‘Height கரெக்டா இருக்கா..?’… பைக் வாங்குவது போல நடித்து பைக்கை திருடிய நபர்… சேஸ் செய்து பிடித்த போலீஸ்..!!
Author: Babu Lakshmanan26 September 2023, 10:01 pm
அரியலூர் அருகே பைக் ஷோரூமில் பைக் வாங்குவது போல் நடித்து பைக்கை திருடி சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் நகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே யமஹா பைக் ஷோரூம் உள்ளது. இன்று காலையில் வழக்கம்போல் ஷோரூம் திறக்கப்பட்டது. அப்பொழுது. சுமார் 29 வயது மதிக்கத்தக்க நபர், தலையில் துண்டு கட்டியபடி பைக் ஷோரூமுக்குள் நுழைந்தார்.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டரை லட்சம் மதிப்புடைய யமஹா ஸி15 பைக்கின் விலை கேட்டறிந்த அவர், அந்த பைக்கை வாங்குவது போல் நடித்துள்ளார். பின்னர் அந்த பைக்கினை ஆன் செய்வது போல் நடித்து உயரம் சரியாக உள்ளதா என்று சோதனை செய்வது போல் ஏறி அமர்ந்துள்ளார்.
திடீரென அந்த பைக்கினை ஆன் செய்து வண்டியை ஓட்டி சென்று விட்டார். இதனை சற்றும் எதிர்பாராத கடையின் ஊழியர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். உரிமையாளர் வெங்கடேஷன் அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தொடர்ந்து அரியலூர், கயர்லாபாத், உடையார்பாளையம் ஆகிய 3 காவல்துறையினர் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடினர். புது பைக்கில் அரை லிட்டர் பெட்ரோல் தான் இருக்கும் என்பதால் போலீசார் சுமார் 20 கிலோ மீட்டர் வட்டத்தில் தேட தொடங்கினர். சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் மணகெதி சுங்க சாவடியில் சரியாக பெட்ரோல் இல்லாமல் பைக் நிற்க போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவரை அரியலூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.அந்த நபர் காஞ்சிபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் என தெரியவந்தது. அவர் முன்னுக்கு பின் பேசி வருவதால் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், வீட்டிலிருந்து 2 ஆயிரம் திருடிவிட்டு வந்துள்ளார். தெரிவந்துள்ளது.
பைக்கை ஆன் செய்வது போல் நடித்து அபேஸ் செய்த நபரால் அரியலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.