ஈஷா சார்பில் திருச்சியில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டி ; சிறப்பு விருந்தினராக அமைச்சர் கேஎன் நேரு பங்கேற்பு
Author: Babu Lakshmanan9 September 2023, 12:02 pm
ஈஷா சார்பில் திருச்சியில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
ஈஷா கிராமோத்வசம் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சியில் உள்ள சந்தானம் வித்யாலையா மேல் நிலை பள்ளியில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு. கே.என் நேரு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இந்நிகழ்ச்சி தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சியில் இன்று (செப்.9) நடைபெற்றது. இதில் ‘ஈஷா கிராமோத்சவம்’குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் சுவாமி நகுஜா அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஈஷா அவுட்ரீச் சார்பில் நடத்தப்படும் 15-வது ‘ஈஷா கிராமோத்சவம்’ என்னும் கிராமிய விளையாட்டு திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் நடைபெறுகிறது. முதல்கட்ட போட்டிகள் நிறைவடைந்த நிலையில் மண்டல அளவிலான போட்டிகள் வரும் 10-ம் தேதி பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.
அதன்படி, திருச்சியில் உள்ள சந்தானம் வித்யாலையா மேல் நிலை பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கணைகள் பங்கேற்க உள்ளனர். இதில் ஆண்களுக்கான வாலிபால் போட்டியும், இருபாலருக்கான கபடி போட்டிகளும் நடைபெறவுள்ளன.
வாலிபால் போட்டியில் மொத்தம் 28 அணிகளும், கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவில் தலா 7 அணிகளும் பங்கேற்க உள்ளன.
இப்போட்டிகள் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெறும். கிராமப்புற அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகளை பார்வையிட வரும் பொதுமக்களுக்காக பிற்பகல் வேளையில் பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது. மேலும் இப்போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம்.
மண்டல அளவில் சிறப்பாக ஆடும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இறுதி போட்டியில் பங்கு பெறும் வீரர்களுக்கான உணவு, தங்குமிடம், போக்குவரத்து செலவுகள் போன்றவற்றை ஈஷா கிராமோத்சவம் குழுவே கவனித்து கொள்ளும். இப்போட்டிகளை பொது மக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம்.
இறுதிப்போட்டிகள் கோவையில் ஆதியோகி முன்பு செப்டம்பர் 23-ம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும். வெற்றி பெறும் அணிகளுக்கு சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி கெளரவிப்பார்கள். இத்திருவிழாவில் ஒட்டுமொத்தமாக ரூ.55 லட்சம் வரை பரிசு தொகைகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது, இவ்வாறு அவர் கூறினார்.