அண்ணே, உங்க கட்சிக்காரங்க மறந்துட்டாங்க… அமைச்சர் துரைமுருகன் பின்னால் சதி நடக்குதோ ; அண்ணாமலை சந்தேகம்..!!

Author: Babu Lakshmanan
23 September 2023, 5:16 pm

புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்து விளையாடும் அண்ணன் திரு துரைமுருகன் அவர்கள், அவசரகதியில், இந்த சிறிய தகவலைச் சரிவர கவனிக்காமல் கோட்டை விட்டுவிட்டாரே என்பது வருத்தத்தைத் தருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;-தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவரும், நீண்ட நெடிய அரசியல் அனுபவம் மிக்கவருமான, திமுக பொதுச்செயலாளர், அண்ணன் அமைச்சர் திரு துரைமுருகன் அவர்கள், இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

திமுகவினர், திமுக தலைவர் பேரனுக்கு போஸ்டர் ஒட்டுதல் முதற்கொண்டு, சாதாரண பொதுமக்கள், கடைகள் நடத்துபவர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்துதல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட எவ்வளவு பெரிய சமூக விரோதச் செயல்கள் செய்தாலும், அவர்கள் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற அறிக்கையே, வழக்கமாக அவர் பெயரில் வெளிவரும்.

அதிலிருந்து ஒரு நல்ல மாற்றமாக, எதிர்க்கட்சியாக இருந்தும், என் மீது கொண்டுள்ள அன்பினாலும், நான் தவறான தகவல்களைத் தெரிவித்து விடக்கூடாதே என்ற அக்கறையினாலும் அண்ணன் திரு துரைமுருகன் அவர்கள் இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பதாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.

நேற்றைய தினம், #EnMannEnMakkal நடைபயணத்தின்போது, மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியில், கொங்கு பகுதியில் உள்ள 24 அணைகளில், திமுக வெறும் ஐந்து அணைகளையே கட்டியுள்ளது என்று பேசியிருந்தேன். அண்ணன் திரு. துரைமுருகன் அவர்கள், திமுக நாற்பதுக்கும் மேற்பட்ட அணைகள் கட்டியிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். கொங்கு பகுதியில் ஐந்து அணைகள் என்று நான் குறிப்பிட்டுக் கூறியதை அவர் கவனிக்க மறந்துவிட்டார்.

புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்து விளையாடும் அண்ணன் திரு துரைமுருகன் அவர்கள், அவசரகதியில், இந்த சிறிய தகவலைச் சரிவர கவனிக்காமல் கோட்டை விட்டுவிட்டாரே என்பது வருத்தத்தைத் தருகிறது.

மேலும் திமுக கட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ள அணைகளில் பல, அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை என்று தமிழக அரசு இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றையும் திமுகவினர் திருத்த மறந்துவிட்டார்கள் என்பது, அண்ணன் துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களை வேண்டுமென்றே முன்நிறுத்தி பின் நின்று விளையாடுகிறார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது, என தெரிவித்துள்ளார்.

  • Vadivelu about his early life ‘இதனால்’ தான் நான் காமெடியன் ஆனேன்.. திடீரென மாறிய வடிவேலு முகம்!
  • Views: - 313

    0

    0