லியோ படம் LCU-வில் இருக்கிறதா..? அமைச்சர் உதயநிதி போட்ட பதிவு… குஷியில் நடிகர் விஜய் ரசிகர்கள்..!!
Author: Babu Lakshmanan18 October 2023, 9:04 am
விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதிக்கு திரைக்கு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். லியோ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
லியோ படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து பல்வேறு தடங்கல்களை சந்தித்து வருகிறது. டிரெய்லர் வெளியீட்டின் போது ரோகிணி தியேட்டரில் இருக்கைகளை ரசிகர்கள் உடைத்து சேதப்படுத்தியது, இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது என பல்வேறு தடைகள் ஏற்பட்டன.
அதுமட்டுமில்லாமல், லியோ படத்திற்கு அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கு சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதிக்க வேண்டும் என்ற படக்குழுவின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. படம் வெளியாகும் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு 5 காட்சிகளை வெளியிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
பல தடைகளை தாண்டி வருவதால் லியோ படத்தின் மீது ரசிகர்களுக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதுமட்டுமில்லாமல், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் முதல் 10 நிமிடம் காட்சிகளை பார்க்க தவறி விடாதீர்கள் என்று கூறி மேலும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே உண்டாக்கியுள்ளார்.
அதேவேளையில் லியோ படம் LCU-வில் வருகிறதா..? என்ற கேள்விக்கு எல்லாம், படத்தை பார்த்தால் பதில் கிடைக்கும் என்று பொத்தாம் பொதுவாக கூறியிருந்தார் லோகேஷ்.
நாளை படம் வெளியாக உள்ள நிலையில், இன்று படத்தை பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், X தளத்தில் விடுத்த பதிவு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது பதிவில் LCU என்ற ஹேஷ்டேக் குறிப்பிடப்பட்டிருப்பதால், லியோ படம் LCUவில் வருவது உறுதியாகிவிட்டதாக ரசிகர்களை பதிவுகளை போட்டு வருகின்றனர்.