கூட்டணியில் பாமகவை சேர்க்க தயங்கும் திமுக..! கை கழுவும் அதிமுக, பாஜக…?

Author: Babu Lakshmanan
16 October 2023, 9:09 pm

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தனித்தே போட்டியிடும், முதலமைச்சர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி இருப்பார் என்று அக்கட்சி சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்ற பரிதவிப்புக்குரிய நிலையை பாமகவுக்கு ஏற்படுத்தி விட்டிருக்கிறது.

பொதுவாக நாடாளுமன்றத் தேர்தல் என்றாலும் சரி, சட்டப்பேரவைத் தேர்தல் என்றாலும் சரி கடைசி நேரத்தில்தான் யாருடன் கூட்டணி என்பதையே பாமக முடிவு செய்யும்.

நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை ஒரு ராஜ்ய சபா எம்பி பதவி என்ற உத்தரவாதத்துடன் யார் அதிக எண்ணிக்கையில் எம் பி சீட்டுகளை தர சம்மதிக்கிறார்களோ அந்தப் பக்கம் போய் சேர்ந்துவிடும், அல்லது கூட்டணி பலம் மூலம் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் தென்படுகிறதோ அப்பக்கம் சாய்ந்து விடுவது பாமகவின் வழக்கம்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில்10.5 சதவீத உள் ஒதுக்கீடு செய்தால்தான் சம்மதிப்போம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிபந்தனை விதித்தார். அதை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டு தமிழக சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றவும் செய்தார்.

ஆனால் இந்த உள் ஒதுக்கீடு அதிமுகவுக்கு பாதகமாகவே அமைந்தது. ஏனென்றால் 2021 தேர்தலில் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகளும், வட மாவட்டங்களில் வன்னியர் அல்லாத இதர சமூகத்தினர் ஓட்டுகளும் அதிமுகவுக்கு எதிராக திரும்பி விட்டது. இதனால் அதிமுக கூட்டணி 30 தொகுதிகள் வரை தோல்வியை தழுவ நேர்ந்தது. இல்லையென்றால் அப்போது திமுக தனி மெஜாரிட்டி பெற்று இருக்காது.

இதுவரை பல தேர்தல்களில் திமுக, அதிமுக தலைமையில் அமையும் இரண்டு அணிகள் மட்டுமே நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மற்ற கட்சிகளின் தலைமையில் அமைந்த கூட்டணி வலிமையாக இல்லாததும் இதற்கு முக்கிய காரணம்.

இப்போதோ பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்டதால்
மும்முனைப் போட்டி என்பது உறுதியாகிவிட்டது. மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் களமிறங்கும் பாஜக கூட்டணியும் முக்கிய போட்டியாளராக உருவாகிவிட்டது.

இந்த நிலையில்தான் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாமக தலைவர்கள் சிலர் ரகசிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது 10 தொகுதிகளையும், ராஜ்யசபா எம்பி பதவி ஒன்றையும் ஒதுக்குமாறு பாமக வலியுறுத்தியதாகவும் ஆனால் அதை அதிமுக ஏற்க மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.

ஏனென்றால் பாமக கேட்ட பெரும்பாலான தொகுதிகள் அதிமுகவுக்கு கணிசமான வாக்குகள் உள்ளவை என்பதுதான். அதிலும் கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம் போன்ற தொகுதிகளையும் பாமக கேட்டு இருக்கிறது.

அதேநேரம் வன்னியர் உள் இட ஒதுக்கீடு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டாலும் கூட அந்த கோரிக்கையை நிறைவேற்றும்படி தொடர்ந்து பாமக வலியுறுத்தி வருவதால் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்கும்போது அதனால் மற்ற சமூகத்தினரின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்காமல் போய் விடும் என்று அதிமுகவின் சீனியர் தலைவர்கள் கருதுகின்றனர். இதனால்தான் பாமகவுடன் கூட்டணி என்றாலே அதிமுக பல்வேறு சந்தேக கணக்குகளை போடுகிறது.

மேலும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிதான் நிறுத்தப்படுவார் என்பது உறுதியாகிவிட்ட நிலையில்,
அதேதேர்தலில் பாமக சார்பில் டாக்டர் அன்புமணியும் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்குவதை அதிமுக விரும்பவில்லை. அதனால் பாமக தங்களது கூட்டணியில் இணையாமல் இருப்பதே நல்லது என்ற எண்ணத்திற்கு அதிமுக வந்துவிட்டது.

