திருமண மேடையில் கழுத்தை நீட்ட மறுத்த பெண்… ஷாக்கான மாப்பிள்ளை… இறுதி நேரத்தில் நடந்த டுவிஸ்ட்…!!
Author: Babu Lakshmanan23 August 2023, 11:09 am
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நடக்க இருந்த திருமணத்தின் போது மணப்பெண் தாலியைப் பறித்து உண்டியலில் போட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆதியக்குடி பகுதியைச் சேர்ந்த பாலுசாமி-சாரதாதேவி தம்பதியரின் மகன் சரவணன் (29) கணினி பட்டதாரியான இவர் அயல்நாட்டில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் சின்னகீரமங்கலம் வத்தாப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் – வாசுகி தம்பதியரின் மகளான கிருஷ்ணபிரியா (21) என்பவருக்கும் திருமணம் செய்ய இரு குடும்பத்தினர், கடந்த இரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்வதாக பேசி முடிவு செய்து நேற்று திருமணம் நடக்க இருந்தது.
இந்த சூழலில், இரு குடும்பத்தினர் தரப்பிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் திருவாடானை அருள்மிகு ஆதி ரெத்தினேஸ்வரர்
ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கே இருவருக்கும் திருமணம் செய்து கொள்ள கோயில் நிர்வாகத்தில் உள்ள திருமண பதிவேட்டில் மணப்பெண்ணும், மணமகனும் கையெழுத்தும் போட்டு கோவிலில் ரசீதும் பெற்று கொண்டு, திருமணத்திற்கு தயாரான இரு குடும்பத்திற்கும் அதிர்ச்சி தரும் வகையில் ஒரு சம்பவம் நடந்தேறியது.
நடக்க இருக்கும் விபரீதம் தெரியாமல் இருதரப்பினரும் திருமண ஏற்பாடுகள் செய்திருந்த நிலையில், திருமணம் நடத்துவதற்கு அனைத்து சடங்குகளும் முடிந்த நிலையில், மணமகன் தாலி கட்ட நேர்ந்தபோது, மணப்பெண் தாலியை பறித்து தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை எனக்கூறி தாலியை கோயில் உண்டியலில் போட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாம் மணப்பெண்ணிடம் விசாரித்தபோது, பெற்றோர்கள் வற்புறுத்தியதால் தான் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டதாகவும், தனக்கு தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாததால் வேண்டாம் என்று கூறி தாலியை கோவில் உண்டியலில் போட முயற்சித்து உள்ளதாகவும் மணப்பெண் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இருவீட்டார்கள் மணப்பெண்ணிடம் இருந்த தாலியை பிடிங்கி கட்டுமாறு வற்புறுத்தவே, வேறு வழியின்றி மணப்பெண் தொடர்ந்து திருமணத்திற்கு மறுக்கவே அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த திருவாடானை காவல் ஆய்வாளர் ஜெயபாண்டியன் சம்பவ இடத்திற்கு வந்த இரு வீட்டாரிடமும் பேசி சமரச பேச்சுவார்த்தை நடத்தியும், மணப்பெண் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாத நிலையில் இந்த திருமணம் நின்று போனது.
இதனால் மணமகன் தரப்பில் இருந்து திருவாடனை காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.