மேயர்களுக்கு எதிராக திமுகவில் வெடித்த மோதல் : தேர்தலில் பாதிக்குமா?….

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2023, 9:48 am

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,
கோவை, மதுரை, நெல்லை மாநகராட்சிகளில் மேயர்களுக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே செயல்பட்டு வருவது முதலமைச்சர் ஸ்டாலினை நிலைகுலையச் செய்துள்ளது.

அதுவும் திமுக தலைமை தலையிட்டு பஞ்சாயத்து செய்யும் அளவிற்கு நிலைமை மோசமாகிப் போனது பொதுமக்களை எரிச்சலடைய வைத்தும் இருக்கிறது.

மதுரையில் மோதும் அமைச்சர்கள்

கடந்தாண்டு திமுக தலைவர் ஸ்டாலினிடம் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி தனது ஆதரவாளரான இந்திராணியை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை மாநகராட்சி மேயராக உட்கார வைத்து விட்டார். ஆனால் அவருக்கும் மதுரையைச் சேர்ந்த இன்னொரு அமைச்சரான மூர்த்திக்கும் ஏழாம்பொருத்தம்தான்.

மேயர் இந்திராணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி திமுக மண்டலத் தலைவர்கள், குழுத் தலைவர்கள், கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில் விமர்சித்துப் பேசுவதும், வெளியில் போராட்டம் நடத்துவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

10 நாட்களுக்கு முன்பு 79-வது வார்டில் குடிநீரில் கழிவுநீர் கலந்துவருவது குறித்து முறையிட்டும் மேயரும், மாநகராட்சி நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மண்டல கூட்டத்தில் இது பற்றி புகார் தெரிவித்தும் எந்தப் பலனும் இல்லை என்றும் குற்றம்சாட்டி திமுக கவுன்சிலர் லக்‌ஷிகா ஸ்ரீ சாலைமறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மேயருடன் கவுன்சிலர் மோதல்

கோவை மாநகராட்சியிலும் இது போன்ற காட்சிகள் அவ்வப்போது அரங்கேறுகின்றன. சில நாட்களுக்கு முன்பு நடந்த கோவை மாநகராட்சி கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலரும், மத்திய மண்டல திமுக தலைவருமான மீனா லோகு, தங்களது மண்டலத்தில் இருந்து அனுப்பப்படும் கோப்புகள் அனைத்தையும் மேயர் உள்நோக்கத்துடன் நிறுத்தி வைப்பதாக குற்றம் சாட்டினார். இதனால் திமுக மேயர் கல்பனாவுக்கும் மீனாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அதிமுக ஆட்சியில் கவுன்சிலராக இருந்தநேரத்தில் கூட மரியாதையாக நடத்தினார்கள். ஆனால் இன்று வன்மத்துடன் மேயர் செயல்படுகிறார் என்று கோபத்துடன் கூறி மீனா வெளிநடப்பு செய்ய போவதாகவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கட்சியின் சக கவுன்சிலர்கள் அவரை சமாதானப்படுத்தி உட்கார வைத்தனர். இதுவும் திமுகவில் உட்கட்சி பூசல் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.

மேயரின் சகேதரரின் குரூரம்

இதற்கிடையே மேயர் கல்பனாவின் சகோதரர் குமார், கொடுத்த கடனை திருப்பிக் கேட்கிறார்கள் என்ற ஆத்திரத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்மணியின் வீட்டின் மீது தொடர்ந்து உணவு கழிவுப் பொருட்களையும் சிறுநீரையும் வீசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது கோவை மேயருக்கு சிக்கல் மேல் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இப் பிரச்சனையை திமுக கவுன்சிலர்கள் அறிவாலயத்துக்கு கொண்டு சென்றும் விட்டனர்.

திமுக தலைமைக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தீராத தலைவலியாக இருப்பது நெல்லை மாநகராட்சி. இதன் மேயராக திமுகவின் சரவணன் உள்ளார். கடந்த சில தினங்களாக இவருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.

