அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர்
நால்வரும் கடந்த 15 மாதங்களாக சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று மாறி மாறி ஏறி இறங்கிக் கொண்டிருந்தனர்.
எப்படியும் மீண்டும் அதிமுகவிற்குள் நுழைந்து கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றி விடலாம் என்று கணக்குப்போட்டு காய்களை நகர்த்தியும் வந்தனர்.
இவர்கள் தொடுத்த வழக்குகளின் எண்ணிக்கையை கேட்டால் தலையே கிறுகிறுத்துப் போய்விடும். ஒன்றல்ல… இரண்டல்ல, 2022 ஜூன் 23 பொதுக்குழு, அதே ஆண்டு ஜூலை 11 பொதுக்குழு மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அதிமுக தலைமை அலுவலகம் யாருக்கு என்பது உள்ளிட்ட வழக்குகளுக்காக பத்துக்கும் மேற்பட்ட முறை நீதிமன்றங்களை நாடி இருப்பார்கள். ஆனால் அதில் ஆரம்ப கட்டத்தில் மட்டும் ஒரு வெற்றி ஓபிஎஸ்க்கு கிடைத்தது.
அதன்பின்பு என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் அது டிவி செய்தி சேனல்கள், நாளிதழ்கள், சமூக ஊடகங்களுக்கு மட்டுமே தீனி போடும் பரபரப்பு செய்திகளாக இருந்தன. நீதிமன்ற தீர்ப்புகள் ஓபிஎஸ்சுக்கோ அவருடைய ஆதரவாளர்களுக்கோ எந்த விதத்திலும் பலன் அளிப்பதாக இல்லை.
முதலில் கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழுவும்
ஒற்றைத்தலைமையை கொண்டு வருவது உள்ளிட்ட தீர்மானங்களும் செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுக பொதுக்குழு செல்லாது. அதனால் 2022 ஜூன் 23-க்கு முந்தைய நிலையே நீடிக்க
வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச்சில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் இருவரும் பொதுக்குழு கூட்டமும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கினர். இதை எதிர்த்து, ஓபிஎஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
அதன் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வு ஜூலை 11ல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி தீர்ப்பளித்தது. அதேநேரம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் குறித்து இந்த வழக்கில் கேள்வி எதுவும் எழுப்பப்படவில்லை. இவை செல்லுமா? என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் முறையீடு செய்து நிவாரணம் பெறலாம் என குறிப்பிட்டது.
இதை தனக்கு கிடைத்த மிகப்பெரிய அஸ்திரமாக ஓபிஎஸ் கையில் எடுத்துக் கொண்டார். தானும், தனது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்கவேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் மூவரும் இணைந்து கொண்டனர்.
இதற்கிடையே அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பை அதிமுக தலைமை கழகம் வெளியிட்டது. இதற்கும் தடை விதிக்கவேண்டும் என்று ஓபிஎஸ்சும் அவருடைய ஆதரவாளர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு கூடுதல் கோரிக்கையை வைத்தனர்.
இந்த மனுவையும் சேர்த்து விசாரித்த தனி நீதிபதி குமரேஷ் பாபு, பொதுச்செயலாளர் தேர்தல் நடவடிக்கைகளை தொடர அனுமதித்தார். எனினும் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதித்து, இரு வழக்குகளையும் ஒன்றாக விசாரித்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கடந்த மார்ச் 28-ம் தேதி நீதிபதி குமரேஷ் பாபு அளித்த தீர்ப்பில், சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டமும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடத் தடையும் இல்லை”என்று குறிப்பிட்டார்.
இந்த தீர்ப்பை கேட்டு அதிர்ந்து போன ஓ பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் கொண்ட அமர்வு தொடர்ந்து 7 நாட்கள் விசாரித்து கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் ஆகஸ்ட் 25ம்தேதியான இன்று பரபரப்பு தீர்ப்பும் வழங்கினர்.
