அரசு நிலத்தில் சர்ச்? குழி தோண்டி மூடப்பட்ட சமூகநீதி… திமுக மீது பாஜக பிரமுகர் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2023, 10:40 am

தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் தாலுகா, அச்சங்குட்டம் என்ற ஊரில் திருநெல்வேலி மறைமாவட்ட அறக்கட்டளையின் (TDTA) அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி ‘அரசு நிலத்தில்’ நீண்ட காலமாக செயல்பட்டு வந்த நிலையில், பழைய இடத்திலிருந்து புதிய கட்டிடத்திற்கு சில மாதங்களுக்கு முன் இடம் பெயர்ந்தது.

பழைய பள்ளியை இடித்து விட்டு அந்த ‘அரசு நிலத்தில்’ இடத்தில் ஒரு ‘சர்ச்’ கட்டுவதற்கான முயற்சியில் அந்த பள்ளி நிர்வாகம் இறங்கியதை கண்டித்து அந்த ஊர் மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் தற்காலிகமாக அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

மேலும்,150க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயிலும் இந்த பள்ளியில், தொடர்ந்து கிறிஸ்துவ மத வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில், மத போதனைகளையும், பைபிள் படிக்க சொல்லி குழந்தைகளை வற்புறுத்தியும் வந்ததால் கொதிப்படைந்த பெற்றோர்கள் 100 பேருக்கு மேல் மதவாத நோக்கில் செயல்படும் பள்ளி நிர்வாகத்தின் போக்கை கண்டித்து தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர்.

பல்வேறு கட்ட பேச்சு வார்தைகளை மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வி துறை மற்றும் காவல்துறையினர் நடத்தியும், சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், கடந்த வருடம் குழந்தைகள் தங்களின் ஆண்டு தேர்வுகளை ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வீராணம் என்கிற ஊரில் உள்ள அரசு பள்ளியில் எழுதியது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த கல்வியாண்டில், ஒரு சில குழந்தைகள் வேறு பள்ளியில் சேர்ந்துள்ளதோடு, மீதமுள்ள 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் அந்த ஊரில் உள்ள படித்த, தகுதியுள்ள சில பெண்களின் உதவியோடு தினமும் தனியார் இடங்களில் கல்வி பயின்று வருவது அதிர்ச்சியளிக்கும் உண்மை. ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து பள்ளிக்கு வேறு ஒரு இடத்தை தாங்களாகவே முன்வந்து கல்வி துறைக்கு அளித்தும், அனைத்தையும் உணர்ந்துள்ள கல்வி துறை செய்வதறியாது திகைத்து நிற்பது கண்டிக்கத்தக்கது.

இந்நிலையில், தொடர்ந்து பல மாதங்களாக அந்த ஊர் மக்கள், மத சார்புடன் செயல்படும் அந்த TDTA பள்ளியை எதிர்த்து பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் வேளையில், தென்காசி மாவட்ட நிர்வாகமானது இந்த விவகாரத்தில் நடுநிலையோடு நடந்து கொள்ளாமல், உண்மைக்கு, நீதிக்கு, நியாயத்திற்கு, நேர்மைக்கு எதிராக செயல்பட்டு, அந்த ஊர் மக்கள் மீது பொய் வழக்குகளை ஜோடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேலும், இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையில், ‘சர்ச் விரிவாக்கத்தை’ இந்த ஊர் மக்கள் எதிர்ப்பதாக குறிப்பிட்டிருப்பது மத ரீதியாக இந்த பிரச்சினையை ஊதி பெரிதாக்குவது மாவட்ட நிர்வாகம் தான் என்பதை உணர்த்துகிறது. சட்ட விரோதமாக கிறிஸ்துவ ‘சர்ச்சை’ கட்டுவிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், சட்ட விரோத செயலை தட்டி கேட்கும் சாமான்யர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஜனநாயக விரோதம். இது வரை நான்கு பேரை கைது செய்துள்ளது காவல் துறை.

அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். நாற்பதுக்கும் மேலானோர் மீது புனையப்பட்டிருக்கும் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் தமிழக அரசு. அந்த கிராமத்து குழந்தைகளுக்கு அரசு பள்ளி ஒன்றை அமைத்து கல்வியை தர வேண்டிய அரசு இயந்திரம், அந்த மாவட்டத்தை சேர்ந்த ஆளும்கட்சியின் ஒரு சில முக்கிய புள்ளிகளின் அதிகார மையத்துக்கு தாளம் போட்டு கொண்டு கல்வியை தர மறுப்பது ஜனநாயக விரோதம். சமூக நீதி காவலர்கள் என்று பறைசாற்றிக்கொள்பவர்கள் சமூக நீதியை குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த தலைமுறைக்கு கல்வியை மறுப்பது தேச துரோக செயல். தொடர்ந்து போராடும் அந்த கிராமத்து சாதாரண மக்களை முக்கிய திமுக தலைவர்களின் அழுத்தத்தின் காரணமாக காவல் துறை அச்சுறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்களுக்கு ஆதரவாக போராடிய ஹிந்து இயக்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை காவல்துறை மூலம் அடக்க பார்ப்பது ஃபாஸிச தமிழக அரசின் அடக்குமுறையை வெளிப்படுத்துகிறது. நீதி நிலைநாட்டப்படும் வரை போராட்டம் தொடரும். விரைவில் போராட்டக்களத்தில் நான் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 357

    0

    0