2024-ல் ஒரு கோடி பெண்கள் ஓட்டு பணால்!…. திமுக அரசை எச்சரிக்கும் காங். எம்பி!
Author: Udayachandran RadhaKrishnan15 September 2023, 9:13 pm
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த முதல் நாளிலேயே அதற்கு எதிர்மறையான கருத்துகளும் வெளிவர ஆரம்பித்து விட்டன.
தர்மசங்கடத்தில் திமுக
ஒரு கோடியே 6 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே உரிமைத்தொகை வழங்கப்பட்டால் மீதமுள்ள ஒரு கோடி குடும்பத் தலைவிகளின் கோபத்திற்கு திமுக அரசு உள்ளாக நேரிடுமே?….1000 ரூபாய் கிடைக்காதவர்கள், திமுகவுக்கு எதிராக ஓட்டுகளை பதிவு செய்தால் என்ன ஆகும்?… இதை எப்படி சமாளிக்க போகிறீர்கள்? 2024 தேர்தலில் இது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்துமே? என்று பல கோணங்களிலும் கேள்விகள் எழுந்துள்ளன.
பொதுவாக இதுபோன்ற விமர்சனங்களை முன் வைத்து அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்தான் திமுக அரசை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கும்.
ஆனால் திமுக கூட்டணியில் இருப்பவர்களே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சுட்டிக் காண்பிப்பார்களா என்பது சந்தேகம்தான். இப்படி துணிச்சலாக ஏதாவது சொல்லப் போய் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாத அளவிற்கு நிலைமை சென்று விட்டால் அரசியலில் நமது எதிர்காலம் என்னவாகுமோ என்று பயந்து போய் வாயே திறக்க மாட்டார்கள். மாறாக ஆஹா, ஓஹோ பிரமாதம் என்று புகழ்ந்துதான் தள்ளுவார்கள்.
கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு
ஆனாலும் காங்கிரஸ் எம்பிக்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் ஒரு கோடி பெண்களுக்கு திமுக அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை திட்டத்தில் உள்ள மிகப்பெரிய குறைபாட்டை பொதுவெளியில் போட்டு உடைத்து இருக்கிறார்.
கார்த்தி சிதம்பரம் இதுபோல திமுக அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே முதலில் எனது தனிப்பட்ட கருத்து என்று சொன்னார். பிறகு கூட்டணி கட்சியான ஆளும் திமுக அரசுக்கு இது கடும் நெருக்கடியை ஏற்படுத்துவதை உணர்ந்து அதிலிருந்து ஜகா வாங்கினார்.
சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க இருப்பது பற்றி கார்த்தி சிதம்பரம் தெரிவித்த கருத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
யாரையும் ஒதுக்கக்கூடாது
“எந்தவொரு திட்டத்தை நடைமுறை படுத்தும்போதும் இவர்களுக்கு கொடுக்கலாம். அவர்களுக்கு கொடுக்க வேண்டாம் என்ற வகையில் விதிமுறைகள், நிபந்தனைகள் போடப்பட்டால் கண்டிப்பாக ஏமாற்றங்கள், மனவருத்தங்கள் வரத்தான் செய்யும்.. என்னை பொறுத்தவரை பொதுவாக அனைவருக்கும் கொடுப்பதற்கு முயற்சி செய்யவேண்டும்.
ஏனென்றால் அதிகாரிகளிடம் இந்த பட்டியலில் ஒருவரை சேர்க்கலாம். சேர்க்க வேண்டாம் என்ற அதிகாரம் கொடுத்தால் குழப்பம்தான் வரும். தமிழக அரசுக்கு மட்டும் இதனை சொல்லவில்லை. பொருளாதார ரீதியாக அனைத்து அரசுகளுக்கும் சொல்கிறேன்.
வசதி வாய்ந்தவர்களுக்கும், அந்த தகுதிக்குள் அடங்காதவர்களுக்கும் இந்த பலன் கிடைத்தாலும் பரவாயில்லை என நினைப்பவன் நான். யாரையும் ஒதுக்கிவிட்டு இந்த திட்டத்தை அமல்படுத்த கூடாது. அதற்கான நிதியை திரட்டுவதற்கு அரசு முயற்சி செய்ய வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்” என்று அவர் அப்போது கூறி இருந்தார்.
