ISRO உதவியுடன் கரூர் மணல் குவாரிகளில் மீண்டும் ED ரெய்டு… அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கலா?…

Author: Babu Lakshmanan
10 October 2023, 9:18 pm

தமிழக மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் இரண்டாவது முறையாக கரூரில் மீண்டும் களம் இறங்கி அவர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுவாக மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்துவது மிகவும் அபூர்வமாக நடக்கும் ஒன்று.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு கடந்த இரண்டரை வருடங்களில் மணல் கொள்ளை மிக அதிகமாக நடப்பதாகவும், அதனால் இயற்கை வளம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துகொண்டே இருந்தது.

குறிப்பாக, தமிழக அரசின் நீர்வளத் துறை சார்பில் ஆன்லைன் முன்பதிவு
மூலம் ஆற்று மணல் விற்பனை செய்யப்படுவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக அமலாக்கத் துறைக்கு புகார்கள் குவிந்த வண்ணமும் இருந்தன.

இதையடுத்து கடந்த மாதம் 12-ம் தேதி புதுக்கோட்டை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில், 8 மணல் குவாரிகள் உட்பட 34 இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனையும் நடத்தியது.

மேலும் தொழிலதிபர்களான திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை எஸ்.ராமச்சந்திரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் வீடுகளிலும் கரிகாலன், முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசனின் ஆடிட்டர் என்று கூறப்படும் சண்முகராஜ் ஆகியோரது வீடுகளிலும் சோதனையில் இறங்கியது.

இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அப்போது கணக்கில் காட்டப் படாத பணம் 15 கோடி ரூபாயும், 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அக்டோபர் 10ம் தேதியான இன்று காலை 9.30 மணி அளவில் கரூர் அருகே காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள நன்னியூர் மற்றும் மல்லம்பாளையம் ஆகிய ஊர்களில் செயல்படும் மணல் குவாரிகளுக்கு
9 கார்களில் 25க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படை வீரர்களுடன் வந்தனர். அவர்கள், அதிரடியாக மணல் குவாரிகளுக்குள் சென்று தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கடந்த மாதம் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு பின்பு இந்த மணல் குவாரிகள் இரண்டும் மூடப்பட்டன. தவிர தடையை மீறி யாரும் மணல் அள்ளி விடக் கூடாது என்பதற்காக, பெரிய அகழிகள் வெட்டப்பட்டு தடுப்பும் போடப்பட்டது. ஆனால் அதையும் மீறி சிலர் லாரிகள், டிரக் உள்ளிட்ட கனரக வாகனங்களில் இரவு, பகல் பாராமல் மணல் அள்ளி ஏற்றிச் செல்வதாக ஏராளமான புகார்கள் வந்ததால் இந்த ரெய்டில் ED அதிகாரிகள் இறங்கியதாக தெரிய வந்துள்ளது.

அவர்கள் அங்கிருந்த பணம், பில் புத்தகம் உள்ளிட்ட அலுவலக ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும் மணல் இந்த குவாரிகளில் இருந்து, கடந்த மாத சோதனைக்கு பின்னர் இதுவரை அள்ளப்பட்ட மணலின் அளவு குறித்தும் அவர்கள் கணக்கிட்டனர்.

காவிரி ஆற்றில் மணல் அள்ள தமிழக அரசு ஒதுக்கிய அளவின்படி மணலை அள்ளி இருக்கிறார்களா, அதேபோல் ஆழம் எவ்வளவு அடி தோண்டப்பட்டுள்ளது என்பதை அளவுகோல் வைத்து இன்ஜினீயர்கள் உதவியுடன் கணக்கிடும் பணியும் நடத்தப்பட்டது.

இதற்கு ISRO விஞ்ஞானிகள் கண்டுபிடித்த தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. இதற்காக பிரத்யேக மேற்கு வங்க தொழில்நுட்ப வல்லுனர்களையும் ED அதிகாரிகள் தங்களுடன் அழைத்து வந்திருந்தனர். அவர்கள் மணல் அள்ளப்பட்ட அளவை நவீன கருவிகள் மூலம் துல்லியமாக கணக்கிட்டனர்.

இதில் ISRO விஞ்ஞான தொழில்நுட்ப உதவி என்பது மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட எவ்வளவு யூனிட் மணல் அதிகமாக அள்ளப்பட்டது, கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்த இரு மணல் குவாரிகளிலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட எவ்வளவு ஆழத்திற்கு மணலை எடுத்துள்ளனர், அது ஆறுகளின் இயற்கை வளத்தை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை மிகத் துல்லியமாக கணக்கிட்டு காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் நடந்த ரெய்டின்போதே அமலாக்கத்துறை இந்த இஸ்ரோ தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் அப்போது 8 இடங்களில் உள்ள 34 மணல் குவாரிகளில் பெரிய அளவில் சோதனை நடத்தப்பட்டதால் அதை
உடனடியாக செயல்படுத்த முடியாத நிலை EDக்கு ஏற்பட்டிருந்தது.

