விமானத்தை விட ஆம்னி பஸ்களில்‌ அதிக கட்டணம்…. வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு ; அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!!

Author: Babu Lakshmanan
2 October 2023, 4:35 pm

தொடர் விடுமுறை நாட்களை பயன்படுத்தி அதிக கட்டணங்களை வசூலிக்கும் தனியார் பஸ் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறி விட்டதாக பாமக தலைவர்‌ அன்புமணி ராமதாஸ்‌ குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்‌ தெரிவித்து இருப்பதாவது:- தமிழகத்தில்‌ காந்தியடிகள்‌ பிறந்த நாள்‌. பூசை விடுமுறை, தீப ஒளி திருநாள்‌ விடுமுறை ஆகியவற்றைப்‌ பயன்படுத்தி ஆம்னி பஸ்கள்‌ வரலாறு காணாத கட்டணக்‌ கொள்ளையில்‌ ஈடுபட்டிருக்கின்றன. விடுமுறைக்கு ஊருக்குச்‌ செல்ல வேண்டும்‌ என்று விரும்பும்‌ நடுத்தர மக்களை கசக்கிப்‌ பிழியும்‌ ஆம்னி பஸ்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல்‌ அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

அரசு அலுவலகங்களுக்கும்‌, கல்வி நிறுவனங்களுக்கும்‌ சனி, ஞாயிறு, காந்தியடிகள்‌ பிறந்தநாள்‌ என 3 நாட்களுக்கு தொடர்‌ விடுமுறை விடப்பட்டதால்‌ சென்னையில்‌ இருந்து சொந்த ஊர்களுக்கும்‌, சுற்றுலாத்‌ தலங்களுக்கும்‌ சென்றவர்கள்‌ இன்று மீண்டும்‌ சென்னைக்கு திரும்ப வேண்டும்‌. ஏராளமான மக்கள்‌ வெளியூர்களுக்கு சென்றிருப்பதையும்‌, அவர்கள்‌அனைவரும்‌ சென்னைக்கு திரும்புவதற்கு தேவையான அளவுக்கு அரசு பஸ்கள்‌ இயக்கப்படாததையும்‌ பயன்படுத்திக்‌ கொள்ளும்‌ தனியார்‌ ஆம்னி பஸ்‌ நிர்வாகங்கள்‌, அவற்றின்‌ கட்டணத்தை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளன.

அக்டோபர்‌ 2ம்‌ நாளான இன்று இரவு நெல்லையில்‌ இருந்து சென்னைக்கு திரும்ப அதிக அளவாக ரூ.4.460 கட்டணம்‌ வசூலிக்கப்படுகிறது. நெல்லையை விட குறைந்த தொலைவு கொண்ட மதுரையில்‌ இருந்து சென்னைக்கு அதை விட அதிகமாக ரூ.4,499 கட்டணம்‌ வசூலிக்கப்படுகிறது. கோவையில்‌ இருந்து சென்னைக்கு ரூ.4970, திருச்சியிலிருந்து சென்னைக்கு ரூ.4.410 கட்டணம்‌ பெறப்படுகிறது.

பூசை விடுமுறை நாட்களுக்காக வரும்‌ 20ஆம்‌ நாள்‌ சென்னையிலிருந்து மதுரை செல்லவும்‌,
விடுமுறை முடிந்து 24ம்‌ நாள்‌ சென்னைக்கு திரும்பவும்‌ அதிக அளவாக ரூ.4,440 கட்டணம்‌ நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நாட்களில்‌ சென்னையில்‌ இருந்து நெல்லைக்கு செல்ல ரூ.4,560, அங்கிருந்து சென்னை திரும்ப ரூ.4.620 கட்டணம்‌ வசூலிக்கப்படுகிறது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல ரூ.3.700. சென்னைக்கு திரும்ப ரூ.3,753 என்ற அளவிலும்‌. சென்னையிலிருந்து திருச்சிக்கு ரூ.4,500. அங்கிருந்து சென்னைக்கு ரூ.4,440 என்ற அளவிலும்‌ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்கள்‌ நெருங்க நெருங்க இந்தக்‌ கட்டணம்‌ இன்னும்‌ அதிகரிக்கக்‌ கூடும்‌ என்று
எதிர்‌ பார்க்கப்படுகிறது.

