மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் சதி.. பாஜக ஆட்சியால் பெண்களின் உரிமை பறிபோகிறது : முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!
Author: Udayachandran RadhaKrishnan14 October 2023, 9:47 pm
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் சதி.. பாஜக ஆட்சியால் பெண்களின் உரிமை பறிபோகிற்து : முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டை ஒட்டி திமுக மகளிர் அணி சார்பில் இந்த மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முப்தி, சுப்ரியா சுலே உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள பல்வேறு பெண் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் மாநாட்டிற்கு வருகை தந்துள்ள பெண் தலைவர்களை வரவேற்று முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார், அப்போது பேசிய அவர், இந்திய அரசியல் வானில் கம்பீர பெண்மணியாக நின்றவர் சோனியா காந்தி.
இளம் அரசியல் ஆளுமையாக மிளிர்ந்து கொண்டிருக்கிறார் பிரியங்கா காந்தி, நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசும்போது தலைவராக மட்டுமல்ல, அண்ணனாக பெருமைப்படுகிறேன். தங்கை கனிமொழி தமிழ்நாட்டில் இந்திய சங்கமத்தை நடத்தி காட்டி உள்ளார்.
பெண் இனத்தின் எழுச்சியின் போல் திமுகவின் மகளிர் உரிமை மாநாடு நடக்கிறது. தமிழ்நாட்டின் பெண்கள் மாநாடு என்று இல்லாமல் இந்தியாவின் பெண்கள் மாநாடு போல் நடைபெற்று இருக்கிறது.
33 சதவீத இட ஒதுக்கீடு என்று கூறி பெண்களை ஏமாற்ற பாஜக சதி செய்கிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக செயல்படுத்தி இருந்தால் பாராட்டி இருக்கலாம்.
பெண்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று பாஜக ஆட்சி நினைக்கிறது. பாஜக ஆட்சியில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 2024-க்கு பிறகு மோடி ஆட்சி இருக்காது என்பதை மக்கள் முடிவு செய்து விட்டனர். ஒற்றுமையாக இருந்தால் பாஜகவை வீழ்த்தலாம் என அவர் கூறினார்.