பழங்குடியின பெண்களை சீரழித்த அரசு அதிகாரிகள் ; 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கோரம்… நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி தீர்ப்பு.!!

Author: Babu Lakshmanan
29 September 2023, 11:40 am

தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி மலை கிராமத்தில் பழங்குடி பெண்களை பாலியல் வன்முறை தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் தண்டனை பெற்றவர்களின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி மலை கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் பேரில், கடந்த 1992ம் ஆண்டு ஜுன் 20ம் தேதி வனத்துறையினர், போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பழங்குடியின பெண்களை வனத்துறையினர், போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

வாச்சாத்தி கிராமத்தின் நடுவில் உள்ள அந்த ஆலமரத்தின் அடியில் மக்களின் உடைமைகளை உடைத்து போட்டு, மொத்த பேரையும் தாக்கினர். 18 இளம்பெண்களை வனத்துறை அலுவலகத்துக்கு இழுத்து சென்று, கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தனர்.. பெண்களின் மார்பகங்களில் சூடு வைத்தனர். ஆண்களை இரவு முழுதும் அடித்து துன்புறுத்தினர். இந்த சம்பவம் தமிழகத்தில் ஆறாத வடுவாக மாறியது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி தர்மபுரி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதாவது, 126 பேர் வனத்துறை அலுவலர்கள், 84 பேர் காவல்துறையினர், 5 பேர் வருவாய்த்துறை ஊழியர்கள் என குற்றம்சாட்டப்பட்ட 215 பேரும் குற்றவாளிகள் என்றும், அவர்களில் 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, 12 பேருக்கு தலா 10 ஆண்டுகளும், 5 பேருக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவர்களைத் தவிர மற்றவர்களுக்கு, மற்றவர்களுக்கும் வாச்சாத்தி பழங்குடி மக்களை துன்புறுத்தியது, உடைமைகளை சூறையாடியது உள்ளிட்ட குற்றங்களின் அடிப்படையில் 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளை வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனிடையே, இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி வாத்தாச்சி கிராமத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில், வாச்சாத்தி மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார். மேலும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக 10 லட்சம் வழங்க வேண்டும் என்றும், ரூ.10 லட்சம் நிவாரணத்தில் ரூ.5 லட்சத்தை குற்றவாளிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க முடியாவிட்டால், சுயதொழில் தொடங்க நிதி ஒதுக்கவும் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் குறித்த தீர்ப்பை வாச்சாத்தி கிராம மக்கள் வரவேற்றுள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 494

    0

    0