மதுபோதையில் தகராறு… தந்தையை கண்டிக்க முயன்ற மகன் ; இறுதியில் நடந்த சோகம்… கண்ணீரில் தத்தளிக்கும் குடும்பம்..!!

Author: Babu Lakshmanan
14 September 2023, 10:41 am

மது போதையில் வீட்டில் தினந்தோரும் தகராறில் ஈடுபட்ட தந்தையை கண்டிக்க முயன்ற மகன், கத்தி என்பதை அறியாமல் குத்தியதில் தந்தை பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணமேல்குடி அடுத்த வடக்கு அம்மாபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (46). கடலில் மீன் பிடிக்கும் கூலி தொழில் செய்து வந்த இவருக்கு கடந்த சில வருடங்களாக குடிபழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. தினமும் மது குடிக்கும் வேல்முருகன் குடிபோதையில் தனது வீட்டிற்கு வந்து, தன் மனைவி மற்றும் தன்னுடைய இரண்டு மகன்களுடன் அவ்வப்பொழுது வீண் தகராறில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

வேல்முருகனின் இரண்டு மகன்களும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில், மூத்த மகன் பிரேம்குமார் (24) மட்டும் தனது வீட்டிற்கு நேற்று வந்துள்ளார். நேற்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த வேல்முருகன், வழக்கம் போல் வீண் தகராறில் ஈடுபட்டு உள்ளார். தகராறில் ஈடுபட்ட தன் அப்பா வேல்முருகனை மகன் பிரேம்குமார் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால், போதையின் உச்சியில் இருந்த வேல்முருகன் தன் மகன் பிரேம்குமாரை தாக்கி உள்ளார். மேலும், சம்பவத்தின் போது இருவருக்கும் இடையே தள்ளு, முள்ளும் ஏற்பட்டுள்ளது. இரவு நேரம் என்பதால் கையில் கிடைத்தது கத்தி என்பதை அறியாத பிரேம்குமார் தனது தந்தையை குத்தியுள்ளார். கத்தியால் குத்துப்பட்ட வேல்முருகன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழவே, உடனடியாக 108-ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே வேல்முருகன் உயிரிழந்து உள்ளார். தகவல் அறிந்து மகன் பிரேம்குமார் தானாக முன்வந்து மணமேல்குடி காவல் நிலையத்தில் சென்று சரணடைந்துள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணமேல்குடி காவல்துறையினர் இறந்த வேல்முருகனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, மகன் பிரேம்குமாரை சிறையில் அடைத்தனர்.

மது பழக்கத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை கொலையானதோடு, மகன் சிறைக்கம்பிகளை எண்ணும் அவல நிலை வந்து விட்டதாக குடும்பத்தினர் கதறி அழும் காட்சி காண்போரை கண் கலங்க வைத்ததோடு, வடக்கு அம்மாபட்டிணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 392

    0

    0