தவறான சிகிச்சையால் விபரீதம்… மீண்டும் மீண்டும் ஆபரேசன் ; 24 மணி நேரமும் சிறுநீர் வெளியேறுவதால் பெண் அவதி ; மருத்துவர்கள் அலட்சியம்…!!
Author: Babu Lakshmanan25 August 2023, 2:12 pm
காஞ்சிபுரம் ; ஸ்ரீபெரும்புதூர் அருகே தவறான அறுவை சிகிச்சை அளித்ததால் 24 மணி நேரமும் சிறுநீர் வெளியேறியதால் பெண் அவதிக்குள்ளாகினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர் குப்பம் சுபஸ்ரீ நகரில் வாடகை வீட்டில் தங்கி ஷேர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருபவர் குமரன். இவரது மனைவி மஞ்சுளா (49). இவர் சிறுநீர் வெளியேறாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
கடந்த 05-05-2023 அன்று ஸ்ரீபெரும்புதூர் அருகே பென்னலூரில் உள்ள ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட்டுக்கு சொந்தமான அன்னை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மஞ்சுளா அவரது கணவர் குமரன் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, பரிசோதித்த மருத்துவர் மஞ்சுளாவுக்கு கர்ப்பப்பையில் கட்டி இருப்பதால் சிறுநீரக பிரச்சனை உள்ளது. ஆதலால் கர்ப்பப்பையை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால், மஞ்சுளா மற்றும் குமரன் இருவரும் சம்மதம் தெரிவிக்கவே, மருத்துவர்கள் கர்ப்பபையை அகற்றி உள்ளனர்.
கர்ப்பப்பையை அகற்றிய உடன் சிறுநீர் நிற்காமல் வந்து கொண்டே இருந்துள்ளது. இதனால், வேதனை அடைந்த மஞ்சுளா மறுபடியும் மருத்துவரிடம் கூற, அங்குள்ள மருத்துவர் நாங்கள் அறுவை சிகிச்சை செய்யும்பொழுது, தவறுதலாக நூற்றுக்கு இரண்டு பேருக்கு இப்படி தவறு நடக்கும். ஆகவே, தவறுதலாக சிறுநீரகக் குழாய் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே நீங்கள் மறுபடியும் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என கூறியதால், இரண்டாவது முறையும் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இரண்டாவது அறுவை சிகிச்சை செய்தும் சிறுநீர் 24 மணி நேரமும் நிற்காமல் வந்து கொண்டே இருந்துள்ளது. மீண்டும் மருத்துவரை சந்தித்து உள் நோயாளியாக இருந்து கொண்டே மருத்துவரிடம் விளக்கம் கேட்டதற்கு, நீங்கள் வீட்டுக்கு செல்லுங்கள், சில நாட்களில் சரியாகிவிடும் என்று கூறி 12.07.2023 அன்று வலு கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.
மருத்துவரின் ஆலோசனையின் படி வீட்டுக்குச் சென்று ஒரு மாதம் ஆகியும் 24 மணி நேரமும் சிறுநீர் வெளியேறுவதால் மஞ்சுளா அவதிப்பட்டு வருகிறார். மேலும் வீடு முழுவதும் சிறுநீரக துர்நாற்றம் வீசி வருவதால் வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்ய வற்புறுத்தி வருவதால் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் எங்கே செல்வது என்று தெரியாமல் நிர்கெதியாய் இருந்து வருகின்றனர்.
இதுகுறித்து மறுபடியும் அதே மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் கேட்ட பொழுது, நீங்கள் வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள், என அலட்சியமாக பதில் கூறி வெளியே அனுப்பி உள்ளனர். இதனால், அந்த குடும்பமே சோகத்தின் மூழ்கியுள்ளது.
ஆகவே, அரசு கவனம் செலுத்தி தவறான சிகிச்சை அளித்த குறிப்பிட்ட தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீண்டும் சிகிச்சை பெறுவதற்கு பணம் இல்லாமல் அவதிப்படுவதால் அரசு எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று மிக மன உளைச்சலுடன் குமரன் தெரிவித்துள்ளார்.