டாப் கியருக்கு மாறிய லஞ்ச வழக்கு!… திகைப்பில் திமுக, செந்தில் பாலாஜி!
Author: Udayachandran RadhaKrishnan18 August 2023, 9:17 pm
அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு கோடியே 64 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட வழக்கில் சட்டவிரோத பணப்பிரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அவரை கைது செய்து கடந்த ஏழாம் தேதி தங்களது காவலில் எடுத்து ஐந்து நாட்கள் தீவிர விசாரணையும் நடத்தியது.
தீவிரம் காட்டிய ED
அதன்பின்பு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 12ம் தேதி 120 பக்க குற்றப்பத்திரிகையும், 3000 பக்க சாட்சிய ஆவணங்களையும் தாக்கல் செய்தது.
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரித்து முடித்த உடனேயே கோர்ட்டில் ஆஜர் படுத்தியதுடன் அன்றே அவர் மீதான குற்றப்பத்திரிகையையும் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தற்போது அவர் வரும் 25-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரை ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் இப்படி நெருக்கடி அளிக்கப்பட்டதாகவும், செந்தில் பாலாஜியை மீண்டும் ஒரு வாரமோ அல்லது ஐந்து நாட்களோ தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்துவதற்காகவும் அமலாக்கத்துறை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சிறப்பு நீதிமன்றத்தில் சிக்கிய செந்தில் பாலாஜி!
அதே ஆகஸ்ட் 12ம் தேதி சென்னையில் உள்ள எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி எம்எல்ஏவாக இருப்பதால் அவர் மீதான பண மோசடி வழக்கை இந்த கோர்ட்டில் விசாரிப்பதுதான் உகந்ததாக இருக்கும் என்று ஒரு மனுவையும் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது. இதைக் குறிப்பிட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும் ஒரு தகவல் குறிப்பையும் சமர்ப்பித்தது.
இதை இருதினங்களுக்கு முன்பு ஏற்றுக்கொண்ட நீதிபதி அல்லி, உடனடியாக சட்டவிரோத பணப்பிரிவர்த்தனை வழக்கை எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியும் உத்தரவிட்டார். இதுவும் மின்னல் வேகத்தில் நடந்த ஒரு நிகழ்வாகவே அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
அமலாக்கத்துறை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அந்த தகவல் குறிப்பில் “அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது சகோதரர் அசோக்குமார் மற்றும் உறவினர்கள் சண்முகம், கார்த்திகேயன் ஆகியோர் அப்போதைய போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்களுடன் கூட்டு சேர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டது அமலாக்கத்துறையின் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர், கண்டக்டர், இளநிலை இன்ஜினியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
செந்தில் பாலாஜி, அவருடைய மனைவி மேகலா இருவரின் வங்கிக் கணக்குகளையும் ஆய்வு செய்தபோது, அதில் பெருமளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது, தெரியவந்தது. இதற்கான அனைத்து ஆதாரங்களையும் அமலாக்கத்துறை திரட்டி இருக்கிறது.
வேகம் எடுக்கும் வழக்கு விசாரணை!
குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காண்பித்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தியபோது அவர் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. அதேநேரம் ஆதாரங்களை அவரால் மறுக்கவும் இயலவில்லை. விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை. விசாரணையில் இருந்து நழுவும் முயற்சியில்தான் ஈடுபட்டார்”என்று கூறப்பட்டிருந்தது.
அதேநேரம், அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பாக தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் வருகிற 28ம் தேதி சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கும் எடுத்துக் கொண்டுள்ளது. அப்போது அமைச்சருக்கு குற்றப் பத்திரிகை நகல் வழங்கப்பட்டு சாட்சிகளின் விசாரணையும் தொடங்கப்பட்டு விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவை எல்லாமே இந்த வழக்கு டாப் கியருக்கு மாறி இருப்பதை வெளிப்படையாக காட்டுகிறது. இது திமுகவையும், செந்தில் பாலாஜியை திகைப்பில் ஆழ்த்தி உள்ளது.
மேலும் சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசும் தங்களிடம் நிலுவையில் உள்ள இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை செப்டம்பர் 30ம் தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.
