சனாதன வலையில் சிக்கிய உதயநிதி…! கி.வீரமணியால் பரிதவிக்கும் திமுக… திண்டாட்டத்தில் CM ஸ்டாலின்..!
Author: Babu Lakshmanan6 செப்டம்பர் 2023, 8:55 மணி
அமைச்சர் உதயநிதி சனாதனத்தை ஒழித்தே தீருவேன் என்று சவால் விடும் விதமாக திடீரென பேசியது அரசியல் கட்சிகளைக் கடந்து அனைவராலும் விவாதிக்கப்படும் ஒன்றாகிவிட்டது. இதனால் தேசிய அளவில் அரசியல் களமும் மாறிவிட்டதை உணர முடிகிறது. 28 எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணியில் பெரும் சலசலப்பும் ஏற்பட்டு இருப்பதும் நிஜம்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதி தேவையின்றி ஒரு சர்ச்சையை கிளப்பி விட்டு இண்டியா கூட்டணி தலைவர்களிடையே தீர்க்க முடியாத குழப்பத்தையும் ஏற்படுத்திவிட்டார் என்றே எதிர்க்கட்சிகளில் சில கருதும் நிலையும் தோன்றியுள்ளது.
இது 2024 தேர்தலில் எதிரொலித்தால் மோடி தலைமையிலான பாஜகவை வீழ்த்துவது மிக மிகக் கடினமாகிவிடும் என்று அந்த கட்சிகள் அச்சப்படும் பதற்ற சூழலும் எழுந்து இருக்கிறது.
கடந்த 2-ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோர் முன்னிலையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பேசும்போது ”கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். அதை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலையாக இருக்க வேண்டும்” என்று பொங்கினார்.
இக்கூட்டத்தில் உதயநிதி பேசியதன் பெரும் பகுதி நீட் ரத்து தேர்வு பற்றிதான் இருந்தது. ஆனாலும் சனாதன ஒழிப்பு குறித்து பேசப் போய்த்தான் அவர் பெரும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.
அவர் பேசிய வீடியோ காட்சி, தேசிய டிவி செய்தி சேனல்களிலும், சமூக ஊடகங்களிலும் அடுத்த அரை மணி நேரத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதும் விட்டது.
இதற்கு முதலில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது பாஜக தலைவர்கள் அமித்ஷா, ஜே பி நட்டா, ராஜ்நாத் சிங் என்றாலும் கூட நாட்டு மக்களையும் கொதிப்படைய வைத்தது. உதயநிதி சனாதன ஒழிப்பு பற்றி பேசியதற்கு அவர்கள் உடனடியாக கண்டனமும் தெரிவித்தனர். அவர் மீது பல்வேறு மாநில காவல் நிலையங்களில் புகார் செய்ததுடன் நீதிமன்றங்களில் வழக்கும் தொடர்ந்தனர். வட மாநில சாமியார்களில் ஒருவர் அமைச்சர் உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவித்து பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தினார்.
தமிழகம், கேரளா தவிர நாட்டின் பிற மாநிலங்களில் வாழும் இந்து மக்களில் பெரும்பான்மையானோர் சனாதன தர்மத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் கோவிலுக்கு செல்பவர்களாக இருந்தாலும் சரி போகாதவர்களாக இருந்தாலும் சரி சனாதனம் என்பது அவர்களின் உயிர் மூச்சாக இருக்கிறது. அதனால்தான் எதிர்ப்பும் பல மடங்கு எகிறியது.
தவிர சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திர சூட்டுக்கு, டெல்லி ஐகோர்ட் முன்னாள் நீதிபதி எஸ் என் தீங்ரா உள்ளிட்ட முன்னாள் நீதிபதிகள் 14 பேர் மற்றும் 248 பிரபலங்கள் கூட்டாக இணைந்து எழுதிய கடிதத்தில் தமிழக அமைச்சர் உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சு குறித்து சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
அதில், “தமிழக அமைச்சர் உதயநிதி சில நாள்களுக்கு முன்னர், சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிக்கவேண்டும். சனாதனம், பெண்களை அடிமைப்படுத்தியது, அவர்களை வீட்டைவிட்டு வெளியே வர அனுமதிக்கவில்லை என்று அவர் வேண்டுமென்றே கூறினார். வெறுக்கத்தக்க பேச்சு மட்டுமல்லாமல், தனது கருத்துக்கு மன்னிப்புக் கேட்கவும் அவர் மறுத்துவிட்டார். மாறாக, சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து கூறுவேன் என்று உதயநிதி தன்னை நியாயப்படுத்துகிறார். இது சனாதனத்தை நம்பும் பின்பற்றும் சாதாரண மக்களை காயப்படுத்தி உள்ளது.