இந்த நிலையில் அதிமுகவிடம் இருந்து எந்த பாசிட்டிவான சிக்னலும் கிடைக்காததால் பாமகவின் அடுத்த பார்வை திமுகவை நோக்கி நகர்ந்தது. பாமகவை தங்களது கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும்போது இரண்டு பெரிய நெருக்கடிகளை சந்திக்கும் நிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தள்ளப்படுவார் என்றே சொல்லவேண்டும்.

ஏனென்றால் பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் ஒருபோதும் இடம்பெற மாட்டோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் கடந்த சில மாதங்களாக வெளிப்படையாகவே கூறி வருகிறார். இதனால் பாமக திமுக கூட்டணிக்குள் வரும்போது, விசிக அதிமுகவை நோக்கி தானாகவே நகர்ந்து விடும் என்பது நிச்சயம்.

ஆனால் இந்த விஷயத்தில் திருமாவளவனை சமாதானப்படுத்தி விடலாம் என்று நினைக்கும் அறிவாலயம் தேர்தலின்போது வட மாவட்டங்களில் பாமகவும், விசிகவும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்பதையும் உணர்ந்துள்ளது. அதன் காரணமாக கூட்டணியின் வெற்றி வாய்ப்பில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் கருதுகிறது.

அதேநேரம் வலிய வரும் பாமகவை கைவிடவும் திமுகவுக்கு மனமில்லை. டாக்டர் அன்புமணி வைத்ததாக கூறப்படும் ஐந்து எம்பி சீட், ஒரு ராஜ்யசபா எம்பி பதவி என்னும் நிபந்தனைக்கு ஒப்புக் கொள்ளாமல் மூன்று எம்பி சீட், ஒரு ராஜ்யசபா எம்பி தர முன்வந்திருக்கிறது. எனினும் 2026 தமிழக தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக திமுக தலைவர் ஸ்டாலினை முன்னிறுத்துவதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அறிவாலயம் கண்டிஷனும் போட்டு இருக்கிறது.

ஆனால் அதை நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு பேசிக் கொள்ளலாம் என்று பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. திமுகவோ இப்போதே இதுபற்றி உறுதியளிக்க வேண்டும் என்று கறார் காட்ட வேறு வழியின்றி திமுகவுடன் கூட்டணி சேர முடியாத நிலைக்கும் பாமக தள்ளப்பட்டுள்ளது.

பாமகவுக்கு எஞ்சியுள்ள ஒரே வாய்ப்பு பாஜக கூட்டணியில் இணைவதுதான். இதற்கு பாஜக தரப்பிலும் விருப்பம் தெரிவிக்கப்பட்டு வடசென்னை, திருவள்ளூர், கடலூர், சிதம்பரம், தர்மபுரி உள்ளிட்ட 12 தொகுதிகளை பாமகவுக்கு ஒதுக்க முன் வந்துள்ளது. மேலும் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மீண்டும் அமையும்போது பாமகவுக்கு ஒரு அமைச்சர் பதவியும் வழங்குகிறோம் என்றும் உறுதியளிக்கப்பட்டு இருக்கிறது.

அதேநேரம் இதே வாக்குறுதியை நம்பித்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரியில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் கூட அதிமுகவின் உதவியுடன் ராஜ்யசபா
எம்பி பதவி அன்புமணிக்கு கிடைத்தது. ஆனால் நான்காண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்று பாமக தரப்பில் குறை கூறப்பட்டிருக்கிறது.

அதற்கு, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது சுகாதாரத் துறை அமைச்சர் பதவியை வகித்த டாக்டர் அன்புமணி 2 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்தாக கூறப்படும் வழக்கு நிலுவையில் உள்ளது. அதிலிருந்து விடுபட்டு விட்டால் அவருக்கு அமைச்சர் பதவி தருவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. வேண்டுமென்றால் அந்த வழக்கு முடியும் வரை பாமக சார்பில் வெற்றி பெறும் வேறொரு எம்பிக்கு அமைச்சர் பதவியை தருகிறோம் என்று டெல்லி பாஜக மேலிடம் உறுதி கூறியிருக்கிறது.

