உதயநிதிக்கு துணை நிற்போம்… இந்தியா என்ற பெயரே போதுமானது ; இயக்குநர் வெற்றிமாறன்..!!

Author: Babu Lakshmanan
7 September 2023, 1:01 pm

உதயநிதியுடன் நாம் அனைவரும் நிற்க வேண்டும் என்றும், நானும் அவருடன் நிற்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கம் அன்பு நகர் பகுதியில் பியூர் சினிமா புத்தக விற்பனை நிலையத்தை இயக்குநர் வெற்றிமாறன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:- புத்தக வாசிப்பு மிகவும் அவசியமானது. எந்த காலகட்டத்திலும் நம்மை மேம்படுத்திக் கொள்ளவும், பக்குவப்படுத்திக் கொள்ளவும், அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொள்ளவும் வாசிப்பு மிக அவசியமானது.

பிறக்கின்ற எல்லோருக்கும் எல்லாமும் சமமாக கிடைக்க வேண்டும் என்பது அடிப்படை. அது பிறப்புரிமை. அதை மறுக்கின்ற எதுவாக இருந்தாலும், எந்த ரூபத்தில் இருந்தாலும் அதை எதிர்ப்பதும், ஒடுக்குவதும், வீழ்த்துவதும் சுதந்திர மனிதர்களாகிய, விடுதலை விரும்பும் மனிதர்களாகிய நம்முடைய அனைவரது கடமை. அதைப் பற்றி பேசி இருக்கக்கூடிய உதயநிதியுடன் நாம் அனைவரும் நிற்க வேண்டும்.

நானும் அவருடன் நிற்கிறேன். நானும் அவருக்கு ஆதரவு தருகிறேன். இதை நான் இந்த இடத்தில் கூறுவதற்கான காரணம் என்னவென்றால், நமக்கு இதுவரை தவறாக கற்பிக்கப்பட்டுள்ள விடுதலையிலிருந்து, வாசிப்பில் இருந்து கிடைக்கும் என நம்புகிறேன், என தெரிவித்துள்ளார்.

இந்தியா பெயர் மாற்றம் குறித்த கேள்விக்கு, எனக்கு இந்தியா என்ற பெயரே போதும். அதுவே சரியானதாக உள்ளது, எனக் கூறினார்.

ஜெய் பீம், சார்பட்டா படங்களுக்கு தேசிய விருது குறித்த கேள்விக்கு, “தேசிய விருது பற்றி எனக்கு வேறு ஒரு கருத்து உள்ளது. மற்றவர்கள் பேசுவதில் இருந்து எனக்கு வேறு விதமான கருத்து உள்ளது. நம்முடைய படத்தை ஒரு விதமான தேர்வுக்கு நாம் அனுப்புகிறோம் என்றால், அந்த தேர்வு குழுவின் முடிவுக்கு கட்டுப்படுகிறேன் என்ற ஒப்புதலுக்கு உட்பட்டு படத்தை அனுப்புகிறோம்.

அந்தப் படத்தை அனுப்பும் போதே, அதன் முடிவு என்னவாக இருந்தாலும் நாம் உடன்படுகிறோம் என்று கூறி தான் அனுப்புகிறோம். அந்தப் படத்துக்கு விருது கிடைக்கிறது, கிடைக்கவில்லை என்பது அந்த தேர்வு குழுவின் முடிவு. அந்த முடிவு படத்தின் தரத்தையோ, சமூகத்தின் மீதான பங்களிப்பையோ தீர்மானிப்பதில்லை.

ஜெய்பீம் படம் வந்த பிறகு அந்த குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எந்த மாதிரியான மாற்றங்கள் வந்திருக்கிறது என்பது இந்த படத்தின் தாக்கத்தை பொறுத்து உள்ளது.  ஒரு படத்தின் தரத்தை ஒரு குறிப்பிட்ட தேர்வு குழு தீர்மானிக்க முடியாது என்பதை என்னுடைய கருத்து.

ஒரு தேர்வு குழுவில் உள்ள ஒருவரின் விருப்பு வெறுப்பு, அந்த குழுவின் விருப்பு வெறுப்பாக  இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் இருந்து ஜூரியாக சென்றுள்ளதால் தமிழ்நாட்டிற்கு நிறைய விருது கிடைக்க வேண்டும் என்பதும் கிடையாது. அந்தக் குழு என்ன தீர்மானிக்கிறதோ, அதை பொறுத்து தான் அது. ஒரு குழு தேர்ந்தெடுக்காததாலேயே அந்த படம் சிறந்த படம் இல்லை என்று ஆகிவிடாது.

உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் என்று விலை நிர்ணயித்தது வன்முறையை தூண்டும் செயலாக உள்ளது என்ற கேள்விக்கு,  அது வன்முறையை தான் தூண்டுகிறது, எனக் கூறினார்.

விடுதலை இரண்டாம் பாகம் குறித்த கேள்விக்கு, விடுதலை இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஆரம்பத்தில் வெளியாகி விடும். கிட்டத்தட்ட பணிகள் முடிந்து விட்டது, என தெரிவித்தார்

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 489

    0

    1