ஆரம்பத்திலேயே சதி முறியடிப்பு… உச்சநீதிமன்றம் காட்டிய அதிரடி ; இனியும் தமிழக அரசு தாமதிக்கக் கூடாது ; அன்புமணி வலியுறுத்தல்!!

Author: Babu Lakshmanan
16 October 2023, 8:57 pm

வாச்சாத்தி வன்கொடுமை குற்றவாளிகளின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டையே உலுக்கிய வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் தங்களுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி இந்திய வனத்துறை அதிகாரி நாதன் உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்குக்கூட ஏற்காமல் தள்ளுபடி செய்திருக்கிறது. வாச்சாத்தி மக்களுக்கு நிறைவு நீதி வழங்கும் வகையிலான உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

1992-ஆம் ஆண்டு வாச்சாத்தி கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளை மூடி மறைப்பதற்காக கடந்த 30 ஆண்டுகளாக அனைத்து வழிகளிலும் முயற்சிகள் நடந்தன. பணம், பதவி, உருட்டல், மிரட்டல் என அனைத்தையும் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களின் வாயையையும், உண்மை மற்றும் நீதியின் குரல்வளையையும் நெறிக்க முயற்சிகள் நடைபெற்றன.

அவை அனைத்தையும் முறியடித்து தான் தருமபுரி முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் வாச்சாத்தி மக்களுக்கு நீதி வழங்கின. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதன் மூலம் பல்லாண்டு காலத்தைக் கடத்தலாம், தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என்று முயன்றனர். ஆனால், தொடக்க நிலையிலேயே மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்திருப்பதன் மூலம் அந்த சதியை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

எனவே, இனியும் தாமதிக்காமல் பாதிக்கப்பட்ட வாச்சாத்தி மக்களுக்கு தமிழக அரசு நீதி வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தவாறு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

  • Samantha dating Raj Nidimoru அந்த இயக்குனருடன் நடிகை சமந்தா டேட்டிங்…வெளிவந்த புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..!