தொடர்கதையாகி வரும் நெல்லை

ஏற்கனவே மேயரை மாற்றக்கோரி, கடந்த ஜனவரி, மார்ச் மாதங்களில் இரு முறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து 30க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தி இருந்தனர். அமைச்சர் உதயநிதிக்கு கடிதமும் அனுப்பினர். அதில், மேயர் சரவணன் மீது ஊழல், கமிஷன் உள்ளிட்ட புகார்கள் கூறப்பட்டிருந்தன. அத்துடன் மேயர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், கவுன்சிலர்களின் வார்டு பிரச்சினையை தீர்ப்பதில் கவனம் செலுத்த மறுப்பதாக குறை கூறியும் இருந்தனர்.

இந்த நிலையில்தான் மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை கட்சித் தலைமைக்கு அனுப்பியதாக அண்மையில் ஒரு பரபரப்பு தகவல் வெளியானது. எனினும் இதை மறுத்த சரவணன், நான் அண்ணா அறிவாலயம் சென்றது உண்மைதான். ஆனால், ராஜினாமா கடிதம் அளிக்கவில்லை என்று விளக்கமும் அளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை மாவட்ட பொறுப்பை கவனித்து வரும் அமைச்சர் தங்கம் தென்னரசு நெல்லை சென்று கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் விசாரணையும் நடத்தினார். அப்போது “மேயர் சரவணன் மாநகராட்சியில் நல்ல நிர்வாகம் கொடுக்கவேண்டும். கவுன்சிலர்கள் கொடுக்கின்ற கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

நெல்லை மாநகராட்சியின் பிரச்சனைக்கு தற்போதைக்கு தீர்வு காணப்பட்டிருந்தாலும் கூட பெரும்பான்மையான திமுக கவுன்சிலர்கள் மேயர் சரவணனுக்கு எதிராக இருப்பதால் இது எப்போது வேண்டுமானாலும் பூதாகரமாக வெடிக்கலாம் என்ற நிலைதான் காணப்படுகிறது.

திண்டிவனத்திலும் திண்டாட்டம்

மாநகராட்சி மேயர்களால் மட்டுமே இதுவரை நெருக்கடியை சந்தித்து வந்த திமுக தலைமைக்கு தற்போது நகராட்சியிலும் தொல்லை தொடங்கிவிட்டது. திண்டிவனம்
நகர்மன்றத் தலைவராக திமுகவின் நிர்மலா பதவி வகிக்கிறார். அவருடைய கணவர் ரவிச்சந்திரன் 8-வது வார்டு உறுப்பினர்.

இங்கு மொத்தமுள்ள 33 வார்டுகளில் 23 வார்டு உறுப்பினர்கள் திமுகவினர். இவர்களில் 13 பேர் நான்கு நாட்களுக்கு முன்பு நகர்மன்றத் தலைவர் நிர்மலாவுக்கு எதிராக திடீரென போர்க்கொடி உயர்த்தினர்.

அதிர்ச்சி கொடுத்த 13 திமுக கவுன்சிலர்கள்

அன்று திமுக கவுன்சிலர் புனிதா வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு வந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்போது பேசிய திமுக கவுன்சிலர்கள், “பல்வேறு கோரிக்கைகளை மக்கள் பிரச்னைகளாக எழுப்பியும், எவ்விதமான தீர்வும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அதனால் எங்கள் பகுதி மக்களைச் சந்திக்க முடியாமல் அசிங்கப்படுகிறோம். எங்களுக்கு இந்த மன்றத்தின் மீது நம்பிக்கையில்லை.

எங்களது தளபதி ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த நகர்மன்றம் செயல்படுவதால், ராஜினாமா கடிதத்தை தளபதி ஸ்டாலினிடம் கொடுக்கப் போகிறோம்” என்று கூறி 13 கவுன்சிலர்களும் கையொப்பமிட்ட ராஜினாமா கடிதத்தை உயர்த்திக் காட்டியவாறு வெளிநடப்பும் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,”நாங்கள் ஏதாவது கேட்டால் அமைச்சர் மஸ்தானின் மருமகன் ரிஸ்வானை கேளுங்கள் என்கிறார்கள். இவருடைய தலையீடு அதிகமாக இருக்கிறது என பகிரங்கமாக குற்றம்சாட்டவும் செய்தனர்.

