கூட்டணி கட்சிகளின் மும்முனை தாக்குதல்! திக்கு முக்காடும் திமுக?…

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2023, 9:29 pm

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் சில வாரங்களுக்கு முன்பு வரை ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பது என்றால் மிகவும் அடக்கி வாசித்தே வந்தன. மக்களை பெரிய அளவில் பாதிக்கும் பிரச்சினைகள் என்றாலும் கூட தோழமையின் சுட்டுதல் போலத்தான் விமர்சிக்கவும் செய்தன

ஆனால் கடந்த பத்து நாட்களில் மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக கட்சிகள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் வைக்கும் கோரிக்கைகளை அழுத்தம் திருத்தமாக வைப்பதை பார்க்க முடிகிறது.

கூட்டணி கட்சிகள் அட்டாக்

அதுவும் வெவ்வேறு விதமான பிரச்சினைகளை இந்த மூன்று கட்சிகளுமே ஒரே நேரத்தில் எழுப்பி திமுகவையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் திக்கு முக்காட வைத்து இருக்கின்றன.

பண்டிகை, பள்ளி விடுமுறை காலங்களில் ஆம்னி பஸ்கள் அடிக்கும் கட்டண கொள்ளை குறித்து மார்க்சிஸ்ட் அறிக்கையாக வெளியிட்டு இதை தடுக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு திமுக அரசுக்கு உண்டு என்பதை பொதுவெளியில் போட்டு உடைத்து உள்ளது.

கே பாலகிருஷ்ணன் கண்டனம்

இது தொடர்பாக கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறும்போது, “தொடர் விடுமுறை முடிந்து மக்கள் ஒட்டுமொத்தமாகச் சென்னைக்குத் திரும்புவதால் ஆம்னி பேருந்துகளில் மிகப் பெரிய அளவில் கட்டணக் கொள்ளை நடக்கிறது. குறிப்பாக நாகர்கோவில், தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வழக்கமாக 1000 முதல் 1500 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால், இப்போது 4700 ரூபாயாக ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கோவை,மதுரை, சேலம், பெங்களூர், திருச்சி ஆகிய நகரங்களிலிருந்து பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டு 4500 முதல்
5000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு இருக்கிறது.

சாதாரண ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த கட்டண கொள்ளையை மார்க்சிஸ்ட் வன்மையாகக் கண்டிக்கிறது. ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அதன் உரிமையாளர்கள் நிர்ணயிப்பதே இதற்கு முக்கிய காரணம். இதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென நீதிமன்றங்கள் பல உத்தரவுகளை பிறப்பித்தும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த கட்டணக் கொள்ளையைத் தடுப்பதற்கும், ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசே நிர்ணயிப்பதற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளும், கட்டண கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டும். மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளை அதிகரித்து கூடுதலாக இயக்குவதற்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என கொந்தளித்து இருக்கிறார்.

நெருக்கடி கொடுத்த திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனோ வேறொரு விதத்தில் திமுக அரசுக்கு நெருக்கடி அளித்திருப்பதை காண முடிகிறது.

அவர் கூறும்போது, “பீகாரில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36 %, பிற்படுத்தப்பட்டோர் 27 %, பட்டியல் சமூகத்தவர் 20%, பழங்குடியினர் 1.6 % இருப்பது தெரியவந்துள்ளது. பொதுப் பிரிவினர் 15.5 % மட்டுமே உள்ளனர். ஆனால் அந்த பொதுப் பிரிவினர் 50% இட ஒதுக்கீட்டை அனுபவித்து வருகின்றனர்.

எனவே இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு அளிக்கும் விதமாக எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். பீகார் அரசு மேற்கொண்டதைப் போலவே தமிழக அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ளவேண்டும்.

அத்துடன் மாநிலத்தில் உள்ள எஸ்சி, எஸ்டி பிரிவினரின் இட ஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப 21% ஆக உயர்த்த வேண்டும். பீகார் மாநில அரசு மேற்கொண்டிருப்பதைப் போல எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கும் திமுக அரசு சட்டம் இயற்ற வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

திமுகவிடம் வைகோ கறார்

அதேநேரம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கோ வேறு மாதிரியான கவலை.