இதே நாட்களில்‌ சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லவும்‌, அங்கிருந்து சென்னை திரும்பவும்‌ அரசு விரைவுப்‌ போக்குவரத்துக்‌ கழகத்தின்‌ இருக்கை வசதி கொண்ட சொகுசு பஸ்களில்‌ ரூ.459, படுக்கை வசதி பஸ்களில்‌ ரூ.920 மட்டுமே கட்டணம்‌ வசூலிக்கப்படுகிறது. இதை விட தனியார்‌ பஸ்களில்‌ 10 மடங்கு வரை கூடுதல்‌ கட்டணம்‌ வசூலிக்கப்படுகிறது. இதே காலத்தில்‌ சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில்‌ செல்ல ரூ.3,419 மட்டும்‌ தான்‌ கட்டணம்‌. விமானத்தை விட ஆம்னி பஸ்களில்‌ அதிக கட்டணம்‌ வசூலிக்கப்படும்‌ போதிலும்‌, அதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும்‌ எடுக்கவில்லை. அதற்கான காரணமும்‌ நமக்கு விளங்கவில்லை. ஒவ்வொரு முறையும்‌
ஆம்னி பஸ்‌ கட்டணக்‌ கொள்ளை குறித்து தமிழக அரசை பாட்டாளி மக்கள்‌ கட்சி எச்சரித்து வருகிறது.

ஆனால்‌, அரசோ அதைப்பற்றியெல்லாம்‌ கவலைப்படாமல்‌ பெயரளவில்‌ சில பஸ்களுக்கு மட்டும்‌ சில ஆயிரங்களை தண்டமாக விதித்து விட்டு கட்டணக்‌ கொள்ளையில்‌ ஈடுபட்ட பஸ்கள்‌ மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாக கூறி விடுகிறது. சில நேரங்களில்‌ தமிழக அரசின்‌ போக்குவரத்துத்‌ துறை அமைச்சர்‌, தாம்‌ யார்‌ என்பதையே மறந்து விட்டு, “ஆம்னி பஸ்‌ உரிமையாளர்கள்‌ சேவை செய்யவில்லை. அரசு பஸ்‌ கட்டணத்தை, தனியார்‌ பஸ்‌ கட்டணத்தோடு ஒப்பிடுவது தவறு. தனியார்‌ பஸ்‌ கட்டணம்‌ அதிகம்‌ என்று தெரிந்துதான்‌ மக்கள்‌ பயணம்‌ செய்கிறார்கள்‌. அவர்கள்‌ புகாரும்‌ செய்யவில்லை. தனியார்‌ பஸ்களின்‌ கட்டணம்‌ ஏழை மக்களை பாதிக்கவில்லை” என்று விளக்கம்‌ அளிக்கிறார்‌.

இது தான்‌ தனியார்‌ ஆம்னி பஸ்கள்‌ அவற்றின்‌ விருப்பம்‌ போல கட்டணக்‌ கொள்ளையில்‌ ஈடுபடுவதற்கான துணிச்சலை அளிக்கிறது. ஆம்னி பஸ்களின்‌ கட்டணக்‌ கொள்ளை காலம்‌ காலமாகவே தொடர்கிறது. அதைக்‌ கட்டுப்படுத்த வேண்டும்‌ என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு பலமுறை ஆணையிட்டிருக்கிறது.

“ஆம்னி பஸ்களின்‌ கட்டணத்தை அவற்றின்‌ உரிமையாளர்களே நிர்ணயித்துக்‌ கொள்ள அனுமதிப்பது சட்ட விரோதமானது. மோட்டார்‌ வாகன சட்டத்தின்‌ 67வது பிரிவின்‌ படி ஆம்னி பஸ்‌ கட்டணத்தை தமிழக அரசு தான்‌ நிர்ணயிக்க வேண்டும்‌. கட்டணத்தை எவ்வாறு நிர்ணயிப்பது என்பது குறித்து அரசுக்கு பரிந்துரை அளிக்க ஐகோர்ட்டின்‌ ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில்‌ 5 பேர்‌ குழுவை அமைக்க வேண்டும்‌” என்று 2016ம்‌ ஆண்டு. நவம்பர்‌ 15ம்‌ தேதி ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. ஆனால்‌, அந்தத்‌ தீர்ப்பின்‌ மீது 7 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆம்னி பஸ்களின்‌ கட்டணக்‌ கொள்ளையை தமிழக அரசு இனியும்‌ அனுமதிக்கக்கூடாது. மக்கள்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டும்‌, இது தொடர்பான சென்னை ஐகோர்ட்டின்‌ தீர்ப்புகளைக்‌ கருத்தில்‌ கொண்டும்‌ தமிழகத்தில்‌ ஆம்னி பஸ்களின்‌ கட்டணத்தை நிர்ணயிக்க தன்னாட்சி அதிகாரம்‌ கொண்ட ஆணையத்தை ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில்‌ தமிழக அரசு அமைக்க வேண்டும்‌. ஆணையம்‌ நிர்ணயித்ததை விட அதிக கட்டணம்‌ வசூலிக்கும்‌ பஸ்களின்‌ உரிமத்தை ரத்து செய்யவும்‌, லட்சக்கணக்கில்‌ தண்டம்‌ விதிக்கவும்‌ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்‌, என குறிப்பிட்டுள்ளார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 410

    0

    0