர்வாகத்தின் இயலாமையை உண்மையை மறைக்கும் வெற்று அறிக்கை என்று ஆவின் பால் விலை உயர்வு குறித்து தமிழக அரசின் விளக்கத்தை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கூறியதாவது :- தேனீர் கடை, உணவகங்கள், கேன்டீன், விழாக்கள் உள்ளிட்டவற்றுக்கு விநியோகம் செய்யப்படும் ஆவின் நிலைப்படுத்தப்பட்ட 5 லிட்டர் பால் பாக்கெட் விற்பனை விலையை இன்று (12.08.2023) முதல் 210 ரூபாயில் இருந்து லிட்டருக்கு 2 ரூபாய் வீதம் 10 ரூபாய் அதிகரித்து அதனை 220 ரூபாயாக ஆவின் நிர்வாகம் மாற்றம் செய்தது. அதனை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடுமையாக எதிர்த்ததோடு அந்த விற்பனை விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும் என அரசுக்கும் கோரிக்கை முன் வைத்தது.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் எதிர்ப்புகள் ஊடகங்களில் செய்திகளாக வெளியானதும் “கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை.. என்கிற கதையாக “நாங்கள் பால் விற்பனை விலையை உயர்த்தவில்லை, வணிக நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் விநியோகம் செய்யும் பாலின் விற்பனை விலையில் வித்தியாசம் இருக்கக் கூடாது என்பதற்காகவே மாற்றி அமைத்திருக்கிறோம்” என அவசர, அவசரமாக பொதுமக்கள் காதில் பூ சுற்றும் அறிக்கையை வெளியிட்டிருக்கும் ஆவின் நிர்வாகத்தின் தவறான செயல்பாடுகளை
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஏனெனில் ஆவினாக இருந்தாலும், தனியார் பால் நிறுவனங்களாக இருந்தாலும் பொதுவாகவே சிறிய வகை பால் பாக்கெட்டுகளோடு பெரிய வகை பால் பாக்கெட்டுகளை ஒப்பிடுகையில் அவற்றின் விற்பனை விலை குறைவாகவே
இருக்கும். உதாரணமாக 200 மிலி அளவு கொண்ட நிலைப்படுத்தப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டின் விற்பனை விலை 10.00 ரூபாயாகும்.
அதுவே 500 மிலி ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டின் விற்பனை விலை 22 ரூபாய் எனும் போது, 5 லிட்டர் பால் பாக்கெட்டின் விற்பனை விலை 210 ரூபாயாக இருப்பது தான் சரியான நிலைப்பாடாக இருக்க முடியுமே தவிர, வணிக நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யும் 5 லிட்டர் பால் பாக்கெட்டுகளும், பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் 500 மிலி பால் பாக்கெட்டுகளும் ஒரே விற்பனை விலையாக நிர்ணயம் செய்வது ஆவின் 5 லிட்டர் நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகளை வாங்கும் வணிக நிறுவனங்களை தனியார் பால் நிறுவனங்களுக்கு துரத்துகின்ற செயலாகும். சொல்லப் போனால் ஆவின் நிர்வாகத்தின் இந்த செயல்பாடுகள் யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போடுவதற்கு சமமாகும்.
ஒருவேளை அனைவருக்கும் ஒரே விற்பனை விலையாக நிர்ணயம் செய்வோம் என ஆவின் நிர்வாகம் அடம் பிடிக்குமானால் 500 மிலி பாக்கெட் 22 ரூபாய் எனும் போது, 200 மிலி அளவு பால் பாக்கெட்டின் விற்பனை விலையை 10.00 ரூபாயில் இருந்து 8.80 ரூபாயாக குறைக்கத் தயாரா..? என்பதை சம்பந்தப்பட்ட ஆவின் அதிகாரிகள்
தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.
மேலும், ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் உற்பத்தி மற்றும் விற்பனையை குறைக்கவே தற்போது 5 லிட்டர் நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட் விற்பனை விலையில் 10.00 ரூபாய் உயர்த்தி ஆவின் நிர்வாகம் மாற்றம் செய்துள்ளது.
