கொஞ்ச நாள் பொறுங்க.. .நீட் தேர்வு இந்தியாவில் இருந்தே காணாமல் போய்விடும் : அமைச்சர் சாமிநாதன் பேச்சு!!!
Author: Udayachandran RadhaKrishnan20 August 2023, 1:41 pm
நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் 28 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் மத்திய அரசு நீட் தேர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுகவின் இளைஞர் அணி , மாணவர் அணி மற்றும் மருத்துவரணி சார்பாக இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட இளைஞரணி , மாணவரணி மற்றும் மருத்துவர் அணி சார்பாக திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக உண்ணாவிரத போராட்டமானது நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். முன்னதாக நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த மாணவி அனிதாவின் உருவப்படத்திற்கு அமைச்சர் உட்பட கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன் ஒன்றிய அரசின் நீட் தேர்வு காரணமாக சாமானிய ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோவதாகவும் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் இருந்தபோது நுழைவுத் தேர்வு கொண்டு வந்த போது அதனை எதிர்த்து திரும்ப பெறச் செய்தவர் என தெரிவித்தார்.
தமிழகத்தில் மட்டுமல்லாது உலக அளவில் மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய சிறந்த மருத்துவர்களை கொண்டுள்ள தமிழ்நாட்டில் மருத்துவர்கள் அனைவரும் நீட் தேர்வுக்கு முன்பாக மருத்துவர் ஆனவர்கள் எனவும் , வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும், மத்தியில் I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமையும் போது நீட் தேர்வு காணாமல் போகும் எனவும் தெரிவித்தார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்