சாம்பாரில் கிடந்த எலி… உதகைக்கு சுற்றுலா சென்ற ராணுவ வீரருக்கு அதிர்ச்சி ; தனியார் உணவகம் மீது புகார்!!
Author: Babu Lakshmanan14 October 2023, 10:08 am
உதகையில் இயங்கி வரும் அம்மாஸ் கிச்சன் என்ற பிரபல தனியார் உணவகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கிய சாம்பாரில் இறந்த நிலையில், சிறிய எலி கிடந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், விடுமுறையை ஒட்டி தனது குடும்பத்தினருடன் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது, உதகை அருகே உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் இயங்கி வரும் அம்மாஸ் கிச்சன் என்ற பிரபல தனியார் உணவகத்தில் தனது குடும்பத்தினருடன் காலை உணவருந்த சென்றுள்ளனர்.
அப்போது, சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் இறந்த நிலையில் சிறிய எலி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து ஹோட்டல் மேலாளரிடம் கேட்டபோது, அஜாக்கிரதையாக பதில் அளித்ததால் சுற்றுலாப் பயணிகள் கடும் அதிர்ருப்தி அடைந்துள்ளனர்.
இதனால், சுற்றுலாப் பயணி சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகம் மீது மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரை வீடியோ மூலம் பதிவு செய்து வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சர்வதேச சுற்றுலா தலமாக திகழக்கூடிய நீலகிரி மாவட்டத்தில் இதுபோன்ற அஜாகிரதையாகவும், காலாவதியான உணவுகள் விற்கப்படுவது தொடர்பான புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.