“அமலாக்கத்துறை கூறியுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி கோர்ட்டில் வாதிடுவது கடினமான ஒன்றாகவே இருக்கும்”என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கிடுக்குப்பிடி விசாரணையில் செந்தில்பாலாஜி
“ஆதாரங்களை காட்டியபோது மறுக்கவில்லை என்று அமலாக்கத்துறை சிறப்பு நீதி மன்றத்தில் கூறுவதை செந்தில் பாலாஜி மறுக்க நேர்ந்தால் அவரை தங்களது காவலில் வைத்து விசாரணை நடத்தியபோது எடுத்த வீடியோ ஆதாரங்களை அங்கே அமலாக்கத்துறை அதிகாரிகள் நிச்சயம் சமர்ப்பிப்பார்கள். அதனால் விசாரணையின்போது, செந்தில் பாலாஜி நடந்துகொண்ட விதமும் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் நடந்து கொள்வதையும் ஒப்பிட்டு பார்த்து முடிவு செய்யும் நிலை வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு ஏற்படும்.
அதேபோல அரசு வேலைக்காக லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட 2012, 2013ம் ஆண்டு கால கட்டத்தில் அவருடைய வங்கிக் கணக்கிலும், அவரது மனைவியின் வங்கி கணக்கிலும் பெருமளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நிச்சயம் தாக்கல் செய்யும். அந்தப் பணம் இப்போது எங்கள் வங்கிக் கணக்கில் இல்லையே என்று மறுத்து செந்தில் பாலாஜியால் எளிதில் தப்பி விடவும் முடியாது.
ஏனென்றால் லஞ்சமாக பணம் கொடுத்தவர்கள் அனைவருமே செந்தில் பாலாஜி, அவருடைய மனைவி மேகலா இருவரின் வங்கிக் கணக்கிலும்தான் டெபாசிட் செய்துள்ளனர் என்பதற்கான வலுவான ஆதாரங்களை அமலாக்கத்துறை தன்னிடம் வைத்துள்ளது என்கிறார்கள்.
அசோக்குமாருடன் கூட்டுச்சதி
அதேபோல செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டிருப்பதாக கூறி அதற்கான ஆதாரங்களையும், அமலாக்கத்துறை திரட்டி வைத்துள்ளது. இதனால் அவரும் இந்த வழக்கில் சிறைத் தண்டனை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி 2018 ஆண்டு செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டபோது, அதில் சென்னை நகரமும் சேர்க்கப்பட்டது. அப்போதே செந்தில் பாலாஜி மீது
லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை சென்னையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றமும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
எனினும் 2021ம் ஆண்டு மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திமுகவில் சேர்ந்து வெற்றி பெற்றிருந்த செந்தில் பாலாஜிக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் இந்த விசாரணையின்போது வழக்கை தொடர்ந்தவரான சண்முகம் தங்களுக்குள் சமாதானம் ஏற்பட்டுவிட்டதாக கோர்ட்டில் கூறியதையடுத்து 2021-ம் ஆண்டு அந்த வழக்கை ரத்துசெய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
டாப் கியரில் செல்லும் வழக்கு
இந்த உத்தரவை எதிர்த்துத்தான் அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை
2022 டிசம்பர் மாதம் தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீதான வழக்கை தனிப்பட்ட முறையில் தொடர்ந்து விசாரிக்கலாம் என்றும் உத்தரவிட்டது.
இதில் குறிப்பிட்டுக் கூற வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இதே வழக்கு மீண்டும் எம்பி எம்எல்ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கே சென்றுள்ளது. ஏற்கனவே நான்கு ஆண்டுகள் விசாரிக்கப்பட்ட வழக்கு இது என்பதாலும் இப்போது அமலாக்கத்துறை தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாலும் செந்தில் பாலாஜி மீதான லஞ்ச வழக்கு விசாரணை இனி படுவேகம் எடுக்கும் நிலை உருவாகிவிட்டது.
விரைவில் தீர்ப்பு?!!
வழக்கமாக எம்பி எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகளில் அதிகபட்சமாக ஓராண்டுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது நியதி. ஆனால் ஏற்கனவே இதே கோர்ட்டில் இந்த வழக்கில் விசாரணை நடந்திருப்பதால் 5 அல்லது 6 மாதங்களுக்குள் தீர்ப்பு கூறப்பட்டு விடும் வாய்ப்பும் உள்ளது.
இந்த தகவல்கள் எல்லாம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லிக்கு நன்றாக தெரிந்தும் இருக்கும். அதனால்தான் அவர் அமலக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் அதன் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு எம்பி எம்எல்ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கை அனுப்பி வைத்திருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ளமுடிகிறது”என்று அந்த சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.எது எப்படியோ, செந்தில் பாலாஜி வழக்கில் விரைவில் தீர்ப்பு வந்தால் சரிதான்!