மக்கள் மனநிலை தெரியாமல் ஆளுநர் தனி உலகத்தில் உள்ளார் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!!
Author: Udayachandran RadhaKrishnan14 August 2023, 2:06 pm
நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் வாழ்க்கையில் மத்திய அரசு விளையாடுகிறது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்டது வருந்தத்தக்க விஷயம். மாணவர் ஜெகதீஸ்வரன் இழப்பை கொச்சைப்படுத்தும் விதம் கண்டிக்கத்தக்கது.
நீட் தேர்வால் மாணவர், அவரது தந்தை தற்கொலை செய்துகொண்டது மிகுந்த வேதனை அளிக்கக்கூடியது. மாணவர்கள் எந்த தவறான முடிவும் எடுக்கக்கூடாது. நீட் தேர்வை ரத்து செய்யும் வரை திமுக சட்ட போராட்டத்தை தொடர்ந்து நடத்தும். நீட் தேர்வு விவகாரத்தில் மக்களின் மனநிலை தெரியாமல் ஆளுநர் அவருக்கென்று ஒரு தனி மனநிலையில் பேசுகிறார்.
எனவே, மாணவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும், முதலமைச்சர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். கடந்த முறை நான் டெல்லி சென்று பிரதமர் மோடியை பார்த்தபோதும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளேன்.
திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனால் மாணவர்கள் இதுபோன்ற தவறான முடிவை இனி எடுக்க கூடாது என்றும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் காலம் விரைவில் வரும் எனவும் கூறினார்.