வாய்ப்பு இருந்தால் உதயநிதி முதலமைச்சராக வரலாம்… அமைச்சரின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் ஆதரவு

Author: Babu Lakshmanan
23 August 2023, 2:19 pm

வாய்ப்பு இருந்தால் தமிழகத்தின் முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் வரலாம் என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஒத்தக்கடை அருகில் உள்ள சேவா சங்கம் பெண்கள் பள்ளியில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறியதாவது :- தமிழ்நாட்டை பொறுத்தவரை நீட் தேர்வால் கிராமப்புறங்களில் வாழக்கூடிய ஒடுக்கப்பட்ட, மிகப் பின்தங்கிய பட்டியலின மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் நீட் தேர்வு கேட்கப்படுகின்ற கேள்விகள் மத்திய அரசின் பாடத்திட்டத்தில் உள்ளடக்கியதாக உள்ளது. மாணவர்கள் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்து தேர்வுக்கு செல்கின்றனர்.

தற்பொழுது பல்வேறு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. வசதி உள்ள மாணவர்கள் தனியார் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்கிறார்கள். சிறுசிறு ஊர்களில் பயிற்சி மையங்கள் கிடையாது. அவர்கள் படிக்க வேண்டும் என்றால் அதிக செலவு ஏற்படுகிறது. நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் உயிர் நீத்துக்கொள்ளுவது வருந்தத்தக்கது. ஆட்சியில் இருக்கக்கூடிய திமுக அமைச்சர் உதயநிதி தலைமையில் நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் நடத்தியது. மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதற்காக இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கும் நீட் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட வேண்டும். இதனை அமைச்சர்களிடம் வற்புறுத்துகிறேன், எனக் கூறினார்.

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபு தேர்வுக்கு ஆளுநர் மறுப்பு குறித்த கேள்விக்கு, ஆளுநர் வழக்கமாக திருப்பி அனுப்பி உள்ளார். தமிழக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தாலும் பல்வேறு முக்கிய நடவடிக்கை எடுத்து அனுப்பும் பொழுது, அதற்கு ஏற்பு தெரிவிக்காமல் சர்வாதிகாரி போல் மறுப்பது கோப்புகளை நிறுத்தி வைத்துக் கொள்வது மிகுந்த கண்டனத்திற்கு உரிய விஷயமாகும்.

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாலமாக ஆளுநர் இருக்க வேண்டும் தடைக்கல்லாக தடங்கலாக அவரது பதவி இருக்கிறது. அது வருந்துவதற்குரியது. தொடர்ந்து ஆளுநர் மாற்றப்பட வேண்டும் என கூறுகிறார்கள். பிஜேபிக்கு எதிராக இருக்கக்கூடிய மாநிலங்களுக்கு இடையூறு செய்கின்ற வகையில் மத்திய அரசு இருக்கிறது, எனக் கூறினார்.

தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் வருங்கால முதலமைச்சர் என அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ;- தற்பொழுது முதல்வர் என்ற இடம் காலியாக இல்லை. தமிழகத்தில் முதல்வர் வேக்கன்சி இருந்தால் அப்பொழுது அதைப் பற்றி யோசிக்கலாம். அவர் நூறு வருடம் வரை இருக்க வேண்டும்.

அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் உதயநிதிக்கு ஒரு வாய்ப்பு இருந்தால் வரட்டும். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசி இருப்பது அவர் தனிப்பட்ட விருப்பம். அவருடைய நெருங்கிய நண்பராக சகோதரராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். அவர் ஆசையை கூறி இருக்கிறார்.

அதிமுக மாநாடு செலவு செய்து நல்ல கூட்டத்தை கூட்டி இருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் மாநாடு போட்டு ஆட்சியைப் பிடிக்க போகிறேன் என அவருடைய விருப்பத்தை அவர் கூறுகிறார். யார் ஆட்சிக்கு வர போகிறார்கள் என்பது மக்களின் விருப்பம் தான்.

மீண்டும் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் தேர்தலில் நிற்பதற்கு கட்சி முடிவு செய்யும். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன். திமுகவில் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றாலும், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எந்த பதவியை இல்லாமல் 10 வருடம் தொண்டு செய்தேன். மத்திய அரசு 10 கோடி நிதியை பிடித்து வைத்துள்ளது. அப்படி கொடுத்திருந்தால் கூட நிறைய திட்டங்களை செயல்படுத்தி இருப்பேன், என கூறினார். இந்த நிகழ்வில் திருச்சி மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 293

    0

    0