அண்ணாமலையை மாற்றினால்தான் கூட்டணி… வலியுறுத்திய அதிமுக : கோபத்தில் கொப்பளித்த ஜேபி நட்டா!!
Author: Udayachandran RadhaKrishnan23 September 2023, 1:30 pm
அண்ணாமலையை மாற்றினால்தான் கூட்டணி… வலியுறுத்திய அதிமுக : கோபத்தில் கொப்பளித்த ஜேபி நட்டா!!!
தமிழக அரசியலில் கூட்டணியில் இருக்கும் பாஜக – அதிமுக இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு – அதிமுகவினருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
ஏனென்றால், மறைந்த முன்னாள் தலைவர்கள் ஜெயலலிதா, அண்ணா உள்ளிட்டோர் குறித்து அண்ணாமலை கூறும் கருத்து, அதிமுகவினர் சீண்டியுள்ளது. இதனால், அண்ணாமலைக்கு அதிமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து, அண்ணாமலை இத்துடன் நிறுத்துக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதன் காரணமாக அதிமுக – பாஜக கூட்டணி தற்போது இல்லை என்றும், தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார்.
இதுபோன்று, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், அதிமுக – பாஜக கூட்டணியில் தற்போது எந்த பாதிப்பும் இல்லை என்றார். மேலும், எங்களுக்கு, அண்ணாமலை எல்லாம் ஒரு பொருட்டே இல்லை, மேலிடத்தில் அமித்ஷா, மோடி, ஜெபி நட்டா ஆகியோர் தான் முடிவு எடுக்க வேண்டும், அவர்கள் தான் எங்களுக்கு முக்கியம் என கூறியிருந்தனர்.
இந்த சமயத்தில், நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடியை தலைவராக ஏற்றுக் கொள்பவர்களை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், தமிழகத்தின் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்பதை என்னால் கூற முடியாது.
அது தேசிய தலைமை தான் கூற வேண்டும் என்று பேசி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால், அண்ணாமலை – அதிமுக இடையே மீண்டும் மோதலை உருவாக்கி பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழ்நாட்டில் தொடர்ந்து அண்ணாமலை – அதிமுக இடையே மோதல் உருவாகி வரும் நிலையில், திமுக முக்கிய நிர்வாகிகள் தங்கமணி, வேலுமணி, சி.வி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் பாஜக தலைவர்களை சந்திக்க டெல்லி சென்றனர்.
இதன்பின் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று பாஜக தேசிய தலைமையிடம் அதிமுக மூத்த தலைவர்கள் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஜேபி நட்டா தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்துவிட்டு ஏன் தற்போது வந்து அண்ணாமலையை மாற்ற சொல்கிறீர்கள் என கோபத்தில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக பாஜக கூட்டணி நிரந்தரமாக பிரிய போகிறது என டெல்லி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.