முன்னாள் முதலமைச்சருக்கு ஷாக் கொடுத்த உயர்நீதிமன்றம் : மொத்த பிளானும் போச்சு..!!
Author: Udayachandran RadhaKrishnan9 October 2023, 2:27 pm
முன்னாள் முதலமைச்சருக்கு ஷாக் கொடுத்த உயர்நீதிமன்றம் : மொத்த பிளானும் போச்சு..!!
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் முன்ஜாமீன் மனுக்களை ஆந்திர உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 3 வழக்குகளில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதாவது, அமராவதியில் உள்வட்ட சாலை, ஃபைபர் நெட், அங்கல்லு கலவர வழக்குகளில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. திறன்மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைதாகி ராஜமுந்திரி சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான என்.சந்திரபாபு நாயுடு, முதல்வராக இருந்த சமயத்தில் திறன் மேம்பாட்டு நிதியில் சுமார் 371 கோடி ரூபாய் வரையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்ற வழக்கு பதியப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்து சுமார் 16 மாதங்கள் கழித்து தான் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது எப்ஐஆர் பதியப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, சந்திரபாபு நாயுடு கடந்த மாதம் ஜூலை 8ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவரது கைது ஆந்திர மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்ந்து நீதிமன்ற காவல் விதித்து ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், ஜாமீன் கோரி ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், தன் மீதான எப்ஐஆர் சட்டவிரோதமாக பதியப்பட்டது என கூறி அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஜாமீன் வழங்க கோரியும் உயர்நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு தரப்பில் வழக்கு பதியப்பட்டது.
இந்த நிலையில், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் முன்ஜாமீன் மனுக்களை ஆந்திர உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.