கடைசி வாய்ப்பும் போச்சு… லியோ படக்குழு கோரிக்கையை மீண்டும் நிராகரித்தது தமிழக அரசு ; அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்…!!!
Author: Babu Lakshmanan18 October 2023, 10:21 am
விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதிக்கு திரைக்கு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.
லியோ படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து பல்வேறு தடங்கல்களை சந்தித்து வருகிறது. டிரெய்லர் வெளியீட்டின் போது ரோகிணி தியேட்டரில் இருக்கைகளை ரசிகர்கள் உடைத்து சேதப்படுத்தியது, இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது என பல்வேறு தடைகள் ஏற்பட்டன.
அதுமட்டுமில்லாமல், லியோ படத்திற்கு அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கு சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதிக்க வேண்டும் என்ற படக்குழுவின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. படம் வெளியாகும் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு 5 காட்சிகளை வெளியிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் படம் வெளியாகும் நாளில் 4 மணி காட்சிக்கு அனுமதி கோரி தயாரிப்பு நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, 4 மணி காட்சிக்கு அனுமதி தர மறுத்ததுடன், 7 மணி காட்சிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக தமிழக அரசை நாடுமாறு அறிவுறுத்தியது. அதன்படி, லியோ படக்குழு வழக்கறிஞர்கள், நேற்று தலைமை செயலர் அமுதாவைச் சந்தித்து மனு கொடுத்தனர்.
இதன்மூலம்,7 மணி காட்சிக்கு அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் விஜய் ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில், லியோ படத்திற்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. லியோ படத்திற்கு காலை 9 மணிக்கான டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், 7 மணிக்கு அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.