சந்திர பிரியங்கா பதவி விவகாரம்.. ஆளுநர் தமிழிசை ராஜினாமா செய்ய வேண்டும் : நாராயணசாமி செக்!!
Author: Udayachandran RadhaKrishnan14 October 2023, 2:39 pm
சந்திர பிரியங்கா பதவி விவகாரம்.. ஆளுநர் தமிழிசை ராஜினாமா செய்ய வேண்டும் : நாராயணசாமி பஞ்ச்!!
கடந்த 10-ஆம் தேதி, புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்வதாக, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து எனது அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். இதற்காக எனது தொகுதி மக்களிடம் நான் மனமார்ந்த மன்னிப்பினை கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் என் மக்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினராக என் பணியினை தொடர்ந்து ஆற்றுவேன் என உறுதி அளிக்கிறேன். எனக்கு இப்பதவியினைக் கொடுத்த மாண்புமிகு முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் அவருக்கு எனது ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன் வைக்கிறேன். புதுச்சேரியில் பெரும்பான்மையாக உள்ள இரு சமூகங்கள் வன்னியர் மற்றும் தலித், இச் சமூகங்களில் இருந்து வந்துள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் தம் மக்களுக்காக அயராது பாடுபட்டு வருகிறார்கள்.
அச்சமூகங்கள் மேலும் மேம்பட காழ்ப்புணர்ச்சியில்லாத அரசியலை உறுதிசெய்ய காலியாகும் இந்த அமைச்சர் பதவியை வன்னியர், தலித் அல்லது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு அளித்து நியாயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், சந்திர பிரியங்கா ராஜினாமா குறித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள், அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி விலகிய விவகாரத்தில் தனக்கும் முதலமைச்சர் ரங்கசாமிக்கும் நடந்த உரையாடலை பொதுவெளியில் கூறி, ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி செயல்பட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.