படுகொலையால் இந்தியா – கனடா உறவுக்கு வேட்டு? தூதரக அதிகாரியை வெளியேற்ற இருநாடுகளும் உத்தரவு.. பரபர பின்னணி!!
Author: Udayachandran RadhaKrishnan19 September 2023, 11:14 am
படுகொலையால் இந்தியா – கனடா உறவுக்கு வேட்டு? தூதரக அதிகாரியை வெளியேற்ற இருநாடுகளும் உத்தரவு.. பரபர பின்னணி!!
கனடா நாட்டில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன என நீண்டகால குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த தாக்குதல்களில் காலிஸ்தானியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறப்பட்டது.
கனடாவில் இந்து கோவில்கள் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தும் வீடியோக்களும் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தின.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் கனடாவின் சுர்ரே நகரில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற காலிஸ்தானிய தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அவர், கனடாவின் குடிமகனாகவும் இருந்துள்ளார். சுர்ரே நகர குரு நானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், இவருடைய படுகொலையில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கும் கனடா குடிமகனின் படுகொலைக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி கனடா பாதுகாப்பு முகமைகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றன என கூறினார்.
கனடாவில் குடிமகன் ஒருவர் படுகொலையில் அந்நியர் ஒருவரின் அல்லது வெளிநாட்டு அரசின் தொடர்பு இருப்பது என்பது ஏற்று கொள்ள முடியாதது என்று அவர் அழுத்தி கூறினார்.
இதனால், சில இந்தோ-கனடியர்கள் கோபத்தில் உள்ளனர் என்றும் அச்சத்திலும் உள்ளனர் என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில், உண்மை விவரங்கள் தெரிய, கனடாவுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
காலிஸ்தான் பயங்கரவாதி கொலையான விவகாரத்தில் இந்திய தூதரக அதிகாரி ஒருவரை கனடா அரசு வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது.
இதே போல கனடா நாட்டு தூதரக அதிகாரி 5 நாட்களுக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதுடன், இந்தியாவின் உள் நடவடிக்கைகளில் கனடா ஈடுபடுவதாக இந்தியா புகார் கூறியுள்ளது.