தனியாக வசித்து வந்த பெண்ணின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல்… பற்றி எரிந்த நெருப்பு ; திருப்பத்தூரில் பரபரப்பு..!!
Author: Babu Lakshmanan6 September 2023, 1:36 pm
திருப்பத்தூர் ; வாணியம்பாடி அருகே தனியாக வசித்து வந்த பெண்ணின் வீட்டின் மீது நாட்டு வெடி வீசப்பட்ட சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் ஆபிசர்ஸ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் ரயில்வே ஊழியர் சந்திரன். அவரது மனைவி இனியவள் (52). இவர்களுக்கு குகன் என்ற மகனும், ஆர்த்தி மற்றும் பிரீத்தி என்ற 2 மகள்களும் உள்ளனர். ரயில்வே ஊழியர் சந்திரன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவருடைய பணியை மகன் குகனுக்கு வழங்கப்பட்டு, அவர் சேலத்தில் பணியாற்றி வருகிறார். இரு மகள்களும் திருமணம் செய்து கொண்டு சென்று விட்டனர்.
இந்நிலையில் வாணியம்பாடியில் இனியவள் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென இரவு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் இனியவள் வீட்டின் மீது கம்பி சுற்றப்பட்ட நாட்டு வெடிவீசி விட்டு தப்பி சென்றுள்ளனர். வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், மின் விளக்குகள் மற்றும் கதவு உடைந்து சேதமானது.
உடனடியாக சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்த போது, வீட்டின் முன்பு நெருப்பு மற்றும் புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும், இருசக்கர வாகனத்தில் 2 பேர் செல்வதை பார்த்து உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்த போது, காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இனியவளை வெளியே அழைத்து வந்து, உடனடியாக அப்பகுதி மக்கள் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமார், ஆய்வாளர் பழனி ஆகியோர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு, அங்கு சிதறி கிடந்த வெடி துகள்கள், கம்பி ஆகியவற்றை கைப்பற்றி, வெடி வீசி சென்றது யார் என்றும் காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.