இருவரும் அளித்த தீர்ப்பில், “உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படையில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததால் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது. மேலும் தடை விதிப்பதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லை. பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானங்களுக்கும் தடை விதிக்க முடியாது” என்று கூறி அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.
இது ஓ பன்னீர்செல்வம், அவருடைய ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகிய நால்வரின் அரசியல் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி விட்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல் அவர்களின் அரசியல் ஆலோசகராக இருந்து வழிநடத்திச் செல்லும் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும் விழுந்த பலத்த அடியாகவும் பார்க்கப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளில் தொடர்ந்து பெரும் பின்னடைவை சந்தித்து வரும் ஓ பன்னீர்செல்வத்துக்கும், அவருடைய ஆதரவாளர்களுக்கும் இனி உச்சநீதிமன்றம் செல்லும் ஒரேயொரு வாய்ப்பு மட்டுமே உள்ளது.
ஆனால் பொதுக்குழு கூட்டம், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், அதிமுக தலைமை அலுவலகம், 2022 ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்று எந்தவொரு வழக்கிலும் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராத நிலையில் உச்சநீதிமன்றம் சென்றாலும் சாதகமாக அமையுமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் சுப்ரீம் கோர்ட்டில் இரு நீதிபதிகள் அமர்வு, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றத்திலேயே நிவாரணம் காணும்படி உத்தரவிட்டு இருந்தது.
தவிர பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் உறுதியாக நிற்பதால் அதிமுகவை ஓபிஎஸ் கைப்பற்றுவது குதிரைக் கொம்பான விஷயமாகத்தான் இருக்கும்.
ஏற்கனவே தனது வழக்கிற்காக உச்சநீதிமன்றத்தில் ஒரு நாள் வாதிடுவதற்கு 50 முதல் 60 லட்ச ரூபாய் கட்டணம் வாங்கும் பிரபல வக்கீல்களை நியமித்து 35 கோடி ரூபாய் வரை செலவு செய்துவிட்டதாக கூறப்படும் ஓபிஎஸ்-க்கு இனியும் மேல் முறையீடு தேவைதானா? என்ற கேள்வியும் எழுகிறது.
இந்த விவகாரத்தில் ஓ பன்னீர்செல்வத்தையும் அவருடைய ஆதரவாளர்களையும் யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி சென்னையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ்சும், அவருடைய ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தால் தொடர்ந்து கட்சிக்குள் இருந்தவாறே ஏதாவது குடைச்சலை கொடுத்துக் கொண்டிருக்க முடியும். ஓரளவு பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்களை தன் பக்கம் அவரால் இழுத்திருக்கவும் முடியும். மாறாக அன்று அவர் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து சூறையாடிய நிகழ்வுதான் அவருக்கு பெரும் வினையாக அமைந்துவிட்டது.
இனி அவர் டிடிவி தினகரனின் கட்சியில் இணைந்து செயல்படும் நிலைக்கு தள்ளப்படலாம். அல்லது தனிக் கட்சி தொடங்கி வரும் நாடாளுமன்றத் தேர்தல், தமிழக தேர்தல்களில் தனக்குள்ள பலத்தை நிரூபிக்க முயற்சிக்கலாம். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றுதான் நடக்கும் வாய்ப்புதான் உள்ளது.
அதேநேரம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது மகன் ரவீந்திரநாத்துக்கு எப்படியும் பாஜகவிடம் பேரம் பேசி ஒரு தொகுதியை வாங்கி விடவேண்டும் என்ற ஓபிஎஸ்-ன் பிளானும் தவிடு பொடி ஆகிப் போனது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பால் அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது என்றே சொல்லவேண்டும். கடந்த 20ம் தேதி மதுரையில் நடந்த அதிமுக மாநாடு மிகப்பெரிய வெற்றி கண்டது போல இந்த தீர்ப்பு EPSக்கு இன்னொரு மைல் கல்லாக அமைந்து விட்டதும் உண்மை.