ஏனெனில் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் “யானை பசிக்கு சோளப்பொறியை உணவாக கொடுத்தது போல்” பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு வெறும் 3 ரூபாய் உயர்த்தி வழங்கி விட்டு ஆவின் நிறைகொழுப்பு பாலின் விற்பனை விலையை (ஆரஞ்சு பாக்கெட்) லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்ட பிறகு
பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்ததால் அதன் விற்பனையும் கடுமையாக சரிவடைந்தது. அதனால் பொதுமக்கள் ஆவின் நிறைகொழுப்பு ( ஆரஞ்சு நிற) பால் பாக்கெட்டுகள் வாங்குவதை குறைத்துக் கொண்டு ஆவின் நிலைப்படுத்தப்பட்ட (பச்சைநிற) பால் பாக்கெட்டுகளை வாங்கத் தொடங்கியதால் ஆவின் நிர்வாகமும், அரசும்
எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனை உயரத்தொடங்கியது.
குறிப்பாக கடந்தாண்டு ஆவின் நிறைகொழுப்பு பால் விற்பனை விலை உயர்வுக்கு முன் அந்த வகை பால் தமிழகம் முழுவதும் மாதாந்திர அட்டை மற்றும் பொது வணிகம் மூலமாக நாளொன்றுக்கு சுமார் 10.60 லட்சம் லிட்டராக இருந்த நிலையில் விலை, உயர்வுக்குப் பிறகு சுமார் 2.89 லட்சம் லிட்டர் குறைந்து, சுமார் 7.71 லட்சம் லிட்டராக
சரிவடைந்தது.
அதுவே நிறைகொழுப்பு (ஆரஞ்சு நிற) பால் விற்பனை விலை உயர்வுக்கு முன் நாளொன்றுக்கு சுமார் 10.92லட்சம் லிட்டராக இருந்த நிலைப்படுத்தப்பட்ட (பச்சை நிற)பால் பாக்கெட் விற்பனை சுமார் 2.70 லட்சம் லிட்டர் அதிகரித்து சுமார் 13.62 லட்சம் லிட்டராக உயர்ந்தது. நிறைகொழுப்பு பால் விற்பனை அதிகரிக்கும், அதன் மூலம் அதிக
லாபம் ஈட்டலாம், நமது கஜானாவை நிரப்பிக் கொள்ளலாம் என்று நினைத்த ஆவின் நிர்வாகம் மற்றும் அப்போதைய பால்வளத்துறை அமைச்சரின் பகல் கனவு கடைசி வரை பலிக்கவில்லை.
இதனை சற்றும் எதிர்பாராத ஆவின் நிர்வாகம் நிலைப்படுத்தப்பட்ட பாலினை தட்டுப்பாடாக விநியோகம் செய்ய தொடங்கியதால் அதனை ஊடகங்கள் மூலம் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வெளிச்சம் போட்டுக் காட்டியது. அப்போது தான் கோவை, நெல்லை, தூத்துக்குடி, சென்னை என வரிசை கட்டி 4.5% கொழுப்பு சத்து கொண்ட நிலைப்படுத்தப்பட்ட பாலில் இருந்து 1% கொழுப்பு சத்து அளவை குறைத்து, 3.5% கொழுப்பு சத்து கொண்ட பாலினை அதே விற்பனை விலைக்கு பசும்பால் என வழங்கி லிட்டருக்கு 8.00 ரூபாய் மறைமுக விற்பனை விலை உயர்வை பொதுமக்கள் தலையில் ஆவின் நிர்வாகம் வலுக்கட்டாயமாக திணித்தது.
ஏற்கனவே திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் லிட்டருக்கு 3 ரூபாய் ஆவின் பால் விற்பனை விலையை குறைத்தது, அந்த இழப்பை ஆவினுக்கு மானியமாக அரசு வழங்காதது, யானை பசிக்கு சோளப்பொறியை உணவாக கொடுத்தது போல்
உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி வழங்கியது என இழப்புகள் வரிசை கட்டி நிற்க, ஆவினுக்கான பால் கொள்முதலும் கடும் சரிவை சந்தித்தது.
இதனால் ஆவினுக்கான பால் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்க, பால்வளத்துறை அமைச்சர், ஆவின் நிர்வாக இயக்குனர் என மாற்றங்கள் நிகழ்ந்த போதும், ஆவினில் மாற்றம் நிகழாமல் தற்போது வரை மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வெண்ணெய் மற்றும் பால் பவுடர் கொள்முதல் செய்து, அதன் மூலம் பால் உற்பத்தி செய்து பால் தட்டுப்பாட்டை ஈடு செய்து வருவதையும், தங்களின் இயலாமையை மறைக்கவும் ஆவின் நிர்வாகம் உண்மைக்குப் புறம்பான வெற்று அறிக்கையை வெளியிட்டிருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும், என தெரிவித்துள்ளார்.