இதுவும் திமுக தலைமைக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் பெயர் அடிபடுவதால் அவருடைய அமைச்சர் பதவிக்கும் ஆபத்து உருவாகி இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

திமுக வார்டு உறுப்பினர்களின் இந்த திடீர் கொந்தளிப்புக்கு என்ன காரணம்? என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுவது இதுதான்.

கவுன்சிலர்களை மதிக்காத மேயர்கள்

“பிரச்னைக்காகப் போராட்டம் நடத்துவது ஒருபக்கம் இருந்தாலும் திமுக கவுன்சிலர்களை மேயர் தரப்பு சரியாகக் கவனிப்பதில்லை, மதிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு பெரும்பாலான கவுன்சிலர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது.

என்னதான் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் பத்தாயிரம் ரூபாயும் நகர் மன்ற உறுப்பினர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டாலும் அது அவர்களுக்கு பாக்கெட் மணியாகத்தான் இருக்கும்.

கமிஷன் கிடைக்காததே பிரச்சனை

இன்னொரு முக்கிய காரணம் மாநகராட்சி தேர்தலின்போது வெற்றி பெறுவதற்காக குறைந்த பட்சம் 60 முதல் 70 லட்ச ரூபாய் வரை திமுகவினர் வாரி இறைத்திருப்பார்கள். அதேபோல நகர் மன்ற உறுப்பினர்களுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் 40 முதல் 45 லட்ச ரூபாய் வரை செலவு செய்திருப்பார்கள் என்பதும் நிச்சயம். அதனால் தேர்தலில்
செலவு செய்த பணத்தை எவ்வளவு விரைவாக எடுக்க முடியுமோ அவ்வளவு வேகமாக எடுத்து விடவேண்டும் என்கிற எண்ணம் இயல்பாகவே அவர்களுக்கு வந்து விடும்.

ஆனால் பெரும்பாலான மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும் திமுக அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் 20 முதல்50 கோடி ரூபாய் வரையுள்ள கான்டிராக்டுகளை எடுத்து விடுவதால் வார்டு உறுப்பினர்களுக்கு இன்று கமிஷன் கிடைப்பதே குதிரை கொம்பாகிப் போய்விட்டது.

இவர்களின் தலையீடு அதிகமாகி விட்டதால்தான் நம்மால் எதுவும் சம்பாதிக்க முடியவில்லையே என்ற கோபத்தை மேயர்கள், நகர் மன்ற தலைவர்கள் மீது காட்டுகின்றனர். இது நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கவும் செய்யலாம்.
ஏனென்றால் அப்போது தேர்தல் செலவை இவர்களை கட்சி தலைமை ஏற்கச் சொன்னால் அதை மறுக்கவே செய்வார்கள்.

தேர்தலில் திமுகவுக்கு குடைச்சல்

கட்சித் தலைமை அதிகமான தொகையை கொடுத்து தேர்தல் வேலைக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொன்னால் கூட தாங்கள் ஏற்கனவே செய்த செலவுத் தொகையை கணிசமாக எடுத்துவிட்டு பிறகுதான் மீதி இருக்கும் பணத்தில் வாக்காளர்களை கவனிப்பார்கள்.

மூன்று மாநகராட்சிகளில்தான் தற்போது பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இன்னும் சில மாநகராட்சிகளில் இது நீறு பூத்த நெருப்பாக இருக்கலாம். அதேபோல ஏராளமான நகராட்சிகளிலும் இப் பிரச்சனை மறைமுகமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. அது வெளிப்படையாக தெரியவில்லை என்றாலும் கூட தேர்தல் நேரத்தில் பூதாகரமாகி திமுகவுக்கு பெரும் குடைச்சலை கொடுக்கும் என்பதே நிதர்சனமான உண்மை” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 471

    0

    0