இந்தக் கருத்துகள் மறுக்கமுடியாத வகையில் இந்தியாவின் ஒரு பெரிய மக்கள்தொகைக்கு எதிரான வெறுப்பு பேச்சு, பாரதத்தை ஒரு மதச்சார்பற்ற தேசமாகக் கருதும் இந்திய அரசியலமைப்பைத் தாக்குகிறது.
வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் குற்றங்களில் எந்தவொரு புகாருக்கும் காத்திருக்காமல் மாநில அரசுகள் வழக்கு தொடரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்து குற்றவாளிகள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செயல்படத் தயங்குவது நீதிமன்ற அவமதிப்பாகப் பார்க்கப்படும். இந்த விவகாரத்தில், மாநில அரசு நடவடிக்கை எடுக்க மறுத்து, நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் வகையில் செயல்பட்டிருப்பதால், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு நோட்டீஸை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் அமைச்சர் உதயநிதி தென்காசியில் நடந்த திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசும்போது, “சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று நான் கூறியதை திருத்தி வேறு விதமாக பொய்யாக பாஜக அரசு பரப்பி வருகிறது. எப்படி இருந்தாலும் சரி சனாதனம் ஒழியும் வரை எனது குரல் ஒலித்து கொண்டேதான் இருக்கும். என்ன வழக்கு போட்டாலும் அதை சந்திப்பதற்கு தயாராக இருக்கிறேன் “என்று, தான் முன் வைத்த காலை பின் வைக்கப் போவதில்லை என்பது போல் பேசி இருக்கிறார்.
“உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சால் எதிர்க்கட்சிகள் கூட்டணி கலகலத்து போய் இருக்கிறது. இது நிச்சயம் நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று டெல்லியில் மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
“தனது கொந்தளிப்பான உரையின் மூலம் நாடு முழுவதும் பேசப்படும் ஒரு இளம் தலைவராக தன்னை உதயநிதி அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது உண்மைதான். அது தமிழகத்தில் வேண்டுமானால் திமுகவுக்கோ, அதன் கூட்டணி கட்சிகளுக்கோ சாதகமாக அமையலாம் என்று நம்புவதற்கு இடம் இருக்கிறது.
ஆனால் தமிழகம், கேரளா தவிர பிற எந்த மாநிலத்திலும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதே நிதர்சனமான உண்மை. ஏனென்றால் நாட்டில் வாழும் 80 சதவீத இந்துக்களில் பெரும்பான்மையானோர் சனாதன தர்மத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக பின்பற்றியும் வருகின்றனர். அதனால்தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கரண் சிங், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே என ஒரு சில கட்சிகளின் தலைவர்கள் உதயநிதிக்கு தங்களது எதிர்ப்பை உடனடியாக பதிவும் செய்தனர்.
ஆனால் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளோ கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக கருத்து தெரிவித்து வருகின்றன. சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம்
உள்ளிட்ட பல கட்சிகள் இதுவரை வாய் திறக்கவே இல்லை. ஆதரித்தோ, எதிர்த்தோ கருத்து தெரிவித்தால் அது நமது ஓட்டு வங்கிக்கு வேட்டு வைத்து விடலாம் என்று இண்டியா கூட்டணியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் பயந்து நடுங்குகின்றன. தமிழகத்தில் மட்டும் திமுக கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளும் உதயநிதியை ஆதரிக்கின்றன. ஆனால் தமிழக மக்களிடமும் அவருடைய சனாதன ஒழிப்பு பேச்சுக்கு பரவலாக அதிருப்தியும் காணப்படுகிறது. இது நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கவும் செய்யும்.
உதயநிதி இப்படி திடீரென பேசுவதற்கு காரணம், நீட் தேர்வு ஒழிப்பில் அவர் நடத்திய போராட்டங்களுக்கு இண்டியா கூட்டணியில் உள்ள வெளி மாநில கட்சிகள் ஆதரவே தெரிவிக்கவில்லை என்பதுதான்.
