கழிவறையில் அமர்ந்து 31 மணிநேரம் பயணம்… பூட்டை உடைத்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி ; ரயில்நிலையத்தில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
22 August 2023, 7:54 pm

எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் இல்லாமல் 2 நாட்களாக கழிவறைக்குள் பூட்டிய படி, பட்டினியோடு பயணம் செய்த வட மாநில வாலிபரை அரக்கோணத்தில் ஆர்பிஎப் போலீசார் கதவை உடைத்து மீட்டனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து (வண்டி எண் 18189) எக்ஸ்பிரஸ் ரயில், கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு டாட்டா நகரில் புறப்பட்டது . அப்போது எஸ்-2 கோச் கழிவறை கதவு மூடப்பட்டிருந்தது. கழிவறை கதவு திறக்கப்படும் என்று பயணிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு மணி நேரமல்ல… ஒரு நாளும் கடந்தது. 2வது நாளும் கடந்தது.

ஆனாலும் அந்த கழிவறையின் கதவு திறக்கப்படவே இல்லை. இதற்கிடையே, ரயில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஸ்டேஷனுக்கு அருகில் வந்து கொண்டிருந்தது. கழிவறை கதவு திறக்கப்படாதது குறித்து எஸ்-2 கோச்சில் பயணம் செய்த பயணிகள், டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து, டிக்கெட் பரிசோதகர் அரக்கோணம் ஆர்பிஎப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ரயில் அரக்கோணம் ஸ்டேஷனில் மதியம் 2 மணி 6 நிமிடங்களுக்கு வந்து நின்றது. கையில் ஸ்க்ரூ டிரைவர் மற்றும் சுத்தியலுடன் தயாராக நின்று கொண்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் தெய்வநாயகம் தலைமையிலான போலீசார், ரயில்வே ஊழியர்கள் அரக்கோணத்தில் எஸ் 2 கோச்சில் ஏறி கதவை திறக்குமாறு தொடர்ந்து தட்டினர்.

ஆனாலும் கழிவறை கதவு திறக்கப்படவே இல்லை. இதைத் தொடர்ந்து, வேறு வழி இல்லாமல் கழிவறை கதவின் லாக் உடைத்து போலீசார் திறந்தனர். அப்போது கழிவறைக்குள் 18 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் இருந்தார். அவரை பரிசோதனை செய்ததில், டிக்கெட் எதுவும் இல்லாமல் இருந்தது தெரிந்தது.

அவரை மீட்டு கீழே இறக்கி போலீசார் விசாரணை நடத்தியதில், சோகன் தாஸ் என்று பெயர் மட்டும் தெரிந்தது. அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், ரயில் அரக்கோணத்தில் இருந்து 15 நிமிட காலதாமத்தில் புறப்பட்டு சென்றது.

அதேநேரம் தொடர்ந்து இந்தியிலேயே வட மாநில வாலிபர் பேசிக் கொண்டிருந்தார். வேறு எந்த தகவலும் அவரிடம் இருந்து பெற முடியவில்லை. அரக்கோணம் ஆர்பிஎப் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிக்கெட் இல்லாமல் ரயில் கழிவறைக்குள் புகுந்த வட மாநில வாலிபர் கதவை பூட்டிக்கொண்டு உள்ளேயே பசி பட்டினியோடு பயணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 450

    0

    1