ஆனால் கரூர் மல்லம்பாளையம், நன்னியூர் மணல் குவாரிகள் அகழிகள் வெட்டி மூடப்பட்ட பிறகும் கூட அதையும் தாண்டி மணல் கொள்ளை தினமும் நடக்கிறது என்ற புகார் வந்ததால்தான், இஸ்ரோ தொழிநுட்பத்தை இங்கு அமலாக்கத்துறை பயன்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டது, என்கிறார்கள்.

“ஏற்கனவே சோதனை நடத்தப்பட்ட இடங்களில் மீண்டும் மணல் கொள்ளை நடப்பது அமலக்கத்துறைக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து இருக்கிறது. ஆளுங்கட்சியின் ஆதரவு இல்லாமல் இத்தகைய துணிச்சலான செயலில் தனிநபர் யார் ஒருவரும் ஈடுபட முடியாது…அதுவும் அகழி வெட்டிய இடத்திலேயே மணல் கொள்ளை நடப்பது சாதாரண விஷயம் அல்ல” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் கரூர் மாவட்டம் முழுவதையும் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவரை மீறி அங்கு எதுவும் நடந்து விட முடியாது என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். இப்போது சிறையில் இருந்தாலும் கூட அவர் காட்டிய வழியையும், அவருடைய செல்வாக்கையும் பயன்படுத்திக் கொண்டு முக்கிய புள்ளிகள் மணல் குவாரிகளில் கைவரிசையை காட்டுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

தவிர 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 15 ம் தேதி கரூரில் நடந்த திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் அன்றைய கரூர் மாவட்ட பொறுப்பாளரான செந்தில் பாலாஜி பேசும்போது, “தேர்தல் வாக்குறுதியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கிறேன். அடுத்து திமுக ஆட்சி அமைந்ததும் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று, அதாவது 11 மணிக்கு முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டாரென்றால், 11.05 மணிக்கு மாட்டு வண்டியை நீங்களாகவே ஆற்றுக்கு ஓட்டுங்க. எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான். அப்படி தடுத்தால் எனக்கு போன் செய்யுங்கள். அந்த அதிகாரி இங்க இருக்க மாட்டான்” என்று ஆவேசமாக பேசியிருந்தார்.

அதற்குப் பின்பு இதை நான் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை என்று செந்தில் பாலாஜி என்னதான் மறுத்தாலும் கூட திமுக ஆட்சியை கைப்பற்றிய பின்பு அவருக்கு அமைச்சரவையில் வழங்கப்பட்ட மதுவிலக்கு மற்றும் மின்சாரத் துறைகள் இரண்டுமே கட்சியில் அவருடைய செல்வாக்கை வெளிச்சம் போட்டு காட்டுவதாக இருந்தது. ஏனென்றால் அதிமுகவிலிருந்து வந்த எந்தவொரு நிர்வாகிக்கும் கட்சியில் சேர்ந்த மூன்றே ஆண்டுகளில் இவ்வளவு பெரிய பதவிகள் வழங்கப்பட்டது இல்லை.

அதனால்தான் அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் அவரை கைது செய்தபோது நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதும் முதலமைச்சர் ஸ்டாலின் அவரை ஓடோடி சென்று பார்த்தார். தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்தாலும் கூட அவருடைய ஆதரவு பெரும்புள்ளிகள் இந்த மணல் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கருதுவதற்கு இடம் உள்ளது.

இதனால் அமலாக்கத்துறையின் விசாரணை விரிந்து கொண்டே போனால் அது இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிக்கலை ஏற்படுத்தவும் செய்யலாம். அதை நேரம் கரூர் நன்னியூர் மல்லம்பாளையம் மணல் குவாரிகளில் சரியான நேரத்தில்
ED அதிகாரிகள் ரெய்டில் இறங்கி உள்ளனர். ஏனென்றால் மழை பெய்து காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி இருந்தால் மணல் அள்ளிய பள்ளங்கள் அத்தனையும் மூடப்பட்டு இருக்கும். அதனால் எவ்வளவு மணல் கொள்ளையடிக்கப்பட்டது
என்பதை கண்டுபிடிக்க முடியாமலும் போயிருக்கும்.

இனி மற்ற மணல் குவாரிகளில் இஸ்ரோ தொழில்நுட்பத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளே அதிகம். இது திமுக அரசுக்கும் நீர்வளத் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமைச்சர் துரை முருகனுக்கும் பெரும் குடைச்சல் தருவதாக இருக்கும்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் நடந்துள்ள இந்த ரெய்ட் திமுக தலைமைக்கு நெருக்கடி தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  • Allu Arjun bouncer arrested அல்லு அர்ஜுன் பவுன்சர் திடீர் கைது… திரையரங்கில் செய்த செயல்..வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!
  • Views: - 369

    1

    0