சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வாந்தி.. சீல் வைக்கப்பட்ட பாஸ்ட் புட் கடை மீண்டும் திறப்பு ; பொதுமக்கள் அதிர்ச்சி!!
Author: Babu Lakshmanan4 October 2023, 10:02 pm
கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்ட விவகாரத்தில் சீல் வைக்கப்பட்ட ஓட்டல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் 16ம் தேதி ஷவர்மா எனும் சிக்கன் உணவை சாப்பிட்ட 14 வயது மாணவி உயிரிழந்தார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் பாஸ்ட்புட், ஷவர்மா கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், கடந்த மாதம் 19ம் தேதி கிருஷ்ணகிரியில் கே.தியேட்டர் எதிரில் செயல்பட்டு வரும் சக்தி பாஸ்ட் புட் கடையில், குருபரப்பள்ளி சிப்காட்டில் செயல்பட்டு வரும் தனியார் தொலைசாலையின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த வடமாநில தொழிலாளர்கள் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டனர்.
அப்போது, 26 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் வசந்தி, நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் மற்றும் அலுவலர்கள் சக்தி பாஸ்ட் புட் கடைக்கு சீல வைத்தனர்.
இந்நிலையில், மீண்டும் அந்த கடை தற்போது வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ளது கிருஷ்ணகிரி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பாதுகாப்புதுறை அலுவலர் வெங்கடேசன் கூறுகையில், கிருஷ்ணகிரி சக்தி பாஸ்ட்புட் கடைக்கு நகராட்சி கமிஷனர் ‘சீல்’ வைத்துள்ளார். தற்போது கடை திறந்த விவரம் குறித்து முழுமையாக தெரியவில்லை. அந்த கடை தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உணவு மாதிரிகள் சேகரிக்கப்படும்,” என்றார்.