அதேபோல் 2026 தமிழக தேர்தலில் பாஜக தனித்துத்தான் போட்டியிடும். அதனால் முதலமைச்சர் வேட்பாளர் அண்ணாமலைதான் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் இந்த இரண்டையுமே பாமக விரும்பவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் வேறு, சட்டப் பேரவை தேர்தல் என்பது வேறு. அதையும் இதையும் முடிச்சு போடக்கூடாது என்று பாமக தரப்பில் கறார் காட்டப்பட்டுள்ளது. இதனால் பாஜக உடனான கூட்டணி பேச்சும் திருப்திகரமாக முடிவடைந்ததாக தெரியவில்லை.

“உண்மையைச் சொல்லப் போனால் பாமகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதற்கு திமுக, அதிமுக, பாஜக மூன்றுக்குமே விருப்பமில்லை என்பதுதான் எதார்த்த நிலை. ஆனால் நான்கு முனை போட்டியோ 5 முனை போட்டியோ நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தால் பாமக தனித்துப் போட்டியிடுவதற்கே விரும்பும்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் திமுக கூட்டணிக்கு பாமக சென்றால், அங்கிருந்து விசிக வெளியேறி விடுவது நிச்சயம். மாநிலம் முழுவதும் பரவலாக நான்கு சதவீத வாக்குகளை வைத்திருக்கலாம் என்று கருதப்படும் விசிகவை வெளியேற்ற ஒருபோதும் திமுக விரும்பாது. அதேநேரம் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கியது தொடர்பான சர்ச்சை மீண்டும் தேர்தல் பிரச்சாரமாக உருவெடுத்தால் வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் தனது பாரம்பரிய வாக்கு வங்கியை நிரந்தரமாக இழக்க நேரிடும் என்று கருதி, பாமகவை கூட்டணியில் சேர்க்க அதிமுக பெரிதும் தயக்கம் காட்டுகிறது.

பாஜகவோ மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி அளித்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி தர மறுக்கிறது.

இப்படி எந்த கூட்டணியில் சேர வேண்டும் என்றாலும் ஏதாவது ஒரு இடியாப்ப சிக்கலில் பாமக சிக்கிக் கொள்கிறது. இதனால் 1989, 1991 நாடாளுமன்றத் தேர்தல்களில் தனித்து களம் இறங்கியதுபோல 2024 தேர்தலிலும் பாமக இறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஏனென்றால் டாக்டர் அன்புமணி கடந்த ஆண்டு பாமக தலைவராக தேர்வு செய்யப்பட்டது முதலே சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். வட மாவட்டங்களில் தனது வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக கிராமம் கிராமமாகவும் செல்கிறார். அங்கு அவருக்கு இளைஞர்களிடையே கிடைக்கும் உற்சாக வரவேற்பு, வரும் தேர்தலிலேயே பாமக தனித்து போட்டியிட்டால் என்ன என்ற சிந்தனையை எழுப்பி விட்டுள்ளது.

கடும் நான்கு முனை போட்டி இருந்தால் தர்மபுரி, கடலூர், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, ஆரணி தொகுதிகளை கைப்பற்றி விட முடியும் என்றும் அவர் நம்புகிறார். திமுக, அதிமுக, பாஜக கட்சிகளிடம் தொகுதிகளை கேட்டு பேரம் பேசிக் கொண்டிருப்பது வீணான வேலை என்றும் அன்புமணி கருதுவதாக தெரிகிறது.

பாமகவை பொறுத்தவரை, தேர்தல் நேரத்தில்தான் டாக்டர் ராமதாஸ் கூட்டணி பேச்சு வார்த்தைகளை நடத்துவார். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கும்போதே அன்புமணி பேச்சுவார்த்தையை நடத்துகிறார்.

அது அவருடைய தன்னம்பிக்கையை காட்டுகிறது. அதனால் பாமக தனித்து களம் இறங்குவதற்கான வாய்ப்புகளே அதிகம்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பாமக என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

  • Ajithkumar in GBU இன்னும் ஏழே நாள் தான்.. Good Bad Ugly செம அப்டேட்!
  • Views: - 319

    0

    0