“நாம் இப்படியே போனால் கட்சிக்கு எதிர்காலமே இல்லாமலே போய்விடும். மகன் துரையை அரசியலுக்கு கொண்டு வந்ததும் வீணாகி விடும்” என்று நினைத்தாரோ, என்னவோ 2024 தேர்தலில் விருதுநகர், காஞ்சிபுரம், ஈரோடு என 3 எம்பி தொகுதிகளை மதிமுகவுக்கு ஒதுக்கவேண்டும், அதில் பம்பரம் சின்னத்தில்தான் நாங்கள் போட்டியிடுவோம் என்று திமுக தலைமையிடம் அவர் கறார் காட்டியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கட்சியின் அங்கீகாரத்தையும், சின்னத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காகவே
இக் கோரிக்கையை திமுக தலைமையிடம் வைகோ வைத்திருப்பதாக தெரிகிறது.
ஆனால் இதை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக் கொள்வாரா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!
­
திமுக சின்னத்தில்தான் போட்டியிடவேண்டும், விருதுநகர் தொகுதியில் உங்கள் மகன் துரையை நிறுத்துங்கள் என்று அறிவாலயம் கண்டிஷன் போட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் வைகோ மிகுந்த அப்செட்டில் இருக்கிறார், என்கிறார்கள்.

மறைமுக எச்சரிக்கை

“திமுக கூட்டணி கட்சிகளின் இந்த மூன்று தலைவர்களும் வைத்த கோரிக்கைகள் வெவ்வேறானவை என்றாலும் கூட ஆளும் திமுகவுக்கு விடுக்கப்பட்ட மறைமுக
எச்சரிக்கை போலவும் தெரிகிறது” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் ஆம்னி பஸ்களின் கட்டண கொள்ளையை தடுப்பதற்காக நீதிமன்றங்கள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் கூட அதன் மீது எந்த நடவடிக்கையும் திமுக அரசு எடுத்ததாக தெரியவில்லை என்று நேரடியாகவே மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டை வைத்துள்ளது.

ஊழலுக்கு துணை

சென்னையில் வேலைக்கு சேர்ந்து அதிக சம்பளம் பெறும் திருமணம் ஆன இளைஞர்களில் சுமார் 70% பேர் வருடத்திற்கு ஐந்தாறு முறையாவது சொந்த ஊர் சென்று திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்களில் 40% பேர் முன் கூட்டியே திட்டமிட்டு ரெயில் மற்றும் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர். மற்றவர்கள் எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை சொந்த ஊருக்கு போய் விடவேண்டும் என்று கடைசி நேரத்தில் முடிவெடுத்து திண்டாட்டத்திற்கு உள்ளாகிறார்கள். இது ஊழலை கொஞ்சமும் விரும்பாத இளைஞர்கள் தெரிந்தோ தெரியாமலோ ஊழலுக்கு துணை போக காரணமாகவும் அமைந்து விடுகிறது.

இதுபோன்ற கடைசி நேர பயணத்தை இளைஞர்கள் மட்டுமல்ல அனைவருமே தவிர்த்தால் ஆம்னி பஸ்கள் இப்படி கட்டண கொள்ளையில் ஈடுபடுவது 90 சதவீதம் வரை குறைந்து விடும் என்பது சமூக நல ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

சாதி வாரி கணக்கெடுப்பு

திருமாவளவனோ மாநிலத்தில் திமுக அரசு சாதி வாரி கணக்கை எடுக்கவேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்.
இந்த கோரிக்கையை திமுக அரசு உடனடியாக ஏற்குமா என்பது தெரியவில்லை.

வைகோவை பொறுத்தவரை திமுக சின்னத்தில் மகன் போட்டியிட்டால், அவரும் திமுக உறுப்பினராக இருக்க வேண்டிய நிலைதான் ஏற்படும். அப்படி நடந்தால், மதிமுகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடும். தவிர எதிர்காலத்தில் மதிமுகவை, திமுகவுடன் இணைக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்படும். இதற்கு பயந்து வைகோ 2024 தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேர்ந்து 4 தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதும் வெளிப்படை.

மும்முனை தாக்குதலால் முதலமைச்சருக்கு தலைவலி

மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக மூன்றும் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அறிவித்த பின்புதான் திமுக தலைமைக்கு அறிவுரை கூறுவது போல இப்படி எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.
அதாவது எங்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் நாங்கள் அதிமுக கூட்டணி பக்கம் செல்லவும் தயங்க மாட்டோம் என்பதை மறைமுகமாக உணர்த்தியும் உள்ளன” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறுவது உண்மைதான் போலிருக்கிறது!

  • ஓடிடி-யில் வெளியாகும் தீபாவளி மாஸ் ஹிட் படம்…அட எப்போங்க..!
  • Views: - 415

    0

    0