இந்தக் கருத்தில் நான் எப்போதும் ஒரே மாதிரியான நிலைப் பாட்டில்தான் இருக்கிறேன் என்பது போல கார்த்தி சிதம்பரம் ஒரு செய்தி நிறுவனத்துக்கு மிக அண்மையில் அளித்த பேட்டி தமிழக அரசியலில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது முதலமைச்சர் ஸ்டாலின் அரசுக்கு மறைமுகமாக சில எச்சரிக்கைகளை விடுத்திருப்பது போலவும் உள்ளது.
மறைமுகமாக திமுகவுக்கு எச்சரிக்கை
அவர் கூறும்போது, “தமிழகத்தில், குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதை காங்கிரஸ் வரவேற்கிறது. அதேநேரம் தகுதி அடிப்படையில், இத் தொகை வழங்குவதை தளர்த்தவேண்டும்.
தமிழக அரசுக்கு ஏழரை லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தாலும் கூட பரவாயில்லை. அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.
நானாக இருந்திருந்தால் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வேண்டுபவர்கள் யார் வேண்டுமானாலும் அரசிடம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருப்பேன். ஏனென்றால் நமக்கு அரசு பணம் தேவையில்லை என்று நினைப்பவர்கள் விண்ணப்பிக்க மாட்டார்கள். அதனால் தகுதி அடிப்படையில்தான் உரிமைத்தொகை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய் விடும்.
விவாதத்தை கிளப்பிய காங்., எம்பி!!
தவிர குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் இந்தத் தொகையை வழங்கும்போது அதை பெரும்பாலானவர்கள் தங்களது அன்றாட வீட்டு செலவுகளுக்குத்தான் பயன்படுத்துவார்கள். அவர்களின் சுற்று வட்டப் பகுதிகளில் உள்ள வியாபாரிகளிடம்தான் அந்தப் பணம் போகும். அதை யாரும் பதுக்கி வைக்கப் போவதில்லை.
அதனால் பணப்புழக்கம் அதிகரித்து நாலு பேருக்கு நன்மைதான் கிடைக்கும். பொருளாதார நிலையும் மேம்படும். அதேநேரம் 1000 ரூபாய் கிடைக்காதவர்கள் மத்தியில், இது அதிருப்தியையே ஏற்படுத்தும். தேர்தலில் பாதிப்பும் வரலாம்.
எனவே அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதில் நிதி பற்றாக்குறை ஏற்படும் என்றெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. இதற்கு ஏதாவது ஒரு வகையில் நிதியைத் திரட்டி மாநில அரசு சமாளித்துவிட முடியும்”என்று குறிப்பிட்டுள்ளார். கார்த்தி சிதம்பரத்தின் இந்த பேச்சு விவாதங்களை கிளப்பி விட்டுள்ளது.
“இந்த முறை சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்ற பேச்சு ஒரு பக்கம் அரசியல் களத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் விஷயத்தில் திமுக அரசுக்கு அவர் அடித்திருக்கும் எச்சரிக்கை மணி திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கும் பலத்த அதிர்ச்சியை தந்துள்ளது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
திமுக பக்கம் திரும்பிய பெண்களின் வாக்கு
“ஏனென்றால் தமிழகத்தில் சுமார் இரண்டு கோடியே 20 லட்சம் குடும்பத் தலைவிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒரு கோடியே 6 லட்சம் பேர் மட்டுமே தகுதி அடிப்படையில் உரிமைத்தொகை திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 65 முதல் 70 சதவீதம் வரை திமுக இளைஞர் அணியினரால் சேர்க்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இந்தக் குடும்பத் தலைவிகளிலும் திமுகவைச் சார்ந்தவர்களே அதிகம் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. எனவே உண்மையான பயனாளிகள் எவ்வளவு பேர் விடுபட்டனர் என்பதை துல்லியமாக கண்டறிவதும் கடினம்.