தமிழகத்தில் 2021ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி 16 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். ஆனால் எந்தவொரு முதல்வரும் அதைக் கண்டு கொள்ளவே இல்லை. அவருக்கு பதில் எழுதவும் இல்லை. இதனால் அப்போதே உதயநிதி மனம் கொதித்துப் போயிருந்தார், என்கிறார்கள்.
மேலும் நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் எங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று என அவர் கூறி வந்ததை பல கட்சிகள் கேலியாகவே பார்த்தன. கடந்த 20ம் தேதி தமிழகம் முழுவதும் உதயநிதி நடத்திய திமுக மருத்துவர் அணி, இளைஞரணியின் உண்ணாவிரத போராட்டத்திற்கு மாணவர்களிடமோ அவர்களது பெற்றோர்களிடமோ எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை. அதனால்தான், நீட் தேர்வுக்கு எதிராக தமிழக மக்களின் போராட்டம் தன்னெழுச்சியாக அமையவேண்டும் என்று அவர் கவலையுடனும் கூறினார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கு ராகுல் காந்தி ஒப்புக் கொண்டதாக உதயநிதி கூறினாலும் கடந்த ஒன்னாம் தேதி மும்பையில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் இது தொடர்பாக அனைத்து கட்சிகளின் சம்மதத்தையும் பெற்று அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வைத்து விடவேண்டும் என்றும் உதயநிதி திட்டமிட்டார்.
இதற்காக தனது தந்தையும், முதலமைச்சருமான ஸ்டாலின் மூலம் அவர் காய்களை நகர்த்தவும் செய்தார். ஆனால் இண்டியா கூட்டணியில் உள்ள எந்தக் கட்சிகளும் திமுகவின் நீட் தேர்வு விலக்கு கோரிக்கைக்கு ஆதரவு கரம் நீட்டவில்லை. அந்தக் கோபத்தில்தான் நான் ஒரு பலம் வாய்ந்த கட்சியில் இளம் தலைவராக உருவாகி இருக்கிறேன் அதை யாரும் மறந்து விட வேண்டாம் என்பதை நிரூபிக்கும் விதத்தில் சனாதன ஒழிப்பு விவகாரத்தை உதயநிதி இப்போது கையில் எடுத்திருக்கிறார் என்றே கருதத் தோன்றுகிறது.
இதன் பின்னணியில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு. ஏனென்றால் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க கூட்டத்தில் தான் எழுதிய உரையைத்தான் உதயநிதி வாசித்தார். அதுவும் சனாதன ஒழிப்பு பற்றிய பேச்சு வந்த இடங்களில் எல்லாம், தான் சரியாக பேசுகிறோமா என்பதை தனது கையில் வைத்திருந்த அச்சு உரையுடன் அவ்வப்போது அவர் ஒப்பிட்டும் பார்த்துக் கொண்டார்.
சில நேரங்களில் மேடையில் இருந்த வீரமணியை பார்த்துக் கொண்டேயும் பேசினார்.
அதனால் விழாவுக்கு வந்திருந்த வீரமணியின் அறிவுரையின் பேரிலேயே அமைச்சர் உதயநிதி ஏற்கனவே திட்டமிட்டபடி இவ்வாறு கொந்தளித்து பேசியுள்ளார் என்றே கருதத் தோன்றுகிறது. ஏனென்றால் அந்த பேச்சு முழுவதும் ஒரு தி.க.காரர் மேடையில் காட்டமாக பேசுவது போலவே இருந்தது.
இதனால் உதயநிதியின் பெயர், நாடு முழுவதும் அனைவருக்கும் பரவலாக தெரிந்துவிட்டது என்பதை நன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அது எதிர்மறையாக மாறிப் போனதுதான் இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் விஷயமாக அமைந்துவிட்டது. உதயநிதி நினைத்தது ஒன்று. ஆனால் நடந்ததோ வேறு.
இது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 25 முதல் 30 இடங்களில் கூடுதல் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம், என்கிறார்கள். ஏற்கனவே இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் பாஜக கூட்டணி 310 முதல் 320 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளன. உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சு 340 இடங்கள் வரை பாஜக கூட்டணி கைப்பற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
இப்படியொரு மகத்தான வெற்றி பாஜக கூட்டணிக்கு கிடைத்தால் அதற்கான அத்தனை பெருமையும் திராவிடர் கழகத் தலைவர் வீரமணிக்கே போய் சேரும்” என்று டெல்லியின் அந்த மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
0
0