வங்கிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை… மத்திய நிதியமைச்சருக்கு தமிழக அமைச்சர் வைத்த கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2023, 3:21 pm

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 10.65 மில்லியன் குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்தார்.

ஆயினும், மகளிரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட உரிமைத் தொகையை வங்கிக்கான சேவைக் கட்டணம், ஏற்கெனவே வாங்கிய கடன் ஆகியவற்றுக்காக சில வங்கிகள் நேர் செய்து கொள்வதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன.

இந்நிலையில், “இது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வாகும். இதுகுறித்து மாநில வங்கிகள் குழுமத்தின் கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் உரிமைத் தொகையை வங்கிகள் பிடித்தம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சில வங்கிகளில் இந்த அறிவுறுத்தல் பின்பற்றப்படவில்லை என்பது ஏற்கத்தக்கதன்று,” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்துள்ளார்.

“தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை வங்கிகள் தங்களது நிர்வாக செலவினங்களுக்கு நேர் செய்யக்கூடாது என்று மாநில அரசுக்கும் வங்கிகளுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றை மீறும் வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், மகளிர் உரிமைத் தொகையை வங்கிகள் தங்களது நிர்வாகக் காரணங்களுக்காக பிடித்தம் செய்யக்கூடாது என வலியுறுத்தி, இந்திய நிதி அமைச்சருக்குக் கடிதம் எழுதப்படும் என்றும் அவர் சொன்னார்.

  • tamannaah dialogue in odela 2 trailer trolled by netizens பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…