திமுக அரசு அலட்சியத்தால் பயிற்சி மருத்துவர் உயிரிழப்பு.. மக்கள் உயிரோடு விளையாடாதீர்கள் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 September 2023, 3:41 pm

திமுக அரசு அலட்சியத்தால் பயிற்சி மருத்துவர் உயிரிழப்பு.. மக்கள் உயிரோடு விளையாடாதீர்கள் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிந்து என்ற மாணவி 5 ஆண்டு மருத்துவ படிப்பை முடித்து விட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சிந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று காலை அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதலில் அவரின் ரத்த மாதிரிகளை பரிசோதித்த போது அவருக்கு டைபாய்டு என்று முடிவுகள் வந்துள்ளது. மீண்டும் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்ட நிலையில் முடிவுகள் வருவதற்கு முன்னர் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து அதிக ஸ்டெராய்டு எடுத்ததே மரணத்திற்கு காரணம் எனவும், கடந்த 6 மாதமாக ஸ்டெராய்டு எடுத்து வந்த பயிற்சி மருத்துவர், திடீரென நிறுத்தியதால்தான் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் திமுக அரசின் அலட்சியமே இதற்கு காரணம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த பயிற்சி பெண் மருத்துவர் சிந்து அவர்கள் உயிரிழந்துள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பயிற்சி மருத்துவர் சிந்து அவர்களின் மரணத்திற்கு நிபா காய்ச்சல் தான் காரணம் என்ற செய்திகள் வருகின்றன. டெங்கு காய்ச்சல் பரவலை விரைந்து கட்டுப்படுத்தவும் நிபா காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பை பலப்படுத்தவும் நான் ஏற்கனவே பலமுறை எச்சரித்தும் இந்த விடியா அரசின் அலட்சியத்தால் இதுபோன்ற உயிரிழப்புகள் நடந்திருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டிக்கத்தக்கதும் கூட.

மக்கள் நலப் பிரச்சனைகளில் கவனம் கொள்ளாது மடைமாற்று அரசியல் செய்யும் இந்த அரசு மக்கள் உயிர்களோடு விளையாடாமல் இனியாவது விழித்துக் கொண்டு விரைந்து டெங்கு மற்றும் நிபா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

  • Ajith racing and movies நடிப்பிற்கு bye bye …அஜித் எடுத்த திடீர் முடிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
  • Views: - 254

    0

    0