இது மாதிரி 5 பேர் மீது புகார் இருக்கு.. பட்டியலை வெளியிடட்டுமா..? நடிகை விஜயலட்சுமி குறித்து கேள்வி சீமான் ஆவேச பதில்!
Author: Babu Lakshmanan1 September 2023, 2:33 pm
தன் மீது புகார் அளித்துள்ள நடிகை விஜயலட்சுமி குறித்து கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.
திருப்பூரில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது:- ஒவ்வொரு இடைத்தேர்தல் போதும் பொதுவான தேர்தல் நடத்தப்படுமா? ஓட்டுக்கு காசு கொடுப்பதை நிறுத்தினால் தேர்தல் செலவு குறையும். கடந்த காலத்தில் செய்த தவறுகளை எதிர்காலத்தில் சரிசெய்து கொள்வதற்கான பயணம் தான் இது.
இதனை குற்றச்சாட்டு என நம்பி இருந்தால் இத்தனை பேர் வரமாட்டார்கள். அவதூறுக்கு அஞ்சுவதில்லை. 13 வருடமாக ஒரே குற்றச்சாட்டு சொல்லி வருகிறார். அவசியம் அற்ற கேள்விகளை தவிருங்கள், அதற்காகத்தான் அதையே செய்கிறார்கள். யார் மனு கொடுத்தாலும் அதனை காவல் துறை விசாரிப்பார்கள், பயப்படும் ஆள் இல்லை நான். அந்த பயம் உங்களுக்கு இருக்கட்டும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியமற்றது. இது ஒரே நாடா? உணவு , பழக்க வழக்கம், கலாச்சாரம் மாறுபடும் போது எப்படி தேசத்தை ஒன்றாக்க முடியும். காவிரியில் தண்ணீர் பெற்று தாருங்கள் பிறகு ஒரே நாடு ஒரே தேர்தல் பார்க்கலாம். திமுகவில் ஊழல் சொத்து பட்டியல் வெளியிட்டதை வரவேற்கிறேன். அதிமுக சொத்து பட்டியலையும் வெளியிடுங்கள். கர்நாடகா ஊழல் குறித்தும் வெளியிடுங்கள். கர்நாடகாவில் தானே காவல் துறையில் பணியாற்றினார். அங்கேயே பாஜக தலைவராக வேண்டியது தானே, கர்நாடகாவில் சிங்கம் இங்கே வந்து அசிங்கம் என விமர்சித்தார். நூல் விலை தேர்தல் வருவதால் அதுவே குறையும்.
உயர்நீதிமன்றம் உண்மையை பேசி உள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது. தன்னாட்சி அமைப்புக்கள் என நாம் நம்பி வருகிறோம். அது நமது அறியாமை.
காமராஜர் கொண்டு வந்த திட்டம் மதிய உணவு திட்டம். 50 ஆண்டு மாறி மாறி ஆட்சி செய்து இப்போது தான் பிள்ளைகள் பட்டினி தெரிகிறதா? கல்வித்தரம் சரியாக உள்ளதா? அரசை நம்பாமல் வீட்டில் இருப்பவர்களும் கொடுத்து அனுப்பி விடுகின்றனர். அதனால் தான் சர்ச்சை எழுந்துள்ளது. திருடனுக்கு திருடன் பாதுகாப்பு, அதனால் தான் நம்மை ஒதுக்க முயல்கின்றனர்.
அமைச்சர் அதிகாலை டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என்கிறார். காலையில் திறந்தால் உயிரோடு இருப்பவரை பிணமாக அனுப்ப முடிவு செய்துள்ளார், என தெரிவித்துள்ளார்.