கடந்த பல தேர்தல்களாக பெண்களின் வாக்குகளை அதிமுகதான் அதிகமாக பெற்று வந்துள்ளது. ஆனால் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு சதவீத பெண்களின் வாக்குகள் திமுக பக்கம் திரும்பி விட்டது. அதை மேலும் ஐந்து சதவீதமாக உயர்த்தும் நோக்குடன்தான், 2024 தேர்தலையொட்டி உரிமைத் தொகை திட்டத்தை திமுக அரசு நடைமுறைப்படுத்துகிறது.
கூட்டணி கட்சிகள் ஷாக்
ஆனால் பண விஷயம் என்று வரும்போது இருப்பவர்கள், இல்லாதவர்கள் என்ற
பேதமின்றி அதை ஆவலோடு எதிர்பார்ப்பவர்கள்தான் மிக மிக அதிகம். அதனால் ஆயிரம் ரூபாய் கிடைக்காத குடும்பத் தலைவிகள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக வாக்களிக்கும் மன நிலைக்குத் தள்ளப்படும் வாய்ப்பு நிறையவே உள்ளது.
அந்த வாக்குகள் அதிமுக, பாஜக கூட்டணிக்கு ஆதரவாக திரும்பினால் திமுகவின் வெற்றி வாய்ப்பு கணிசமாக குறைந்து போய்விடலாம். அதனால் ஆயிரம் ரூபாய் கிடைக்காத குடும்பத் தலைவிகளின் வாக்குகளை தங்கள் பக்கம் இழுப்பதற்கும் அதிமுக, பாஜக கூட்டணி தீவிரம் காட்டும்.
அதேநேரம் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுக்கு உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்களோ என்ற அச்சம் இப்போதே வந்து விட்டது.
திமுகவுக்கு சிக்கல்
ஏனென்றால் திமுகவினர் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் எப்படியாவது வெற்றி பெற்று விடுவார்கள். ஆளும் கட்சியாக இருப்பது திமுகவுக்கு சாதகம் என்பதாலும் அதிருப்தி வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுப்பது எப்படி என்ற கலையை நன்கு அறிந்தவர்கள் என்பதாலும் இதில் பெரிய அளவில் திமுகவுக்கு பாதிப்பு வராது. ஆனால் கூட்டணி கட்சிகளோ பணத்தை தண்ணீராக வாரி இறைத்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவாகும். அதனால்தான் கார்த்தி சிதம்பரம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் கொடுங்கள் என சொல்கிறாரோ என்று கூட கருதத் தோன்றுகிறது.
இதில் திமுகவுக்கு உள்ள சிக்கல் என்னவென்றால், உரிமைத் தொகையை வழங்கியும்கூட கெட்ட பெயரை எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதுதான். ஆயிரம் ரூபாய் வழங்கியும் கூட, ஓட்டுகளை பெரிதாக அள்ள முடியாது. திமுக நினைப்பது போல் எதிர்பார்க்கும் அளவிற்கு வெற்றிகளை குவிக்கவும் முடியாது.
திமுகவுக்கு இப்படியும் ஒரு சோதனையா?
ஏனென்றால் தமிழகத்தில் யார் பிரதமர் என்ற கேள்வியே தேர்தலில் மறைந்து போய் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை யாருக்கு கிடைத்தது? யாருக்கு கிடைக்கவில்லை? என்பதுதான் விஸ்வரூபம் எடுத்து நிற்கும்.
எதிர்க்கட்சிகள் எப்படியும் இது தொடர்பாக பிரச்சனையை கிளறுவார்கள் என்று பார்த்தால், சொந்த கூட்டணியில் இருந்து கார்த்தி சிதம்பரமே இந்த கருத்தை வெளிப்படையாக சொல்லிவிட்டார். இன்னும் சொல்லப்போனால் அவர் திமுகவை எச்சரித்து இருக்கிறார் என்பதுதான் உண்மை” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
குடும்பத் தலைவிகளின் வாக்குகளை பெருவாரியாக குவித்து வெற்றியை எளிதில் பறித்து விடலாம் என்று கணக்கு போட்டு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள திமுக அரசுக்கு இப்படியும் ஒரு சோதனையா?…